Posts

Showing posts from December, 2018

நவ(நீத)ரஸகுண்டு..(47)

Image
இடைச்சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தனர் கண்ணனும் பலராமனும். ஒவ்வொரு நாளும் புதிய விளையாட்டு. இன்றைக்கு பார்க்கும் ஒவ்வொரு ஜீவராசி போலவும் நடித்துக்காட்ட வேண்டும். ஒருவர் நடித்துவிட்டு ஒரு விலங்கின் பெயரைச் சொல்லவேண்டும். மயில், குயில், தவளை, குருவி, கொக்கு, ஆமை, மீன் என்று ஒவ்வொன்றாய்ச் சொல்லி ஒவ்வொரு குழந்தையும் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. பலராமனின் முறை வரும்போது பாம்பு என்று சொன்னான் முந்தைய சிறுவன். ஆதிசேஷனே பலராமன் என்பதால் வளைந்து நெளிந்து நாக்கை நீட்டி அபிநயம் பிடித்துவிட்டு, உடலை வளைத்து முடிச்சுபோல் போட்டுக் காட்டினான். இப்படியெல்லாம் கூட உடலை வளைக்கமுடியுமா என்று அனைவரும் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தனர். கண்ணனின் முறை வந்தது. கன்றுக்குட்டி என்றான் பலராமன். குட்டிக்கன்றுக்குக்கு இணையாகத் துள்ளிக் குதித்த கண்ணன், யமுனைக்கு அருகில் சென்றான். கண்ணனின் திருவாயமுதுக்கு ஏங்கிய யமுனையின் உள்ளம் குளிரக் குளிர, கையிரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு கரையில் மண்டியிட்டு அமர்ந்து, கன்றைப்போலவே குனிந்து நீரில் வாயை வைத்துக் குடிக்கலானான்.  ஹே! என்று அனைவரும் குதிக்க, யமுனை பேர

நவ(நீத)ரஸகுண்டு... (46)

Image
ஒரு உருண்டை வெண்ணெய் தருகிறேன் என்று சொன்னால் போதும் நம் கண்ணன் வெட்கத்தை விட்டு கோபிகள் சொல்வதனைத்தையும் செய்வான். ஒரு தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவன் தாகம் எடுத்தததால் அங்கிருந்த வீட்டிற்குள் போனான். உள்ளே போனால் நான்கைந்து கோபிகள் சேர்ந்து பேசிக்கொண்டே மாவு இடித்துக்கொண்டிருந்தார்கள். கண்ணன் வருவதைக் கண்டு குதூஹலம் அடைந்தனர். ஒருத்தி ஜாடை காட்ட, அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். எங்க வந்த கண்ணா? தாகமா இருக்கு.. குடிக்க தண்ணி வேணும். ஒரு கோபி நீர் கொண்டுவந்து கொடுத்தாள். கண்ணனின் கண்ணாடிக் கழுத்தினுள் நீர் இறங்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். அவனை வம்பிழுக்கத் துவங்கினர். ஒருத்தி உள்ளேபோய் ஒரு பானை வெண்ணெய்யைக் கொண்டு வந்து எதிரில் வைத்தாள். கண்ணா.. வெண்ணெய் வேணுமா.. ம்ம்.. அவன் கண் பானையின் மீதே.. எங்க.. சிங்கம் மாதிரி நட.. பார்க்கலாம்.. மிக அழகாக கால்களை மாற்றி மாற்றி வைத்து சிங்கம்போல் நடக்க, சிங்கமே வந்துவிட்டதோ என்னும்படியாக இருந்தது. கண்ணா.. யானை மாதிரி நடடா.. இப்ப நடந்ததுக்கு வெண்ணெய் கொடுங்க.. கையை நீட்டினான்.  ஒரு உருண்டையை வைத்ததும் விழுங்கிவிட்டு,  யானை மாதிரி ந

நவ(நீத)ரஸகுண்டு... (45)

Image
கண்ணனும் பலராமனும் காட்டில் ஒருவர் தோள்மேல் ஒருவர் கையைப் போட்டுக்கொண்டு மெல்ல நடந்துகொண்டிருந்தார்கள்.  பலராமன் குறுகுறுவென்று கண்ணனைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அண்ணா.. என்னவோ சொல்ல நினைக்கறீங்க.. சொல்லுங்க.. நான் நினைச்சாலே உனக்குத் தெரிஞ்சுடறதே கண்ணா.. சும்மா சொல்லுங்கண்ணா. மலையெல்லாம் தூக்கறயே கண்ணா.. எல்லாரும் உன்னை பகவான்னு தெரிஞ்சுப்பாங்களே.. ஹாஹா.. அதனால என்ன? அப்றம் எப்படி அவங்கவங்க வேலையைப் பார்ப்பாங்க? வைகுண்டம் மாதிரி உன்னையே பார்க்க ஆரம்பிச்சுடுவாங்களே.. அண்ணா.. இந்தப் பசங்க எதிரதானே மலையைத்தூக்கினேன். காளியனை அடக்கினேன். எவ்வளவு அசுரவதம்..இன்னும் எவ்வளவோ பண்ணிருக்கோமே. ஆனா.. பாருங்க.. அவங்க தூரத்தில் விளையாடறாங்க.  அதான் எப்படின்னு புரியல கண்ணா..  அவங்களுக்கு நான் பகவான்னு தெரியும். வேண்டியதெல்லாம் தருவேன்னு தெரியும். கஷ்டம் வந்தா காப்பாத்துவேன்னும் தெரியும்.  ம்ம் மத்த ஜனங்களா இருந்தா அந்த வரைக்கும் வேணுங்கும்போது மட்டும் வருவாங்க. மற்ற நேரத்தில் என்னைத் திட்டக்கூட தயங்கமாட்டாங்க.. ஆனா, இந்த இடைக் குலம் மட்டும் நான் விரும்பியபடி இருக்கணும்னு நினைச்சு, என்னுடைய சௌகர்யத

நவ(நீத)ரஸகுண்டு..(44)

Image
கண்ணா, அந்த மணையை எடுத்துண்டு வா.. அன்னையின் ஆணையை கர்ம சிரத்தையாக நிறைவேற்ற, மணையை மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கிக்கொண்டு ததகா பிதகாவென்று நடந்து வந்து அம்மாவின் முன்னால் குனிந்து மணையைக் கீழே வைத்தான். ஏவலுக்கு வீடு நிறைய ஆள் இருந்தாலும், இவன் என்ன செய்கிறான் என்று பார்க்கவே அவனைக் கொண்டுவரச் சொன்னாள் யசோதா. கண்ணன் என்ன செய்தாலும் அழகு. கண்கொட்டாமல் ரசித்தவள், குனியும்போது முதுகைப் பார்த்தாள். என்னடா இது.. மஞ்சள் மஞ்சளா இருக்கு. என்ன பண்ணின? எங்க போன சொல்லு.. திருதிருவென்று விழித்தவன் சமாளித்தான். அது ஒன்னுமில்லம்மா. சொல்லுடா என்ன ஆச்சு.. உன் முதுகில் ஏது மஞ்சள்? கீறலா வேற இருக்கு.. நான்தான் காலைல அலங்காரம் பண்ணிவிட்டேன். எங்கபோய் இப்படி அப்பிண்டு வந்திருக்க? அவனுக்கு ஏனோ இன்று கோபிகளைக் காட்டிக்கொடுக்க விருப்பமில்லை. அம்மா விடாப்பிடியாகக் கேட்கிறாள். வேறு வழியில்லை. அவனுக்கோ பொய் சொல்லிப் பழக்கமே இல்லை. மாமிகள்ளாம் சந்தைக்குப் போறச்சே கூப்பிட்டா மா.. சாண்பிள்ளைன்னாலும், ஆண்பிள்ளை.. துணைக்கு வாடான்னா.. சரி.. ரெண்டு மிட்டாய் கிடைக்குமேன்னு நானும்  கூடப்போனேன். மஞ்சள் வாங்கறச்சே என் மேல

நவ(நீத)ரஸகுண்டு.. (43)

Image
கோகுலத்தில் புதிதாக வாழ்க்கைப்பட்டு வந்திருந்தாள் ஒரு பெண். அவளை அவளது மாமியார் கண்ணனின் கண்ணில் படாமல் பாதுகாத்துவந்தாள். ஐந்தே வயதான கண்ணனைக் கண்டாலே போதும், வயது வித்யாசமில்லாமல், ஆண், பெண், விலங்குகள் என்று அனைவரும்‌ மயங்கும் ரூபமல்லவா?  ஒருநாள் அந்தப் புதுப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு நாள் முழுதும் சுற்றிவிட்டு மாலை அழைத்துப்போய் வீட்டில் விட்டான் கண்ணன். அதற்கு அந்த மாமியார் கோபி வைத்த புகாரை விசாரித்தாள் யசோதை. கண்ணா.. என்னடா உன்னைப் பத்தி என்னென்னமோ சொல்றாங்க.. என்னம்மா.. நேத்திக்கு நம்ம ஊருக்கு வந்த புதுப்பெண்ணை சாயங்காலம்தான் வீட்டில் விட்டயாமே. நாள் முழுக்க எங்கடா போன? யாரு அவங்க மாமியார் சொன்னாங்களா? ஆமாண்டா.. அவங்கவீட்டுப் பொண்ணையே எங்க போனன்னு கேக்க வேண்டியதுதானேம்மா.. இல்லன்னா அவளை இங்க கூட்டிண்டு வந்தா நீங்க கேப்பீங்கல்ல..  அதானே.. அவங்க அதைச் செய்யமாட்டாங்கம்மா.. அவளைக் கேட்டா தெரிஞ்சுடும். எது நிஜம் எது பொய்னு..  சரி.. என்ன நடந்தது கண்ணா.. நீதான் சொல்லேன். அம்மா.. அவங்க ஊருக்குப் புதுசு. நதில தண்ணியெடுக்க வந்தாங்க. அவங்க ஊர்ல நதியெல்லாம் இல்லியாம். தண்ணியப் பாத்ததும் குஷி

