நவ(நீத)ரஸகுண்டு... (40)
சிறு குழந்தைகளுக்கு கண்ணாடி காட்டும் வழக்கம் இல்லை. கொஞ்சம் வளர்ந்தபின்பே காட்டுவார்கள்.
ஒரு வயதாகிவிட்டபடியால், ஒருநாள் கண்ணனை மிக அழகாக அலங்காரம் செய்தபின் கண்ணாடி காட்டினாள் யசோதை.
கண்ணனுக்கு கண்ணாடியில் தெரிவது யாரென்றே தெரியவில்லை.
அம்மா... அம்மா..
இது யாரும்மா..
ரொம்ப அழகா இருக்கான்மா இந்தப் பையன்..
ஒன்றும் சொல்லாமல் யசோதை சிரித்தாள்.
அம்மா.. இந்தப் பையன் நான் பண்றதெல்லாம் பண்றாம்மா..
அம்மா.. இவனை என்கூட விளையாட வரச் சொல்லும்மா..
என்றவன் கண்ணாடியிலிருந்த பிம்பத்தைப் பார்த்து வா வா என்று கைசைக்க, அதுவும் கையசைத்தது.
அம்மா... இவன் என்னை கூப்பிடறான்மா.. நான் போகட்டுமா என்றான்.
கண்ணா.. அது நீதான்டா..
இதோ பாரு என்று தன் முகத்தைக் காட்ட,
ஹை இன்னொரு அம்மா..
என்று குதித்தான் கண்ணன்..
சரிதான்.. இன்னிக்கு அழகு பார்த்தது போதும்..
த்ருஷ்டி படும்.. வா..
என்று கண்ணாடியை உள்ளே வைத்துவிட்டு கண்ணனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனாள் யசோதை.
Comments
Post a Comment