நவ(நீத)ரஸகுண்டு.. (43)

கோகுலத்தில் புதிதாக வாழ்க்கைப்பட்டு வந்திருந்தாள் ஒரு பெண். அவளை அவளது மாமியார் கண்ணனின் கண்ணில் படாமல் பாதுகாத்துவந்தாள்.

ஐந்தே வயதான கண்ணனைக் கண்டாலே போதும், வயது வித்யாசமில்லாமல், ஆண், பெண், விலங்குகள் என்று அனைவரும்‌ மயங்கும் ரூபமல்லவா? 

ஒருநாள் அந்தப் புதுப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு நாள் முழுதும் சுற்றிவிட்டு மாலை அழைத்துப்போய் வீட்டில் விட்டான் கண்ணன். அதற்கு அந்த மாமியார் கோபி வைத்த புகாரை விசாரித்தாள் யசோதை.

கண்ணா.. என்னடா உன்னைப் பத்தி என்னென்னமோ சொல்றாங்க..

என்னம்மா..

நேத்திக்கு நம்ம ஊருக்கு வந்த புதுப்பெண்ணை சாயங்காலம்தான் வீட்டில் விட்டயாமே. நாள் முழுக்க எங்கடா போன?

யாரு அவங்க மாமியார் சொன்னாங்களா?

ஆமாண்டா..

அவங்கவீட்டுப் பொண்ணையே எங்க போனன்னு கேக்க வேண்டியதுதானேம்மா.. இல்லன்னா அவளை இங்க கூட்டிண்டு வந்தா நீங்க கேப்பீங்கல்ல.. 

அதானே..

அவங்க அதைச் செய்யமாட்டாங்கம்மா.. அவளைக் கேட்டா தெரிஞ்சுடும். எது நிஜம் எது பொய்னு.. 

சரி.. என்ன நடந்தது கண்ணா.. நீதான் சொல்லேன்.

அம்மா.. அவங்க ஊருக்குப் புதுசு. நதில தண்ணியெடுக்க வந்தாங்க. அவங்க ஊர்ல நதியெல்லாம் இல்லியாம். தண்ணியப் பாத்ததும் குஷியாகி ரொம்ப நேரம் இறங்கி ஊறவே, கூட வந்தவங்கல்லாம் விட்டுட்டுப் போயிட்டாங்க..

ம்ம்..

வழி தெரியாம, அழுதுண்டு நதிக்கரைல தனியா நின்னுண்டிருந்தாங்க.. சரி வாங்க வீட்டில் கொண்டு விடறேன்னு கூட்டிண்டு வந்தேன்.

விடவேண்டியதானே...

அடப்போங்கம்மா..

அவங்க கணவர் பேரையும் சொல்லமாட்றாங்க. வீட்டுப் பெரியவங்க பேரையும் சொல்லமாட்டேன்னுட்டாங்க. மரியாதையாமாம்..
தெரு பேர் தெரியல. வீடு அடையாளமும் தெரியல..
எந்த வீட்டைக் காமிச்சாலும் எங்க வீடு இது மாதிரிதான் இருக்கும். ஆனா இது இல்லங்கறாங்க.. கோகுலத்தில் இருக்கற எல்லா வீட்டையும் காமிச்சிட்டேன். அவங்களுக்கு வீடு மறந்துடுச்சும்மா. நான் என்ன பண்றது. உதவி செய்யப்போய் நாள்‌முழுக்க என் விளையாட்டைக் கெடுத்தாங்க..

பாவம்டா கண்ணா நீ.. ஊருக்கு உதவி செய்யப்போனா கெட்டபேர் வருது.

ஆமாம்மா.. கால் ரொம்ப வலிக்கறதும்மா..

நீ வா.. இந்தப் பாலைக் குடிச்சுட்டுப் படு. நான் காலுக்கு எண்ணெய் தேய்ச்சு விடறேன்..

அம்மாவும் பிள்ளையும் கொஞ்சத் துவங்கினர்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37