நவ(நீத)ரஸகுண்டு.. (42)

Image
எப்பப் பார்த்தாலும் வெண்ணெய் வெண்ணெய்தானா கண்ணா? பசிச்சாக்கூட மம்மு கேக்காம வெண்ணெய் கேக்கறயே.. வெண்ணெய் ரொம்ப பிடிக்கறது மா.. அதுசரி டா.. அதுக்காக எப்பவுமே வெண்ணெய்யா.. அது ஏன் அவ்ளோ பிடிக்கறது? வெண்ணெய் எதிலேர்ந்து மா வருது? பால்லேர்ந்து.. எப்படி எடுப்பீங்க.. பாலக் காய்ச்சி, உறை குத்தினா தயிராகும். அப்றம் அதைக் கடைஞ்சா வெண்ணெய் வரும். நீதான் பாக்கறயே தினமும். ஆமாம்மா.. பால் கொதிச்சு, அப்றம் தயிரா மாறி கடையும்போது பானைக்குள்ள சுழண்டு சுழண்டு எவ்ளோ கஷ்டப்பட்டு, ஸாரமா வெண்ணெய் குடுக்கறது.   அதுவும் என் பேரைச் சொல்லிண்டே வேற கடையறீங்க.. வெண்ணெய் வெள்ளேர்னு சுத்தமா இருக்கு.. தளதளன்னு வளைஞ்சு குடுக்கறது. பளபளன்னு இருக்கு. தொட்டா அப்டியே ஒட்டிக்கறது. வாயில் போட்டா கரைஞ்சு உள்ள போயிடறது.  பால் அவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ அருமையான வெண்ணெய் குடுக்கும்போது அதை நான் சாப்பிடாட்டா அதைக் கறந்த மாடும் சரி, பாலும் சரி, வருத்தப்படும் மா.. அம்மா.. ஒரு ரகசியம் சொல்லவா.. என்னடா.. இந்த வெண்ணெய் மாதிரி உருகற மனசுள்ளவாளையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. போடா.. நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு சொல்ற.. ஒன்னும் புரியல. மாட

நவ(நீத)ரஸகுண்டு.. (41)

Image
கண்ணா! என்னம்மா இன்னிக்கும் புகாரா.. ச்சேச்சே.. புகாரெல்லாம் இல்ல தங்கம். உன் மேல யாரையாவது புகார் படிக்க நான் விட்டுடுவேனா?  இப்படித்தான் சொல்றீங்க. ஆனா யார் எது சொன்னாலும் நம்பறீங்க.. அதிருக்கட்டும்டா.. நாளைக்கு எதுக்கு ஊர்ப்பட்ட சாதம் கட்டச் சொன்ன? புளியோதரை, சக்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம்,  தயிர்சாதம் னு எவ்ளோ கொண்டு போவ? உன்னால் எப்படி அவ்ளோ சாப்பிட முடியும்? யாருக்காவது கொடுக்கப்போறியா? அம்மா.. நம்ம இடைச்சேரி பசங்களுக்குத் தான் மா.. அவங்களும் வீட்டிலேர்ந்து கொண்டுவருவாங்களே டா.. அம்மா.. நிறைய பசங்க தினமும் பழைய சாதமும் ஊறுகாயும் கொண்டு வராங்க. ஒரு நாளாச்சும் நல்லா சாப்பிடட்டுமேன்னுதான் எல்லாரையும் ஏதாவது கொண்டுவரச் சொல்லிருக்கேன். நான் கொண்டுபோறதை  எல்லாருக்கும் கொடுப்பேன்மா. முடிஞ்சவங்க விதம்விதமா கொண்டுவருவாங்க. முடியாதவங்க தொட்டுக்க ஊறுகாய் மட்டும் கொண்டுவருவாங்க.. பாவம்மா.. பசங்க.. அதனால்தான். நீங்க என் நண்பர்கள் எல்லாருக்கும் சேர்த்து சாப்பாடு கொடுக்கறீங்களாம்மா? கண்டிப்பா தரேன் தங்கம். கண்ணனின் நெற்றியில் முத்தமிட்டாள் யசோதா. Back to Index

