திருக்கண்ணன் அமுது - 21

த்ருஷ்டி போக்குபவனுக்கு த்ருஷ்டி 

எப்படி வாழ்ந்தாலும், என்ன‌ செய்தாலும்‌ முடிவில் இறைவனை அடைந்துவிட்டால் அவர்கள் மீளாப் பதம் அடைந்துவிடுகின்றனர்.
அவரவர் வாசனையைப் பொறுத்து இறைவன்‌மீது அன்பு‌செலுத்துவதோ, அல்லது எதிர்ப்பதோ அமைகிறது. 
இறைவன் தன் பால் அன்போடு நினைப்பவரையும், எதிர்ப்பவரையும் ஒன்றே போல் பாவித்து அவரவர் எண்ணத்தைப் ப்ரதிபலிக்கும் மார்கத்திலேயே சென்று அவர்களைத் தன்னிடம்‌ சேர்த்துக் கொள்கிறான்.

கண்ணனின் அதரம் பட்ட உடல் புனிதமாகி விட்டது. இறந்துபட்ட பூதனையின் உடலை அப்படியே தகனம் செய்தால் ஊரே பற்றி எரியும் என பயந்து சிறிது சிறிதாக வெட்டி எடுத்து தனித்தனியாக தகனம் செய்தனர்.

பெரிய ஞானிகள் அடையும் பதத்தை அவள் அடைந்து விட்டதால் புனிதமான அவளது உடல் எரிக்கப்படும் போது, துர்நாற்றம் வீசாமல், சந்தன மணமும் அகிலின் மணமும் மற்ற மகிழ்வான வாசனைகளும்‌ வீசின.

இதற்குள் வசுதேவரைச் சந்திக்க போயிருந்த நந்தன் அவசரமாகத் திரும்பி வந்தார்.

வசுதேவரை ரகசியமாகச் சந்தித்த நந்தனிடம் அவர் சில விஷயங்கள் சொல்லியனுப்பினார். ரோஹிணியின் புதல்வனைப் பற்றிய கவலைதான் மிகுந்திருந்ததே தவிர கண்ணன் அவர்களது மையப்புள்ளியில் வரவில்லை. நிறைய அபசகுனங்கள் தெரிவதாலும், குழந்தைகளைக் கொல்ல கம்சன் உத்தரவிட்டிருப்பதையும் சொல்லி, தாமதிக்காமல் உடனே ஊர் திரும்பச் சொன்னார் வசுதேவர்.

மேலும் காவலை பலப்படுத்தவும், குழந்தைகளைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். அதோடு தமது குலகுருவான கர்காசார்யாரை வைத்து ஒரு நல்ல நாளில் ரகசியமாக நாம கரணமும் செய்துவிடச் சொன்னார். வசுதேவர் எச்சரித்ததால் கவலை கொண்ட நந்தன் அன்றே ஊர் திரும்பினார்.

பூதனையின் மீதிருந்து கண்ணனைத் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்ததும், பயத்தினால் யசோதையோடு சேர்ந்து கோபிகளும் அழுதனர். கண்ணனை மாற்றி மாற்றிக் கொஞ்சினர்.

பிறகு அவனை மாட்டுத் தொழுவத்திற்குத் தூக்கிக்கொண்டுபோய், கோமியத்தால் ஸ்நானம் செய்வித்தனர்.
குழந்தை பயந்துவிட்டானோ என கோபிகள் பயந்து
பசுமாட்டின் குளம்படி மண் கொண்டு த்ருஷ்டி சுற்றி,  த்வாதச நாமங்கள் சொல்லி், பசுவின் வாலால் அவன் அங்கங்களைத் தொட்டு அவனுக்குக் காப்பிட்டனர்.

வாயில் விரலைப் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தான் அந்தக் கள்ளன்.

இந்த அன்பிற்கு ஆசைப் பட்டுத் தான் பூமிக்கு இறங்கிவந்தான் போலும்..

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37