நவ(நீத)ரஸகுண்டு... (45)
கண்ணனும் பலராமனும் காட்டில் ஒருவர் தோள்மேல் ஒருவர் கையைப் போட்டுக்கொண்டு மெல்ல நடந்துகொண்டிருந்தார்கள்.
பலராமன் குறுகுறுவென்று கண்ணனைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
அண்ணா.. என்னவோ சொல்ல நினைக்கறீங்க.. சொல்லுங்க..
நான் நினைச்சாலே உனக்குத் தெரிஞ்சுடறதே கண்ணா..
சும்மா சொல்லுங்கண்ணா.
மலையெல்லாம் தூக்கறயே கண்ணா.. எல்லாரும் உன்னை பகவான்னு தெரிஞ்சுப்பாங்களே..
ஹாஹா.. அதனால என்ன?
அப்றம் எப்படி அவங்கவங்க வேலையைப் பார்ப்பாங்க?
வைகுண்டம் மாதிரி உன்னையே பார்க்க ஆரம்பிச்சுடுவாங்களே..
அண்ணா.. இந்தப் பசங்க எதிரதானே மலையைத்தூக்கினேன். காளியனை அடக்கினேன். எவ்வளவு அசுரவதம்..இன்னும் எவ்வளவோ பண்ணிருக்கோமே. ஆனா.. பாருங்க.. அவங்க தூரத்தில் விளையாடறாங்க.
அதான் எப்படின்னு புரியல கண்ணா..
அவங்களுக்கு நான் பகவான்னு தெரியும். வேண்டியதெல்லாம் தருவேன்னு தெரியும். கஷ்டம் வந்தா காப்பாத்துவேன்னும் தெரியும்.
ம்ம்
மத்த ஜனங்களா இருந்தா அந்த வரைக்கும் வேணுங்கும்போது மட்டும் வருவாங்க. மற்ற நேரத்தில் என்னைத் திட்டக்கூட தயங்கமாட்டாங்க..
ஆனா, இந்த இடைக் குலம் மட்டும் நான் விரும்பியபடி இருக்கணும்னு நினைச்சு, என்னுடைய சௌகர்யத்தையே யோசிக்கறவங்க.. இப்படிப்பட்டவங்களுக்காக மலை தூக்கறதென்ன.. காலத்தையே நிறுத்துவேன் அண்ணா..
நீங்க வேணா ஒருத்தனைக் கூப்பிடுங்க..
தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமங்களன் கண்ணில் பட்டான்..
ஹே மது..
கூப்பிடுவதற்கு முன் திரும்பிப் பார்த்தான். கூப்பிட்டு முடிக்கும்போது வந்து நின்றான் மதுமங்களன்.
இது யார் தெரியுமாடா உனக்கு?
கண்ணன்..
கண்ணன் யாருன்னு தெரியுமா?
கண்ணன் உம்மாச்சி..
ம்ம்க்கும்..
தெரிஞ்சுமா நீ பாட்டுக்கு விளையாடற..
மதுமங்களன் சொன்னான்..
அண்ணா.. நாங்க எல்லாரும் கண்ணன் விருப்பப்படி தான்.. அவன் விளையாடினா நாங்களும் விளையாடுவோம். உங்ககூட பேசறதுக்காக தனியா வந்துட்டான். அதனால் தொந்தரவு பண்ணவேணாம்னு தூரத்தில் இருக்கோம். அவனுக்கு ஆயிரம் வேலை. எங்களுக்கு அவன் இஷ்டப்படி இருக்கறதே ஒரே வேலை.
பலராமன் கண்ணனை விட்டு மதுவை இழுத்துக் கட்டிக்கொண்டான்.
Comments
Post a Comment