கிரிதர கோபாலா.. (31)
தனக்கும் அவ்விடத்திற்கும் இனியும் தொடர்பில்லை என்றுணர்ந்த மீரா, அங்கிருந்து கிளம்பினாள். கிரிதாரியை இறுக்கி அணைத்துக் கொண்டு விடுவிடுவென்று இருளில் வேகமாக நடந்தாள். இரவு முழுதும் நடந்து நடந்து மேவாரின் எல்லையைக் கடந்தாள். எவ்வளவு தூரம் நடந்திருப்பாளோ.. எத்தனை நாள்கள் கடந்தனவோ.. எப்படியோ காட்டு வழியாக யமுனைக் கரைக்கு வந்துவிட்டாள். யமுனா நீரைப் பார்த்ததும் இவ்வளவு நாள்களாகத் தேக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் தாயைக் கண்டதும் பீறிடுவதுபோல் அழுகையாய் வெளிப்பட்டது. அம்மா! என்று கதறி அழுதாள். பின்னர் கண்ணன் விளையாடிய உன் மடியிலேயே எனக்கும் அடைக்கலம் கொடு தாயே! என்று அரற்றிக்கொண்டு ஓடிச் சென்று யமுனையில் விழுந்தாள். சேயைத் தாய் தாங்குவதுபோல் யமுனாதேவி மீராவைத் தாங்கிக்கொண்டாள். மெதுவாகக் கிழக்கு வெளுக்கத் துவங்க, பறவைகள் இனிமையான சத்தங்களுடன் வானில் பறக்கத் துவங்கிய நேரம். மக்கள் அனைவரும் கம்பளியால் போர்த்திக்கொண்டு அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம் ராதே ராதே என்ற கோஷம் எழும்பியது. யமுனையின் கரையில் ஸாதுக்கள் பாடும் இறை நாமத்தின் மதுரத்வனி கேட்டுக் கொண்டி