திருக்கண்ணன் அமுது - 20
பூதனையின் பேறு
அழகான உருவம் கொண்ட பூதனை நந்தனின் அரண்மனை வாயிலில் கால் வைத்ததுமே, கண்ணன் உறங்குவதுபோல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தான்.
அட, குழந்தை தூங்கறானே..
பரவால்ல, கொஞ்ச நேரம் கையில் வெச்சுக்கறேனே, எவ்ளோ அழகு இந்தக் குழந்தை..
முதன் முதலில் இறைவனின் ஸ்பரிசம் அவளை என்னவோ செய்தது.
இவ்வளவு அழகான குழந்தையைக் கொல்வதா? அவள் மனத்தில் லேசான சஞ்சலம். இதுவா அரசனைக் கொல்ல வந்திருக்கும்?
ம்ஹூம். எல்லாக் குழந்தைகளையும் கொல்வதுதான் அரசன் உத்தரவு. மீறினால், நமது உயிர் போய்விடும்.
சிறிது நேரம் மடியிலிருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். கண்ணன் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் அழகை ரசித்தாள் போலும். விழிக்கட்டும், பிறகு பாலைக் கொடுத்துக் கொல்லலாம், என்று நினைத்தாளோ தெரியவில்லை.
கண்ணனோ கண்ணைத் திறப்பதாக இல்லை.
ஏனாம்?
முந்தைய அவதாரமான ராமாவதாரத்தில் முதன்முதலில் தாடகை என்ற ஒரு பெண் அரக்கியைக் கொல்ல நேர்ந்தது. இந்த அவதாரத்திலும், முதலில் பெண் அரக்கி வந்திருக்கிறாளே என்று யோசித்தானோ..
கண்ணைத் திறந்து பார்த்து விட்டால் கருணை வந்துவிடும், பிறகு கொல்லமுடியாதென நினைத்தானோ..
அல்லது
இப்போது இந்த அரக்கி விஷம் தரப்போகிறாள், இதற்கு முன் விஷம் உண்டதில்லை. எப்படி இருக்கும் அந்த அனுபவம்? இனிக்குமா? கசக்குமா? ஏற்கனவே விஷம் சாப்பிட்ட பரமேஸ்வரனை விசாரிக்கலாம் என்று அவரை தியானம் செய்யக் கண்மூடியிருந்தானோ..
இவளோ தாயார் மாதிரி ஸ்தன்யபானம் செய்விக்க வந்திருக்கிறாள். கண்ணைத் திறந்து பார்த்தால் இவளது தோஷம் தெரிந்துவிடும். எனவே, கண்ணைத் திறக்காமல், தாயென்றே நினைத்து தாய்க்குக் கொடுக்கும் பதத்தையே இவளுக்கும் கொடுத்துவிடலாம் என்று நினைத்தானோ..
அவனது எண்ண ஓட்டங்களையும், லீலா ரகசியங்களையும் அறிந்தவர் யார்?
சரி, எனக்கு நேரமாகுது, குழந்தைக்கு ஒன்னும் கொடுக்காம போக விருப்பமில்லை. தூங்கினா என்ன, நான் கொஞ்சம் பால் கொடுத்துட்டுக் கிளம்பட்டுமா?
உள்ளேயிருந்து அதற்குள் அங்கு வந்துவிட்டிருந்தாள் யசோதை. புதிதாய் வந்திருப்பவள் யாரோ பெரிய இடத்துப் பெண்மணி என்றே அவளும் நினைத்தாள்.
என் குழந்தையின் பாக்யம், அவனுக்கு எல்லாருடைய அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்குதே என்று நினைத்தவள் சரியென்று தலையாட்டினாள்.
பூதனா கண்ணனுக்குப் பாலூட்டத் துவங்கினாள், பிறகு அலறத் துவங்கினாள். அவளது அழகான உருவம் மாறி பெரிய மலை போல் உருக்கொண்ட ராக்ஷஸியாக மாறினாள்.
முனிவர்களும் யோகிகளும்கூட என்னை விட்டுவிடாதே என்று இறைஞ்சும் இறைவனைப் பார்த்து என்னை விடு என்னை விடு என்று அலறிக்கொண்டே எழுந்து ஓடத் துவங்கினாள்.
அவளது ஓட்டத்தினால் பூமி அதிர்ந்தது,
யசோதா மயங்கி விழுந்தாள்.
என்ன நடக்கிறதென்று ஒருவருக்கும் புரியவில்லை.
எல்லோரும் அரக்கியைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள்.
கண்ணன் அவள் கொடுத்த விஷத்தோடு அவளது உயிரையும் சேர்த்து உறிஞ்சினான். நேராக நிற்கும் உலக்கை கிரகணம் முடிந்ததும் சட்டென்று கீழே விழுவது போல் விழுந்தாள் பூதனா. அவளது உடல் பத்து யோஜனை தூரத்திற்கு பெரிய மலைபோல் நீண்டு பரந்திருந்தது.
துரத்திக்கொண்டு ஓடிவந்த கோபர்கள், கண்ணனைத் தேடினர்.
மலைத்தொடர் போலிருந்த அவளது சரீரத்தில் சின்னஞ்சிறிய நீல வைரமாய் ஜொலித்துக் கொண்டிருந்த கண்ணனைக் கண்டுபிடித்தனர். அவனோ, கடைவாயில் பால் வழிய, ஒன்றுமறியாதான்போல் விழித்துக் கொண்டிருந்தான். தன்னைத் தூக்குவதற்கு வரும் கோபர்களைப் பார்த்ததும் பெரிதாக அழத் துவங்கினான்.
சட்டென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஜாக்கிரதையாய் அவளது உடலை விட்டிறங்கினர் கோபர்கள்.
மூர்ச்சை தெளிந்து அழுது அரற்றிக்கொண்டிருந்த யசோதையின் கையில் குழந்தையைக் கொடுத்ததும், அடடா, அவளது நிலையை எப்படிச் சொல்வது?
வாரியணைத்து உச்சிமோந்து, முத்தமாரி பொழிந்தாள் அன்னை.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment