நவ(நீத)ரஸகுண்டு.. (37)
நெய்விட்டு நன்றாகப் பிசைந்த அன்னத்தை உருட்டி உருட்டிக் கைகளில் போட பலராமனும் கண்ணனும் மாற்றி மாற்றி வாங்கி உண்டுகொண்டிருந்தனர். அளவு தெரியாமல் உணவு உள்ளே போகும் நேரமிது.
கண்ணா..
நீ வெண்ணெய் திருடறது பத்தாதுன்னு இந்த பசங்களையெல்லாம் வேற கூட்டிண்டுபோறயாம். வெண்ணெய்யெல்லாம்தான் நானே தரேனே. எதுக்குடா இப்படி பண்ற?
வாயிலிருந்த சாதத்தை துப்பவும்முடியாமல், விழுங்கவும் முடியாமல் பலராமன் திருதிருவென்று விழிக்க, கண்ணன் அவனைக் கண்ணால் சும்மாயிரு என்பதாக ஜாடை காட்டிவிட்டு அம்மாவைப் பார்த்தான்.
அம்மா.. என்னைப் பாருங்க..
நானா திருடறேன்? அந்தப் பசங்கல்லாம் அவங்களே எங்க வீட்டுக்கு வா கண்ணா... எங்க வீட்டுக்கு வா கண்ணான்னு கையைப் பிடிச்சு இழுத்துண்டு போயிடறாங்க. அவங்க வீட்டில் வெண்ணெய்ப்பானை இருக்கற இடம் எனக்கெப்படிமா தெரியும்? அந்த பசங்களேதான் எங்க வீட்டு வெண்ணெய் சாப்பிடு கண்ணான்னு எடுத்துக் குடுக்கறாங்க..
அத்தோட விடறாங்களா?
சில சமயம் வைகுண்டம் தரேன்னு சொல்லு.. இல்லன்னா அம்மாகிட்ட மாட்டிவிடுவேன்னு வேற பயமுறுத்தி வைகுண்டம் வாங்கிக்கறாங்க..
ஆனா, திருட்டுப்பழி எம்மேல..
போங்கம்மா.. எனக்கு சாதம் போதும்..
அட.. கோவப்படாதடா கண்ணு.. எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி? இருந்தாலும் என்ன நடக்கறதுன்னு உன்னைக் கேட்டால்தானே தெரியும் ... சாப்பிடு..
என்று சொல்லி முத்தமிட..
பலராமன் உணவை விழுங்குவதை மறந்து ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணன் அவனைப் பார்த்துக் கள்ளமாய்ச் சிரிக்க, அவனும் சிரித்துக் கொண்டே உண்ண ஆரம்பித்தான்.
Comments
Post a Comment