கிரிதர கோபாலா.. (29)
விஜயதசமி அன்று அதிகாலையே மீராவிற்கு மங்கள ஸ்நானம் செய்விக்கப் பட்டது. அரசரின் உத்தரவு என்பதால், அவளை அழைத்துக் கொண்டுபோய் அழகிய பட்டாடை அணிவித்து, தங்கமும், வைரமுமாக நிறைய அணிகலன்களை அணிவித்து தேவைதைபோல் அலங்கரித்திருந்தனர் பணிப்பெண்கள். அவர்களிடம் தன்னை பொம்மை போல் கொடுத்துவிட்டு, மீராவின் மனம் கிரிதாரியிடம் பேசத் துவங்கியது.
அவளுக்கு இன்று தன்னை மிக அழகாக அலங்கரித்து கிரிதாரியிடம் அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்ற எண்ணம் வந்துவிட, ஆசை ஆசையாகக் காட்டினாள்.
மீரா ஏற்கனவே அழகு. ஆடை அணிகலன்கள் அவளுக்கு இன்னும் அழகு சேர்க்க தகதகவென்று மின்னினாள்.
ராணாவின் மற்ற ராணிகள் பொறாமையால் வெந்துபோயினர். இவள் அரசரைக் கொஞ்சமும் மதிப்பதே இல்லை. இவளுக்குப் போய் இத்தனை கௌரவமா? அரசருக்கு இவள் மீதான பித்து முற்றிவிட்டது. இன்றைக்கு எப்படியும் ஏதாவது பிழை செய்வாள். அதை வைத்து இவளை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று பேசிக்கொண்டனர்.
மற்ற பணிப்பெண்கள் குடை, சாமரம், முதலியவற்றுடன் உடன் வர, வாத்யங்கள் முன்னே செல்ல, மஹாராணிக்குரிய ஸகல மரியாதைகளுடன் அந்தப்புரத்திலிருந்து கிளம்பினாள் மீரா. பின்னால் மற்ற ராணிகளும் தொடர்ந்தனர்.
அந்தப்புரத்திலிருந்து மீரா கிளம்பிவிட்டாள் என்ற செய்தி பறந்தது ராணாவிற்கு.
அந்தப்புரத்திலிருந்து தர்பாருக்குச் செல்லும் வழியில் சற்று திரும்பினால் கிரிதாரியின் கோவில். கிரிதாரியைக் காணப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே தான் மீரா கிளம்பினாள். அவளுக்கு அரசரின் கட்டளைகள் எதுவும் நினைவில் இல்லை.
சுற்றியிருப்பவர்கள் அரசர், தர்பார் என்று பேசிக் கொண்டிருந்தாலும் அவையெல்லாம் கனவில் கேட்பதுபோல்தான் இருந்தது.
நடக்க நடக்க, கிரிதாரி தன் வேலையைத் துவங்கினான்.
தேனினும் இனிய குழலோசை கேட்கத் துவங்கியது. மீராவிற்கு மட்டும் கேட்கும் வகையில் மதுரகானம் பொங்கி வழிந்தது..
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே இன்ப கனலை எழுப்பி நினைவளிக்கும் கீதம்
சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள் கலங்கி நின்றிடவும்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம் ||
மீராவின் உள்ளம் எங்கோ பறந்தது.. வழியிலேயே
நின்ற இடத்தில் தன்னை மறந்து ஆடிப் பாடிக்கொண்டு வந்தவளை பணிப்பெண்கள் கட்டுப் படுத்த இயலாமல் திணறினார்கள்.
ஒரு கட்டத்தில் சட்டென்று அவர்கள் அனைவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் மீறிக்கொண்டு கிரிதாரியின் கோவிலை நோக்கி சல் சல் சல் என்று சலங்கைகள் ஒலிக்க ஓடினாள் மீரா.
அங்கே ஸாதுக்கள் ஏற்கனவே குழுமியிருக்க, பாடி ஆடத் துவங்கினாள்.
மீரா ப்ரபு கிரிதர கோபாலா..
இறைவனே அழைத்த பின்பு செல்லாமல் நிற்க எவரால் இயலும்? இப்படித்தானே கோபியரும் ஓடினார்கள்? அவன் call செய்தால் எவர் காலும் நிற்காது என்று ரஸம் பொங்கச் சொல்வார் குருநாதர்.
அத்தனை பணிப்பெண்களும், மற்றவர்களும் விக்கித்துப் போனார்கள். எவ்வளவு தைரியம்? பெண்ணாய்ப் பிறந்துவிட்டு உடம்பில் துளியேனும் பயம், வெட்கம் ஏதாவது இருக்கிறதா பார்?
அரசர் இவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இவள் பாட்டுக்கு ஆடிக்கொண்டு கோவிலுக்குப் போய்விட்டாளே..
மற்ற ராணிகள் அனைவரும்
ஆத்திரம் பொங்க நேராக அரசனிடம் போனார்கள்.
அங்கே தர்பார் மண்டபத்தில் மீரா வரும் வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்த ராணாவிற்கு செய்தி பறந்தது.
மீரா தர்பாருக்குத்தான் கிளம்பினாள். ஆனால், வரும் வழியில் பாதியில் கோவிலுக்குள் ஓடிவிட்டாள். சரி, வணங்கிவிட்டு வருவாள் என்று பார்த்தால், அங்கே வழக்கம் போல் ஸத்ஸங்கம் செய்யத் துவங்கிவிட்டாள். உங்களை அவள் கொஞ்சமும் மதிக்கவே இல்லை என்று ஒன்றுக்குப் பத்தாகச் சேர்த்து ராணிகளும் கூறத் துவங்கினர்.
அங்கே தர்பாரில் அனைத்து சிற்றரசர்களும், அதிகாரிகளும், மக்களும் குழுமியிருந்தனர்.
இவ்வளவும் சபையோர் முன்னாலேயே தெரிவிக்கப்பட, ராணாவிற்கு அவமானம் பிடுங்கித் தின்றது.
மற்ற அரசர்கள் முன்னிலையில் தன் மனைவியே தன்னை அவமதித்துவிட்டதாக எண்ணிக் கடுங்கோபம் கொண்டான்.
காவலர்களைப் பார்த்து வேங்கையைப் போல் உறுமினான்.
உடனையாக பீரங்கிகளை வைத்து இடித்துத் தள்ளுங்கள் அந்தக் கோவிலை.. என் உத்தரவை மீறுபவர் எவரும் அரச தண்டனைக்கு விதிவிலக்கல்ல. இப்போதே இடியுங்கள்.
அவனது கர்ஜனைக்கு அந்த ஸபா மண்டபமே நடுங்கியது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment