நவ(நீத)ரஸகுண்டு..(38)
மடியில் தலைவைத்துக் கொண்டிருந்த கண்ணனின் முதுகைத் தடவிக்கொண்டே.
கண்ணா..
என்று யசோதை கூப்பிட, கண்ணன் எச்சரிக்கையானான்.
அம்மா...
என்னடா..
நீங்களும் தினமும் ஒரு புகாரை விசாரிக்கறீங்க. நான் எதுவும் பண்ணல.. இந்த மாமியெல்லாம்தான் நான் அவங்க வீட்டுக்கு வரணும்னு ஆசைப்பட்டு கூப்பிடறாங்கன்னு சொன்னா நம்பமாட்டேங்கறீங்க..
அவங்க கிடக்கறாங்க..
நான் உன்னைத்தாண்டா நம்பறேன்..
சரிமா..
நான் வேணா நாளைக்கு முழு நாளும் வெளிலயே போகாம உங்ககூடவே இருக்கேன். என்ன நடக்கறதுன்னு பாக்கறீங்களா..
ம்ம்.. சரி. தூங்கு..
மறுநாள் காலை முதல் கண்ணன் வெகு சமர்த்தாக அம்மாவுடனேயே பேசிக்கொண்டு, அவளுக்கு சிற்சிறு உதவிகள் செய்துகொண்டு அவள் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான்.
உச்சி வேளையானதும் ஒரு கோபி வந்தாள். அவளைக் கண்டதும் கண்ணன் ஒளிந்துகொண்டான்.
என்னம்மா.. யசோதை கேட்க..
பருப்பு தீர்ந்துடுச்சு.. அதான் வாங்கிண்டு போலாம்னு வந்தேன். என்று சொன்னவளின் கண் வீடு முழுவதும் தேடியது. யசோதை ஒரு படி பருப்பைக் கொண்டுவந்து கொடுத்தாலும் அவள் போகாமல் தயங்கியபடி நிற்க, இன்னொருத்தி வந்தாள்.
அம்மா கொஞ்சம் வெல்லம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க..
அவளுக்கு வேண்டியதைக் கொடுப்பதற்குள் இரண்டு கோபிகள் வந்தனர்.
உங்களுக்கென்னம்மா வேணும்?
நீங்கதான் மாவு இடிக்கணும். நாலுபேர் முடிஞ்சா வாங்கன்னு சொல்லி அனுப்பினீங்களாம்.
ம்ம்க்கும்.. நான் போன வாரம் சொன்னேன். நாலுபேர் வந்து இடிச்சுக் கொடுத்துட்டுப் போனாங்களே..
ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர். சற்று நேரத்தில் கோகுலத்திலிருந்த அத்தனை கோபிகளும் வந்துவிட, யசோதை ஒரு வாறு யூகித்துவிட்டாள்.
ஒரு கோபி, தைரியமாகக் கேட்டேவிட்டாள்.
அம்மா. கண்ணனுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா.. இல்லன்னா அவங்கப்பாகூட எங்கயாவது கோவிலுக்குப் போயிருக்கானா..
கலகலவென்று சிரித்தாள் யசோதா.
ஓ.. எல்லாரும் அவனைத்தேடித்தான் வந்தீங்களா..
அனைவரின் தலையும் கவிழ,
என்னமோ, அவன்தான் வந்து அதைப் பண்ணினான் இதைப் பண்ணினான்னு புகார் சொல்வீங்க..
இப்ப என்ன ஆச்சு.
கேட்டுக்கொண்டே
கண்ணா என்று உள்ளே பார்த்துக் கூப்பிட்டாள்.
அம்மா.. என்று ஓடி வந்த கண்ணன் யசோதையின் புடைவைத் தலைப்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
எல்லாரும் ஒன்னா வந்தா என்ன பண்றது? குழந்தைக்கு வேத்துமுகம்.. அதான்.. என்றபடி அவனை இழுத்து மடியில் வைத்துக் கொண்டாள். அன்றைக்கு எல்லாருக்கும் அங்கேயே உணவு ஏற்பாடாயிற்று.
Comments
Post a Comment