நவ(நீத)ரஸகுண்டு... (40)

Image
சிறு குழந்தைகளுக்கு கண்ணாடி காட்டும் வழக்கம் இல்லை. கொஞ்சம் வளர்ந்தபின்பே காட்டுவார்கள். ஒரு வயதாகிவிட்டபடியால், ஒருநாள் கண்ணனை மிக அழகாக அலங்காரம் செய்தபின் கண்ணாடி காட்டினாள் யசோதை. கண்ணனுக்கு கண்ணாடியில் தெரிவது  யாரென்றே தெரியவில்லை. அம்மா... அம்மா.. இது யாரும்மா.. ரொம்ப அழகா இருக்கான்மா இந்தப் பையன்.. ஒன்றும் சொல்லாமல் யசோதை சிரித்தாள். அம்மா.. இந்தப் பையன் நான் பண்றதெல்லாம் பண்றாம்மா.. அம்மா.. இவனை என்கூட விளையாட வரச் சொல்லும்மா.. என்றவன் கண்ணாடியிலிருந்த பிம்பத்தைப் பார்த்து வா வா என்று கைசைக்க, அதுவும் கையசைத்தது.  அம்மா... இவன் என்னை கூப்பிடறான்மா.. நான் போகட்டுமா என்றான். கண்ணா.. அது நீதான்டா.. இதோ பாரு என்று தன் முகத்தைக் காட்ட,  ஹை இன்னொரு அம்மா..  என்று குதித்தான் கண்ணன்.. சரிதான்.. இன்னிக்கு அழகு பார்த்தது  போதும்.. த்ருஷ்டி படும்.. வா.. என்று கண்ணாடியை உள்ளே வைத்துவிட்டு கண்ணனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனாள் யசோதை. Back to Index

நவ(நீத)ரஸகுண்டு.. (39)

Image
கண்ணனின் குட்டிக் கால்களுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டே  கேட்டாள் யசோதை.. கண்ணா, அவ்ளோ பெரிய உரலை எப்படி இழுத்துண்டு போன? மரமெல்லாம் உடைஞ்சு விழுந்துடுச்சே.. அம்மா.. நீங்க ஏம்மா அதில் கட்டினீங்க? நியாபகம் வந்ததும்  உதட்டைக் கடித்து அழத்துவங்கினான் கள்ளன்.  ச்சோ..ச்சோ.. சரி சரி.. அம்மா தப்பு போட்டுக்கறேன்.. இனிமே கட்டமாட்டேன். நீ சொல்லு அந்த உரலை எப்படி இழுத்துண்டு போன? நான் எங்க இழுத்துண்டுபோனேன்? அது உடைஞ்சுபோன உரல். டம்னு விழுந்த வேகத்தில் உருள ஆரம்பிச்சுது. என்மேல் ஏறிடப்போறதேன்னு பயந்துபோய் குடுகுடுன்னு தவழ்ந்து வேகமா போனா.. அதுவும் பின்னாடியே வருது. மரம் ஏற்கனவே ரொம்ப நாளத்து மரம். உரல் லேசா இடிச்சது. அப்ப நல்லா காத்தடிச்சதும் விழுந்துடுச்சு. நான் ஒன்னுமே பண்ணலம்மா.. நம்புங்கம்மா.. அதுசரி. மரத்திலேர்ந்து ரெண்டு பேர்.. அம்மா.. நீங்க ரொம்ப நேரமா எண்ணெயைவே தேச்சுண்டு... எனக்கு பசிக்கறது... வெண்ணெய் குடுங்க.. இதோ ஆச்சுடா.. என்று கேட்ட கேள்வியை மறந்து வேகமாய் மேல் நீரை ஊற்ற ஆரம்பித்தாள் யசோதை. Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(38)

