நவ(நீத)ரஸகுண்டு..(44)

கண்ணா, அந்த மணையை எடுத்துண்டு வா..

அன்னையின் ஆணையை கர்ம சிரத்தையாக நிறைவேற்ற, மணையை மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கிக்கொண்டு ததகா பிதகாவென்று நடந்து வந்து அம்மாவின் முன்னால் குனிந்து மணையைக் கீழே வைத்தான்.

ஏவலுக்கு வீடு நிறைய ஆள் இருந்தாலும், இவன் என்ன செய்கிறான் என்று பார்க்கவே அவனைக் கொண்டுவரச் சொன்னாள் யசோதா.

கண்ணன் என்ன செய்தாலும் அழகு. கண்கொட்டாமல் ரசித்தவள், குனியும்போது முதுகைப் பார்த்தாள்.

என்னடா இது..
மஞ்சள் மஞ்சளா இருக்கு. என்ன பண்ணின? எங்க போன சொல்லு..

திருதிருவென்று விழித்தவன் சமாளித்தான்.

அது ஒன்னுமில்லம்மா.

சொல்லுடா என்ன ஆச்சு.. உன் முதுகில் ஏது மஞ்சள்? கீறலா வேற இருக்கு.. நான்தான் காலைல அலங்காரம் பண்ணிவிட்டேன். எங்கபோய் இப்படி அப்பிண்டு வந்திருக்க?

அவனுக்கு ஏனோ இன்று கோபிகளைக் காட்டிக்கொடுக்க விருப்பமில்லை. அம்மா விடாப்பிடியாகக் கேட்கிறாள். வேறு வழியில்லை. அவனுக்கோ பொய் சொல்லிப் பழக்கமே இல்லை.

மாமிகள்ளாம் சந்தைக்குப் போறச்சே கூப்பிட்டா மா..
சாண்பிள்ளைன்னாலும், ஆண்பிள்ளை.. துணைக்கு வாடான்னா..
சரி.. ரெண்டு மிட்டாய் கிடைக்குமேன்னு நானும்  கூடப்போனேன்.

மஞ்சள் வாங்கறச்சே என் மேல உரசிப் பாத்துட்டு வாங்கினா..
நான் கறுப்பா இருக்கேனா.. என்மேல தேய்ச்சா பத்துமா பத்தாதான்னு தெரியுமாம்.

வந்ததே கோபம் யசோதைக்கு.

என்னடா நினைச்சிண்டிருக்கா அவாள்ளாம். எவளாச்சும் உன்னைப் புகார் சொல்லிண்டு  வரட்டும். பேசிக்கறேன்.. மஞ்சள் உரசிப் பார்க்க உன் முதுகுதான் கிடைச்சதா..

அம்மா.. விடுங்கம்மா.. அது சரியாயிடும். இதை சாக்கா வெச்சு ஆளுக்கொரு பானை வெண்ணெய் கறந்துடுவேன். அவங்களை வேற சமயத்தில் பாத்துக்கலாம். 

இல்லடா.. இருந்தாலும்.. இது ரொம்ப ஜாஸ்தி..

பரவால்லம்மா.. 
போகட்டும். எப்பப் பாத்தாலும் புகார் சொல்வாங்க. நல்லது பண்ணினா சொல்றாங்களா பாத்தியா..
விடுங்கம்மா... 
பேசிப் பேசி பசிக்குதும்மா..
எனக்கு வெண்ணெய் கொடுங்க.. 
விட்டுப் பிடிக்கலாம் என்று நினைத்த யசோதை கண்ணனுக்கு வெண்ணெய் கொடுத்துவிட்டு அவன்‌ முதுகில் கீறலுக்காக தேங்காய் எண்ணெய் போட்டுவிட்டாள்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

திருக்கண்ணன் அமுது - 1