கிரிதர கோபாலா.. (18)

மீரா கிரிதாரியை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கே வந்துவிட்டாள். வழக்கம்போல், கிரிதாரிக்கான பூஜை, சேவைகள், எல்லாவற்றையும் செய்யத் துவங்கினாள்.

அரண்மனையில் இருந்த ஒருவருக்கும் இது பிடிக்கவில்லை. மறுநாள் காலை ஸாதுக்கள் கோவிலில் கூடினர். பிரபோதனத்திற்கு நேரமாகிவிட்டதே. மீராவையும் காணவில்லை, கிரிதாரியும் இல்லையே என்று தேடினர். நேரம் ஆக ஆக மீரா வராததைக் கண்டு மிகவும் வருந்தினர்.

அங்கேயே அமர்ந்து மீரா மாயி மீரா மாயி என்று கோஷமிடத் துவங்கினர். கிரிதாரியின் அழகுத் தோற்றத்தைக் காணாமலும் மீராவின் இனிமையான பாடல்களைக் கேட்காமலும் அவர்களால் இருக்க இயலவில்லை.

ஒரு மூத்த ஸாது ராணாவின் குருவான ரகுநாததாஸிடம் சென்று மீராவை சத்சங்கம் செய்ய அனுமதிக்க வேண்டி அரசனுக்கு எடுத்துச் சொல்லுமாறு விண்ணப்பித்தார்.

மக்கள் அனைவரின் மனத்திலும் மீரா இடம் பிடித்திருப்பதைக் கண்ட ரகுநாததாஸ் ராணாவிடம் சென்று,

மீரா ஒரு அப்பழுக்கற்ற ஸாது. அவளது பூஜைக்குத் தடை சொல்லாதே. மேலும் அவளால் உன் குலத்துக்கே மேன்மை ஏற்படும் என்று எடுத்துச் சொன்னார்.

ராணாவிற்கும் மீரா விரும்பிக் கேட்ட கோவிலுக்கு அவளைச் செல்லவிடாமல் தடுத்தது கஷ்டமாகத்தான் இருந்தது. குரு சொன்னதால் மறுப்பேதும் சொல்லாமல் உடனே மீராவை கோவிலுக்குச் சென்று ஸ்வாமியை ஆராதனை செய்ய அனுமதி கொடுத்தான்.

ஸாதுக்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எல்லா இடங்களிலும் மீரா ப்ரபு கிரிதாரி கீ ஜெய் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. ராணாவிற்கு ஒரு புறம் மீரா மக்கள் மனத்தில் செல்வாக்கு பெற்று வருவது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. மறுபுறம் தன்னுடைய மனைவியை அனைவரும் கொண்டாடுவது சந்தோஷமாகவும் இருந்தது.

உலக வாழ்வில் உழல்பவர்களால் ஒரு போதும் ஸாதுக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள இயலாது.

ஜெயதேவரின் மனைவி பத்மாவதியும் அவரைப் போலவே உயர்ந்த பக்தியுடையவளாக இருந்ததால் அவர்களது வாழ்க்கை தேனுடன் பால் சேர்ந்தாற்போலாயிற்று.

பகவத் ராமானுஜரின் மனைவி ஸாது ஸேவையையும், அவரது பக்தியையும் புரிந்துகொள்ளாமல் இருந்ததால், அவர் மனம், அவரை இல்லற வாழ்வைத் துறந்து ஸந்யாஸம் மேற்கொள்ளத் தூண்டியது.

இங்கு ராணாவும் மீராவின் பக்தியைப் புரிந்துகொள்ளவே இல்லை. மீரா விரும்பியபடி செய்தால், அவள் இல்லறத்தில் ஈடுபட்டு தன்னுடன் வாழத் துவங்குவாள் என்று தப்புக் கணக்குப் போட்டான்.

பெண்ணாய்ப் பிறந்துவிட்டதால் மீராவிற்கு ஸந்யாஸ வாழ்வுக்கும் அனுமதி இல்லை.

இல்லறமும் நடத்த இயலாமல், உலகாயத மக்களுக்கிடையில் வாழவும் இயலாமல், வாழ்வை முடித்துக்கொள்ளவும் முடியாமல், ஸந்யாசமும் ஏற்க முடியாமல் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தாள்.

நாளாக நாளாக என்ன செய்தாலும் மீரா கிரிதாரியைத் தவிர வேறெதிலும்‌ கவனம் செலுத்தாதையும், தன்னுடன் இல்லற வாழ்வு நடத்த அவள் தயாராக இல்லை என்பதையும் நன்றாக உணர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் இருந்த சுயநலம் விழித்துக்கொள்ள ஆரம்பித்தது.

கோவிலில் மீராவின் இனிமயான குரல் ஒலித்தது.

மேரே‌ தோ கிரிதர கோபால
தூஸரா ந கோயீ.

இவ்வளவு நாள்களாக இனித்துக்கொண்டிருந்த அந்தக் குரல் ராணாவின் காதுகளில் நாராசமாக ஒலிக்கத் துவங்கியது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37