Image
மடியில் தலைவைத்துக் கொண்டிருந்த கண்ணனின் முதுகைத் தடவிக்கொண்டே. கண்ணா.. என்று யசோதை கூப்பிட, கண்ணன் எச்சரிக்கையானான். அம்மா... என்னடா.. நீங்களும் தினமும் ஒரு புகாரை விசாரிக்கறீங்க. நான் எதுவும் பண்ணல.. இந்த மாமியெல்லாம்தான் நான் அவங்க வீட்டுக்கு வரணும்னு ஆசைப்பட்டு கூப்பிடறாங்கன்னு சொன்னா நம்பமாட்டேங்கறீங்க.. அவங்க கிடக்கறாங்க.. நான் உன்னைத்தாண்டா நம்பறேன்..  சரிமா.. நான் வேணா நாளைக்கு முழு நாளும் வெளிலயே போகாம உங்ககூடவே இருக்கேன். என்ன நடக்கறதுன்னு பாக்கறீங்களா.. ம்ம்.. சரி. தூங்கு.. மறுநாள் காலை முதல் கண்ணன் வெகு சமர்த்தாக அம்மாவுடனேயே பேசிக்கொண்டு, அவளுக்கு சிற்சிறு உதவிகள் செய்துகொண்டு அவள் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான். உச்சி வேளையானதும் ஒரு கோபி வந்தாள். அவளைக் கண்டதும் கண்ணன் ஒளிந்துகொண்டான். என்னம்மா.. யசோதை கேட்க.. பருப்பு தீர்ந்துடுச்சு.. அதான் வாங்கிண்டு போலாம்னு வந்தேன். என்று சொன்னவளின் கண் வீடு முழுவதும் தேடியது. யசோதை ஒரு படி பருப்பைக் கொண்டுவந்து கொடுத்தாலும் அவள் போகாமல் தயங்கியபடி நிற்க, இன்னொருத்தி வந்தாள்.  அம்மா கொஞ்சம் வெல்லம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.. அவளுக்

நவ(நீத)ரஸகுண்டு.. (37)

Image
நெய்விட்டு நன்றாகப் பிசைந்த அன்னத்தை உருட்டி உருட்டிக் கைகளில் போட பலராமனும் கண்ணனும் மாற்றி மாற்றி வாங்கி உண்டுகொண்டிருந்தனர். அளவு தெரியாமல் உணவு உள்ளே போகும்‌ நேரமிது.   கண்ணா.. நீ வெண்ணெய் திருடறது பத்தாதுன்னு இந்த பசங்களையெல்லாம் வேற கூட்டிண்டுபோறயாம். வெண்ணெய்யெல்லாம்தான் நானே தரேனே. எதுக்குடா இப்படி பண்ற? வாயிலிருந்த சாதத்தை துப்பவும்‌முடியாமல், விழுங்கவும் முடியாமல் பலராமன் திருதிருவென்று விழிக்க, கண்ணன் அவனைக் கண்ணால் சும்மாயிரு என்பதாக ஜாடை காட்டிவிட்டு அம்மாவைப் பார்த்தான். அம்மா.. என்னைப் பாருங்க.. நானா திருடறேன்? அந்தப் பசங்கல்லாம் அவங்களே எங்க வீட்டுக்கு வா கண்ணா... எங்க வீட்டுக்கு வா கண்ணான்னு கையைப் பிடிச்சு இழுத்துண்டு போயிடறாங்க. அவங்க வீட்டில் வெண்ணெய்ப்பானை இருக்கற இடம் எனக்கெப்படிமா தெரியும்? அந்த பசங்களேதான் எங்க வீட்டு வெண்ணெய் சாப்பிடு கண்ணான்னு எடுத்துக் குடுக்கறாங்க.. அத்தோட விடறாங்களா? சில சமயம்  வைகுண்டம் தரேன்னு சொல்லு.. இல்லன்னா அம்மாகிட்ட மாட்டிவிடுவேன்னு வேற பயமுறுத்தி வைகுண்டம் வாங்கிக்கறாங்க.. ஆனா, திருட்டுப்பழி எம்மேல.. போங்கம்மா.. எனக்கு சாதம் போதும்

நாமச்சுவை..(14)

Image
விஷய விற்பனையோ வீட்டு வேலையோ அனைத்தும் உன் பெயர் சொன்னால் தானாய் நடக்கின்றன. மனம் சிலையாய் நிற்கிறது  உயிர்ச்சிலையான உனை  நினைந்து.. <<Previous     Next>> Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(36)

Image
கண்ணா.. நேத்திக்கு சின்னதா ஓட்டை போட்ட பானையைக் கொண்டுவந்து காண்பிச்சு சொல்லிட்டுப்போறாங்கடா.. எதுக்குடா அவங்க கிட்டல்லாம் வம்பு வளக்கற? பாவம், அவங்களே தினமும்  பாரத்தை சுமந்த்துக்கிட்டு‌ நடந்தே மதுரா வரை போய் பால், தயிர் வித்துட்டு வராங்க.. அம்மா.. நீங்களே சொல்றீங்க.. பாரத்தை சுமந்துகிட்டு அவ்ளோதூரம் நடக்கறாங்க பாவம்னு... பாரத்தைக் குறைக்கறதுதாம்மா என் வேலை. அதுவும் அவங்க என் பேரைச் சொல்லிண்டேதான் நடக்கறாங்க. அவங்க பாரத்தைக் குறைக்காம எப்படிமா இருப்பேன்?   அதான் சின்ன கல்லால ஓட்டை போட்டேன். மொத்த பாரமும் இறங்கிடுச்சு.. அவன் சொல்வது புரியாமல் யசோதை விழிக்க, அவனோ  தூக்கம் வருதும்மா  என்று அவள் மடியில் ஏறி உட்கார்ந்தான். Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(35)

Image
அம்மா.. அம்மா..  என்று உரக்க கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடிவந்தான் கண்ணன். நான்கு கட்டு தாண்டி உள்ளே இருக்கும் யசோதைக்கு அவன் தெருவாசலில் நின்று மெதுவாய்க் கூப்பிட்டாலும் தெளிவாய்க் கேட்கும். இருந்தாலும் பதில் குரல் கொடுக்காமால் மெதுவாக வந்தாள். அதற்குள் இன்னும் பல முறை கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்தான். கண்ணனின் குரலில் அம்மா அம்மா என்ற அழைப்பு பேரானந்தம் தரும் யசோதைக்கு.  என்னடா.. அம்மா.. அந்த அம்சுவோட அம்மா வந்து புகார் சொல்வாங்க. எதையும் நம்பாதீங்க.. முன் ஜாமீன் எடுப்பதுபோல் சொன்னான். ஏண்டா.. நீ என்ன பண்ணின? அம்மா.. அவங்க வீட்டு அம்சுவே வெண்ணெயை எடுத்துச் சாப்பிட்டான் போல. ஆனா, அவங்க நான்தான் சாப்பிட்டேன். ஆனா கையும் களவுமாப் பிடிச்சதும் அம்சுவா மாறிட்டேன்னு சொல்றாங்கம்மா.. இந்த ஊர் இடைச்சிகளுக்கெல்லாம் கண்ணன் பைத்தியம் பிடிச்சிருக்குடா. அதான் யாரைப் பார்த்தாலும் கண்ணன்னு சொல்றாங்க.. அவ வரா.. நீ உள்ள ஓடு.. கைகால் அலம்பு.. நான் பேசிக்கறேன். Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(34)

Image
கண்ணா..  ஆனாலும் ஒரு அண்டா அக்காரவடிசல் சாப்பிட்டன்னு சொல்றாங்க.. ஆனா, என்னால் நம்பமுடியல. என்னதான் நடந்தது? கலகலவென்று சிரித்தான் கண்ணன். அம்மா.. உங்களுக்கே நம்ப முடியலல்ல? அப்றம் என்ன? அதுசரிடா.. அவங்க வீட்டில் என்னதான் நடந்தது? அம்மா.. அக்காரவடிசல் பண்ணிருக்கேன் சாப்பிடறியான்னு கேட்டாங்க.. சரி விளையாடி விளையாடி பசிக்கறமாதிரி இருக்கேன்னு உள்ள போனேன்..  அவங்க ஒரு குட்டி வெங்கலப்பானைல பண்ணிட்டு, ஒரே ஒரு கரண்டி கொண்டுவந்து போட்டாங்க. அவ்ளோதான் பானை காலி.  அதுக்கு பன்னண்டு திருவோணத்துக்கு சேர்த்து பண்ணினேன்னு சொல்றாங்க.. என்னோட குட்டி வயத்துக்குகூட நிறையல. ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு போட்டதை சாப்பிட்டு வந்துட்டேன்மா.. பசியைக் கிளப்பிவிட்டுடுச்சு.. சாப்பிட ஏதாவது கொண்டுவாங்க.. ஒரு குட்டி வெங்கலப்பானைல கிளறிட்டு, என்னமா பொய் சொல்றா.. இரு தங்கம். உனக்கு நான் மம்மு கொண்டு வரேன்.  அம்மா.. அப்படியே வெண்ணெய்யும்.. சரிடா.. Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(33)

