கிரிதர கோபாலா.. (22)
உறவின் அடிப்படையே நம்பிக்கைதான், ஒருவரின் நம்பிக்கையை இழந்துவிட்டால் அதற்கு மேல் உறவில் விரிசல் ஏற்படும்.
அக்பர் அந்தப்புரம் வரை வந்து மீராவிடம் பேசிவிட்டுச் சென்றதை நேரில் கண்ட ஜெயமல் நேராக ராணாவைக் காணச் சென்றான்.
மிகவும் கோபமாக ஜெயமல் வருவதைக் கண்ட ராணா, மீராவைப் பற்றி ஏதோ சொல்லப்போகிறான் என்று ஊகித்துக் கொண்டான். தினந்தோறும் மீராவின் மீது வரும் புகார்களால் மிகவும் சலிப்படைந்திருந்தான் ராணா. இருந்தபோதிலும், தன் மனைவியை யாரிடமும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.
மஹராஜ்!
இதுநாள் வரை நான் சொன்னபோதெல்லாம் நீங்கள் மீராவின் மேல் வைத்திருந்த அன்பினால் அலட்சியப் படுத்தினீர்கள். இன்று நம் குலமே மீராவாலும், உங்கள் அலட்சியத்தாலும் நாசமாகப் போகிறது.
ஜெயமல்! உறுமினான் ராணா. கோபத்தோடு வாளை உருவினான்.
நீங்கள் என்னைக் கொல்லலாம். ஆனால், சத்ருவான அக்பர், நேரடியாக நம் நாட்டிற்குள் மட்டுமல்லாமல், அந்தப்புரம் வரை வந்து போயிருக்கிறான். நீங்கள் இன்னும் மீராவுக்கு செல்லம் கொடுத்துக் கொண்டிருந்தீர்களானால் நாடு அழியப்போவது உறுதி. நீங்கள் வேண்டுமானால் தேசம் அழிவதைப் பொறுக்கலாம். என்னால் முடியாது மஹராஜ்!
ஜெயமல்லும் வாளை உருவினான்.
என்ன? என்ன சொல்கிறாய் ஜெயமல்? ஒருவரை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்வாயா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ பேசுவது என் மனைவியைப் பற்றி என்பதை மறந்துவிட்டாயா?
மஹராஜ்! நாட்டுக்குக் கேடு விளைவிப்பது என் மனைவி மக்களானாலும் விடமாட்டேன் மஹராஜ்! நான் ஆதாரத்துடன்தான் பேசுகிறேன்.
என்ன ஆதாரம்?
நீங்கள் என்னுடன் வாருங்கள். காட்டுகிறேன்.
ஜெயமல்! நீ சொல்வது உண்மையில்லை என்று தெரிந்தால் உன்னை நாடு கடத்துவேன். நினைவு வைத்துக்கொள்!
நிச்சயம் மஹராஜ்! நான் சொல்வது பொய் எனில், என்னை நானே மாய்த்துக்கொள்கிறேன். யார் மீதும் அபாண்டமாகப் பழி சொல்லமாட்டேன்.
வாருங்கள் என்னுடன்.
விறுவிறுவென்று ஜெயமல் நடக்க, மிகுந்த குழப்பத்துடன் ராணா பின் தொடர்ந்தான்.
நேராக கோவிலில் சென்று கதவைத் தட்டியதும், மீரா திறந்தாள்.
என்னவாயிற்று? ஏன் நள்ளிரவில் வந்திருக்கிறீர்கள்?
அவளுக்கு பதில் சொல்லாமல், ஜெயமல், மஹராஜ்! ஸ்வாமி மீதிருக்கும் முத்துமாலையைப் பற்றிக் கேளுங்கள்.
சாவி கொடுக்கப்பட்டவனாய் ராணா கேட்க முயன்றான். அதற்குள் மீராவே, முத்து மாலையை எடுத்துக்கொண்டு வந்து ராணாவிடம் கொடுத்தாள்.
மஹராஜ்! இன்று ப்ருந்தாவனத்திலிருந்து இரண்டு ஸாதுக்கள் வந்திருந்தார்கள். கண்ணன் நமது கிரிதாரிக்காகக் கொடுத்தனுப்பியிருக்கிறான். பாருங்கள். என்றாள்.
அதைக் கையில் வாங்கிப் பார்த்த ராணா, பதக்கத்தின் பின் புறம் அக்பரின் அரச முத்திரையைக் கண்டான்.
மிகுந்த கோபத்துடன்,
இது நமது தனிக்கோவில். உனக்கு வேண்டுவதனைத்தும் அரண்மனையிலிருந்து தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். அப்படியிருக்க நீ ஏன் வெளியாள்கள் கொடுத்ததை வாங்கினாய்? அது தவறென்று தெரியாதா?
நான் அவர்களிடம் வேண்டாம் என்று சொன்னேன் மஹராஜ்! ப்ருந்தாவனத்திலிருந்து கண்ணன்..
போதும் மீரா. போதும். என்னை முட்டாளாக்காதே. இது நமது பரம எதிரியான அக்பரின் நகை.
வந்தவர்கள் யாரென்பது உனக்குத் தெரியாதா மீரா. அந்த அளவுக்கு நீ வெகுளி என்று சொல்ல விரும்புகிறாயா?
உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னிடமிருந்து நீ விலகும்போதெல்லாம் இறைவன் மீதிருந்த அன்பினால் என்று எண்ணினேன். நீ பகைவனுக்கு உதவுவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை. என்னை ஏமாற்றிவிட்டாய் மீரா.
அதைக் கேட்டதும், துடித்துப்போன மீரா, கிரிதாரீ என்று அலறிக்கொண்டு மயங்கிவிழுந்தாள்.
அவளை ஏறெடுத்தும் பாராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினான் ராணா.
மீராவிற்கு மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது சிறையில் இருப்பதை உணர்ந்தாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment