திருக்கண்ணன் அமுது - 22

தென்றலின் தாலாட்டு

கண்ணன் பிறந்தது முதல், கோபிகளுக்கு நினைவும் செயலும் அவனே ஆனான்.

தலை சரியாக நிற்காத பருவத்திலேயே அவன் ஒரு கோபியைப் பார்த்துச் சிரிப்பதும், இன்னொருத்தியைப் பார்த்தால் முறைப்பதும், ஒருத்தியைப் பார்த்து அழுவதுமாக விஷமங்கள் செய்து அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்.‌

பாலாரிஷ்டம் நீங்குவதற்காக மாதாமாதம் ரோஹிணியன்று ஆயுஷ்யஹோமம் நடக்க ஏற்பாடாயிற்று.  அதையொட்டி ஏராளமான தானங்களை நந்தன் வழங்கினார்.

முதல் மாத ரோஹிணியன்று ஹோமம் முடிந்ததும், முற்றத்தில் புகை அதிகம் இருந்ததால், யசோதை குழந்தையைத் தூக்கிக்கொண்டு தோட்டத்திற்கு வந்தாள்.

குழந்தை தூக்கக்கலக்கத்தில் இருந்ததால், தாலாட்டுப் பாடி, தொளில் போட்டுத் தட்டினாள். கண்ணன் அறிதுயில் கொண்டான்.

எவ்வளவு நேரம் தூங்குகிற குழந்தையை வைத்துக் கொண்டிருப்பது? அன்னைக்கும் கஷ்டம், குழந்தையும் நிம்மதியாய் உறங்காது.

எனவே, ஒரு சேடிப் பெண்ணிடம் கண்ணைக் காட்ட, அவள் தோட்டத்திலேயே ஒரு தூளிக்கு ஏற்பாடு செய்தாள். அங்கே நிறுத்தியிருந்த பெரிய மாட்டு வண்டியின் அடியில், ஒரு புடைவையைக் கட்டி தூளிபோல் செய்தாள்.

யசோதை குழந்தையை அதற்குள் விட்டு, சற்று ஆட்டிவிட்டு, கண்ணன் உறங்குவதை உறுதி செய்துகொண்டு சற்று தள்ளிப்போய், அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். இருந்தாலும் அவளது பார்வை முழுவதும் தூளியிலேயே இருந்தது..

மெல்லிய தென்றல் உறங்குகின்ற கண்ணனை  வருடி வருடிச் சுகம் கொண்டது. கன்றுக்குட்டிகளும் சத்தம் போடாமல் வந்து எட்டி குழந்தையைப் பார்த்துச் சென்றன. 

தோட்டத்தில் இடித்து புடைத்து, மற்றும் மாட்டுத் தொழுவ வேலை செய்துகொண்டிருந்த கோபிகள் மெல்லிய மனம் வருடும் இசையோடு கண்ணனின் நாமங்களைப் பாடத் துவங்கினர். 

தன் பிள்ளையின் பெயரை அவர்கள் பாடுவது கேட்டு யசோதை பூரிப்படைந்து தலையாட்டிக் கொண்டே இடிக்கப்பட்ட தானியத்தைச் சோதித்துக்கொண்டிருந்தாள்.

குழந்தைகளைக் கொன்று வரச் சென்ற பூதனை திரும்பி வருவதாய் இல்லை. அவளை மிகவும் எதிர்பார்த்துச் சலித்துப்போன கம்சன் ஒற்றரை அனுப்பி அவள் இறந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தான். 

உடனே, இன்னொரு அசுரனை  குழந்தையைக் கொல்வதற்காக அனுப்பினான்.

குழந்தையைக் கொல்ல சமயம் பார்த்துக் கொண்டிருந்த அந்த அசுரனுக்கு இச்சமயம் வாகாய்ப் போனது. மெதுவாக குழந்தை உறங்கிக்கொண்டிருந்த வண்டியின் சக்கரத்தில் புகுந்து காத்துக் கொண்டிருந்தான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37