Image
கம்சனின் அரண்மனையில் வேலை செய்பவன் ஒருவன், கோகுலத்தில் ஒரு வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தான். அவன் வந்ததிலிருந்து கண்ணன் கண்ணன் கண்ணன் என்பதைத் தவிர வேறெதையும் கேட்கவில்லை. அவனுக்கு கண்ணனைப் பற்றி கம்சனிடம் சொல்லலாம் என்ற எண்ணம் எழுந்தது. அன்றிரவு அவன் உறங்கும்போது அவன் வாயில் கொஞ்சம் வெண்ணெயையும் ஒரு கொத்து கட்டெறும்பையும் போட்டுவிட்டு வந்துவிட்டான் கண்ணன். விருந்தாளியாய் வந்தவன் சாப்பிடுவதற்குகூட வாயைத் திறக்கமுடியவில்லை. பூசணிக்காய் போல் வாய் வீங்கிப்போய் உடனே ஊருக்குக் கிளம்பிவிட்டான். புகார் யசோதையிடம் வந்தது.  யசோதைக்கு சுருக்கென்றது. புகார் சொன்ன கோபியைத் திட்டி அனுப்பி விட்டாள்.  மாலையானதும் சற்று நந்தவனத்தில் உலாவந்தபோது மெதுவாகக் கண்ணனிடம்‌ கேட்டாள். கண்ணா, தூங்கறவங்க வாயில் எறும்பைப் போட்டியா? இது பொல்லாத விஷமம்டா. அப்படியெல்லாம் செய்யக்கூடாது.. அம்மா.. அவங்கதான் சொல்றாங்கன்னா.. நீங்களும் நம்பறீங்க.. சும்மாவாச்சும் சொல்வாங்களாடா? அம்மா புதுசா வந்தவர் நம்ம ஊர் வெண்ணெய்க்கு மயங்கி ராத்திரி எடுத்து சாப்பிட்டிருக்கார். வாயைத் துடைக்காம தூங்கினா எறும்பு கடிக்காதாம்மா.. அவர்

நவ(நீத)ரஸகுண்டு..(32)

Image
கண்ணா.. ம்ம்.. ஸுமுகியை இன்னிக்கு கிள்ளிவிட்டியா? அம்மா.. என்னையே கேக்கறீங்களே.. அவங்கம்மாதானே புகார் கொடுத்தாங்க? அவங்களைக் கேட்டீங்களா.. கேட்டேனே.. என்ன சொன்னாங்க? பாட்டு பாடச் சொல்லிக் கேட்டியாம்.. பாடினதும் கிள்ளிட்டியாமே.. அம்மா.. அவ இப்பதான் கத்துக்கவே ஆரம்பிச்சிருக்கா..அதுக்குள்ள கச்சேரி பண்ணுவான்னு அவங்கம்மா சொல்றாங்க. அதுக்கு நீ ஏன் கிள்ளின? அம்மா.. நா கிள்ளலம்மா.. அவ கத்தறது பொறுக்காம  தொடைல இவ்ளோ பெரிய வண்டு வந்து அவளைக் கடிச்சதுமா. நான் அதை எடுத்துப் போட்டேன். நான்தான் கிள்ளினேன்னு நினைச்சுட்டாங்க. அதானே பாத்தேன். இதில் உன் பொறந்தநாளைக்கு அவ கச்சேரி வெக்கணும்னு சொல்லிட்டுப்போறா.. நீ சமத்தா தூங்கு.. நான் அவளைப் பாத்துக்கறேன். Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(31)

Image
கண்ணா.. நேத்திக்கு நதிக்கரையில் விளையாடப் போனியா? ஆமாம்மா.. அங்க கமலாவின் பொண்ணு வந்து குடத்தைத் தூக்க முடியலன்னு கேட்டாளாமே. ஆமாம்மா.. மாட்டேன்னு ஓடி வந்துட்டயாம். அந்தப்பொண்ணு கண்ணன் உதவி செய்யலன்னு அழுததாம். யாராவது உதவி கேட்டா, அதுவும் பொண் குழந்தைகள் கேட்டா ஓடிப்போய் பண்ணுவ? நேத்திக்கு என்னாச்சு? ஒரு கை பிடிச்சு குடத்தை ஏத்திவிட்டிருக்கலாம்ல? அம்மா.. உன் கிட்ட எதைத்தான் புகார் சொல்றதுன்னே இல்லியா? இவங்களுக்கெல்லாம் இதே வேலையாப்போச்சும்மா.. அதெல்லாம் இருக்கட்டும். நீ ஏன்டா மாட்டேன்னு சொன்ன? எனக்கு பாரத்தை இறக்கிவெக்கத்தாம்மா தெரியும். யாருக்கும் பாரம் ஏத்தி விடமாட்டேன். எனக்கது தெரியாதும்மா.. அவன் என்ன சொல்கிறான் என்று யசோதா புரிந்துகொள்வதற்குள்.. அண்ணா! வா விளையாடப்போலாம்.. என்று பலராமனைக் கூட்டிக்கொண்டு ஓடினான் கண்ணன். Back to Index

நவ(நீத)ரஸகுண்டு.. (30)

