திருக்கண்ணன் அமுது - 22
தென்றலின் தாலாட்டு கண்ணன் பிறந்தது முதல், கோபிகளுக்கு நினைவும் செயலும் அவனே ஆனான். தலை சரியாக நிற்காத பருவத்திலேயே அவன் ஒரு கோபியைப் பார்த்துச் சிரிப்பதும், இன்னொருத்தியைப் பார்த்தால் முறைப்பதும், ஒருத்தியைப் பார்த்து அழுவதுமாக விஷமங்கள் செய்து அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான். பாலாரிஷ்டம் நீங்குவதற்காக மாதாமாதம் ரோஹிணியன்று ஆயுஷ்யஹோமம் நடக்க ஏற்பாடாயிற்று. அதையொட்டி ஏராளமான தானங்களை நந்தன் வழங்கினார். முதல் மாத ரோஹிணியன்று ஹோமம் முடிந்ததும், முற்றத்தில் புகை அதிகம் இருந்ததால், யசோதை குழந்தையைத் தூக்கிக்கொண்டு தோட்டத்திற்கு வந்தாள். குழந்தை தூக்கக்கலக்கத்தில் இருந்ததால், தாலாட்டுப் பாடி, தொளில் போட்டுத் தட்டினாள். கண்ணன் அறிதுயில் கொண்டான். எவ்வளவு நேரம் தூங்குகிற குழந்தையை வைத்துக் கொண்டிருப்பது? அன்னைக்கும் கஷ்டம், குழந்தையும் நிம்மதியாய் உறங்காது. எனவே, ஒரு சேடிப் பெண்ணிடம் கண்ணைக் காட்ட, அவள் தோட்டத்திலேயே ஒரு தூளிக்கு ஏற்பாடு செய்தாள். அங்கே நிறுத்தியிருந்த பெரிய மாட்டு வண்டியின் அடியில், ஒரு புடைவையைக் கட்டி தூளிபோல...