கிரிதர கோபாலா.. (28)

கிரிதாரியின் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, மீரா தன் கீர்த்தனத்தைத் துவங்கியதும்,‌ பொது மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மனிதர்கள் அனைவரும் முக்குணங்களால் பாதிக்கப்பட்டவர்களே. ஸத்வ குணம் கொண்டவர்கள் இறையின் மீதும், குருவின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். நேர்மறைச் சிந்தனைகளும், எப்போதும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் உடையவர்கள்.

ரஜோ குணமுள்ளவர்கள் காமம், கோபம், பிடிவாதம் போன்ற குணங்களுடன் விளங்குபவர்கள். எடுத்த செயலை முடிக்க ஆர்வம்‌ கொண்டவர்கள்.

தாமஸ குணம் கொண்டவர்கள் சோம்பல், மனச்சோர்வு, எல்லாவற்றையும் தள்ளிப் போடுதல், உறக்கம் ஆகிய குணங்கள் கொண்டிருப்பர்.

இவை மூன்றையும் தாண்டியது நிர்குணம் எனப்படும் ஞானம். மனம் அழிந்த சாதுக்கள் நிர்குணமாய் விளங்குவார்கள்.
மேலே‌ சொல்லப்பட்ட முக்குணங்களுக்கும் இருப்பிடம்‌ மனம் ஆகும். மனத்தை அழித்து விட்டவர்களுக்கு எந்தக் குணத்தாலும் பாதிப்பில்லை.

மீராவை வைத்துக்கொண்டு‌ என்ன செய்வதென்று தெரியாமல்‌ விழித்தான் ராணா. மக்களின் நம்பிக்கையைப்‌ பெறுவதற்காக அவளை அரண்மனைக்கு அழைத்து வந்துவிட்டானே‌ தவிர, மீராவின் மனத்தில் அவனால் இடம் பிடிக்க இயலவில்லை. ராணாவிற்கான அனைத்துப் பணிகளையும், அவன் அரசன் என்ற நிலையிலோ, சகோதரனுக்குச் செய்வதுபோலவோ செய்தாள் மீரா . கிரிதாரியைத் தவிர வேறெவரையும் கணவனாக ஏற்கவில்லை. அதை நன்றாக உணர்ந்துகொண்ட ராணா மிகவும்‌ குழம்பினான்.

விஜயதசமி‌ விழா‌ நெருங்கிக் கொண்டிருந்த சமயம். விஜயதசமி அன்று ராணா தர்பாரில் பட்டத்தரசியுடன் அமர்ந்து மற்ற சிற்றரசர்கள் அளிக்கும் மரியாதையையும் கப்பத்தையும் ஏற்கவேண்டும் என்பது அவர்களது வழக்கமாக இருந்தது.

மீராவை அழைத்து மீரா, நீ உன் விருப்பப்படியே இங்கிருக்கலாம். உன் இஷ்டம் போல் ஸ்வாமிக்குப் பூஜை செய்துகொண்டு ஸாது ஸேவை செய்யலாம். உன்னை நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

மிக்க மகிழ்ச்சி மஹராஜ்!

ஆனால்..

சொல்லுங்கள் மஹராஜ்!

நீ எனக்காக ஒன்றே ஒன்று செய்யவேண்டும்.

நான் உங்கள் அடிமை மஹராஜ்! சொல்லுங்கள்.

வரும் வெள்ளிக்கிழமையன்று விஜயதசமி விழா. அன்று தர்பாரில் என்னுடன் பட்டமஹிஷியாக நீ அலங்கரிக்கவேண்டும். சிற்றரசர்கள் தரும் மரியாதையையும், கப்பத்தையும், பரிசுகளையும் என்னுடன் சேர்ந்து நீயும்‌ ஏற்கவேண்டும். அவ்வளவுதான். உன்னிடம் வேறொன்றும் நான் எதிர்பார்க்கவில்லை.

இவ்வளவுதானா மஹராஜ்! இந்த அடிமைக்கு நீங்கள் தரும் மரியாதை மிக அதிகம். அவசியம் வருகிறேன் மஹராஜ்!

ராணாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. இருந்தாலும் அடிமனதில் ஏதோ ஒன்று சுரண்டிக் கொண்டிருந்தது. இவள் திடீரென்று ஏதாவது செய்வாள் என்று பயந்துகொண்டே இருந்தான்.

விஜயதசமித் திருநாளும் வந்தது.

ஊர் முழுதும் விழாக்கோலம். ராணாவிற்குக் கீழ் ஆட்சி செய்து வரும் நூற்றுக்கணக்கான சிற்றரசர்களும், ஜமீன்களும்,‌பல அதிகாரிகளும் வந்திருந்தனர். நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகள் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அன்று காலை தன்னை ‌மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு தன் குலதெய்வமான பவானியை வணங்கிவிட்டு தர்பாருக்குச் சென்றான் ராணா.

முதல் நாள் இரவும் ராணா சென்று மீராவைப் பார்த்தபோது, அவள் வருகிறேன் என்று உறுதியளித்திருந்தாள். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37