Image
கண்ணா.. பொண்குழந்தைகளையெல்லாம் வம்பிழுக்கக்கூடாதுடா.. தப்புடா.. அம்மா.. நான் என்ன பண்ணினேன்? நேத்திக்கு ஒருத்தி பாவாடைல மண் அள்ளிப் போட்டுடியாமே.. அம்மா. நீங்க எப்பவும் அவங்க பேச்சை மட்டும் கேட்டுட்டு என்னைக் கேள்வி கேக்கறீங்க. அவ என்ன பண்ணினா தெரியுமா? என்ன பண்ணினா? நான் ஆத்தங்கரைல மணல் வீடுகட்டி விளையாடிண்டிருந்தேனா.. ம்ம்.. அவ பாவாடையைப் பிடிச்சிண்டு டர்...னு ரங்கராட்டினம் மாதிரி வேகமா சுத்தினா..  ம்ம்.. சுத்தின வேகத்தில கீழ விழப்போனா.. விழுந்தா அடி பட்டுடுமே பாவம்னு பிடிச்சேன்.. மணல்வீடு கட்டிண்டு இருந்ததால என் கையெல்லாம் மண். கொஞ்சம் அவமேல பட்டது. கையை அலம்பிண்டு வந்து பிடிக்கறதுக்குள்ள விழுந்துடமாட்டாளா.. சொன்னா முழுசா சொல்லணும். நான் பண்ணினதை மட்டும் சொல்றாங்க.. நீங்களும் அதை நம்பறீங்க.. என்னமோ நல்லதுக்கே காலமில்லம்மா.. அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கண்ணன் புலம்ப,  தங்கமே, நீ எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கற. இங்க உன்னை யாருக்குப் புரியறது? நான் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். இனிமே யாராவது புகார் எடுத்துண்டு வரட்டும். பாத்துக்கறேன். கண்ணனின் பட்டுக் கன்னத்

நவ(நீத)ரஸகுண்டு.. (29)

Image
இருள் சூழ்ந்த மயக்கும் மாலையில் கோகுல சந்திரனைக் காண வானத்துச் சந்திரன் வந்தான். யசோதா கண்ணனை இடுப்பில் வைத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தாள். அம்மாவும் பிள்ளையும் நக்ஷத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கையில்.. அம்மா.. ம்ம்.. அது என்ன? அது நிலாடா.. சந்தா மாமா. மாமாவா.. ம்ம் உருண்டையா வெண்ணெய் மாதிரி இருக்கே.. வெண்ணெயெல்லாம் இல்ல.. அம்புலி மாமா. சந்தா மாமான்னு சொல்வோம். அது எப்படி மாமாவாகும்? கண்ணா... இந்த உலகம்‌ முழுசுக்கும் அம்மா மஹாலக்ஷ்மி.. அவங்க பாற்கடல்லேர்ந்து  வந்தாங்க.. பாற்கடல்னா.. நிறைய பால் இருக்கும்டா.. அம்மா.. ம்ம்.. என்னை அங்க கூட்டிண்டு போயேன்.. அதெல்லாம் அப்றமா போலாம்.. சரி..அதுக்கும் சந்தா மாமாக்கும் என்ன சம்பந்தம்? அதே பாற்கடல்லேர்ந்து இந்த நிலாவும் வந்தது. ம்ம்.. அம்மாவோட சகோதரன் மாமா தானே.. அதனால் சந்தா மாமா ன்னு சொல்றோம். அம்மா.. ம்ம்.. பால்லேர்ந்து வெண்ணெய்தானே வரும். நீ கடையும்போது நான் பாத்திருக்கேனே.. மாமா வந்தாருங்கற... அது வெண்ணெய்தாம்மா.. கண்ணா.. நீ வா நாம உள்ள போலாம்.. Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(28)

Image
கண்ணா... குளிக்கலாம் வா.. அம்மா.. நான் அழகாதானே இருக்கேன்.. ஆமாம்.. உன் அழகுக்கென்ன குறை? அப்றம் எதுக்கு குளிக்க சொல்ற? அடேய்.. அழுக்காவும் இருக்கியே..  அழுக்கா இருந்தாலும் நான்  அழகுதானே மா.. அதில்லடா.. புழுதில ஆடிட்டு வந்திருக்க.. குளிக்கலன்னா அரிப்பு வரும்.. நான் துடைச்சுக்கறேனே.. சத்தமா சொல்லாதடா..நம்ம வீட்டில் இருக்கற கோபிகள் காதில் விழுந்தா அவ்ளோதான். உன் கதையை ஊரெல்லாம் சொல்லிடுவாங்க..அப்றம் ஊர்ல இருக்கற பெண் குழந்தைகள்ளாம் உன்னை கேலி பண்ணும். அம்மா.. நான் குளிக்கப்போறேன்.. Back to Index