நவ(நீத)ரஸகுண்டு..(33)

கம்சனின் அரண்மனையில் வேலை செய்பவன் ஒருவன், கோகுலத்தில் ஒரு வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தான். அவன் வந்ததிலிருந்து கண்ணன் கண்ணன் கண்ணன் என்பதைத் தவிர வேறெதையும் கேட்கவில்லை. அவனுக்கு கண்ணனைப் பற்றி கம்சனிடம் சொல்லலாம் என்ற எண்ணம் எழுந்தது.

அன்றிரவு அவன் உறங்கும்போது அவன் வாயில் கொஞ்சம் வெண்ணெயையும் ஒரு கொத்து கட்டெறும்பையும் போட்டுவிட்டு வந்துவிட்டான் கண்ணன். விருந்தாளியாய் வந்தவன் சாப்பிடுவதற்குகூட வாயைத் திறக்கமுடியவில்லை. பூசணிக்காய் போல் வாய் வீங்கிப்போய் உடனே ஊருக்குக் கிளம்பிவிட்டான்.

புகார் யசோதையிடம் வந்தது. 
யசோதைக்கு சுருக்கென்றது. புகார் சொன்ன கோபியைத் திட்டி அனுப்பி விட்டாள்.

 மாலையானதும் சற்று நந்தவனத்தில் உலாவந்தபோது மெதுவாகக் கண்ணனிடம்‌ கேட்டாள்.

கண்ணா, தூங்கறவங்க வாயில் எறும்பைப் போட்டியா? இது பொல்லாத விஷமம்டா. அப்படியெல்லாம் செய்யக்கூடாது..

அம்மா.. அவங்கதான் சொல்றாங்கன்னா.. நீங்களும் நம்பறீங்க..

சும்மாவாச்சும் சொல்வாங்களாடா?

அம்மா புதுசா வந்தவர் நம்ம ஊர் வெண்ணெய்க்கு மயங்கி ராத்திரி எடுத்து சாப்பிட்டிருக்கார். வாயைத் துடைக்காம தூங்கினா எறும்பு கடிக்காதாம்மா..
அவர் யாருக்கும் தெரியாம வெண்ணெய் சாப்பிட்டது வெளில தெரிஞ்சா அசிங்கம்னு என்மேல் பழி வெக்கறாங்கம்மா..

எனக்குத் தெரியும்டா கண்ணா.. நீ அப்படி பண்ணமாட்டன்னு. இனி உன் பேர்ல வர எந்த புகாரையும் நம்பவேமாட்டேன். வா, உள்ள போகலாம்.

தாயின் கையைப் பிடித்துக்கொண்டு அழகுநடை நடந்து உள்ளே போனான் மாயக் கண்ணன்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37