நவ(நீத)ரஸகுண்டு... (46)
ஒரு உருண்டை வெண்ணெய் தருகிறேன் என்று சொன்னால் போதும் நம் கண்ணன் வெட்கத்தை விட்டு கோபிகள் சொல்வதனைத்தையும் செய்வான்.
ஒரு தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவன் தாகம் எடுத்தததால் அங்கிருந்த வீட்டிற்குள் போனான்.
உள்ளே போனால் நான்கைந்து கோபிகள் சேர்ந்து பேசிக்கொண்டே மாவு இடித்துக்கொண்டிருந்தார்கள்.
கண்ணன் வருவதைக் கண்டு குதூஹலம் அடைந்தனர். ஒருத்தி ஜாடை காட்ட, அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
எங்க வந்த கண்ணா?
தாகமா இருக்கு..
குடிக்க தண்ணி வேணும்.
ஒரு கோபி நீர் கொண்டுவந்து கொடுத்தாள். கண்ணனின் கண்ணாடிக் கழுத்தினுள் நீர் இறங்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். அவனை வம்பிழுக்கத் துவங்கினர். ஒருத்தி உள்ளேபோய் ஒரு பானை வெண்ணெய்யைக் கொண்டு வந்து எதிரில் வைத்தாள்.
கண்ணா.. வெண்ணெய் வேணுமா..
ம்ம்..
அவன் கண் பானையின் மீதே..
எங்க.. சிங்கம் மாதிரி நட.. பார்க்கலாம்..
மிக அழகாக கால்களை மாற்றி மாற்றி வைத்து சிங்கம்போல் நடக்க, சிங்கமே வந்துவிட்டதோ என்னும்படியாக இருந்தது.
கண்ணா.. யானை மாதிரி நடடா..
இப்ப நடந்ததுக்கு வெண்ணெய் கொடுங்க.. கையை நீட்டினான்.
ஒரு உருண்டையை வைத்ததும் விழுங்கிவிட்டு,
யானை மாதிரி நடந்தா பானையோட தரணும். சரியா?
இப்போது அவர்கள் கண்ணன் மயக்கத்தில் தலையசைக்க, மதகஜம்போல் வெகு அழகாக கையை வீசி ஒரு நடை நடந்து காட்டினான்.
ம்ம்... பானையைக் கொடுங்க..
என்று மிரட்ட,
ஒருத்தி சட்டென்று சொன்னாள். அதெல்லாம் இல்ல கண்ணா.. சும்மா கையை வீசினா சரியாப்போச்சா.. யானை நடக்கும்போது காதையும் விசிறி மாதிரி அசைக்கும். முழுசா யானை மாதிரியே நடந்தாதான் பானை.
ப்பூ.. இவ்ளோதானா.. பானையோட வெண்ணெய்.. சரியா..
என்று மிரட்டிவிட்டு
திரும்ப யானையைப்போல் கையை வீசி கால்களை அழகாக வைத்து ஒரு நடை நடந்தான். அவன் கைவீச்சிற்கேற்ப காது மடல்களும் முன்னும் பின்னும் அசைந்தன.
இதெப்படிடீ முடியும்?
எல்லாரும் ஆவென்று பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் பானை நிறைய வெண்ணெய்யோடு சிட்டாய்ப் பறந்தான் கண்ணன்.
Comments
Post a Comment