கிரிதர கோபாலா.. (14)
இல்லறமல்லது நல்லறமன்று, முக்காலும் உண்மை. இல்லறத்தில் இருந்துகொண்டுதான் பற்பல தர்மங்களைக் கடைப்பிடிக்க இயலும். ஸாது சேவை செய்ய இயலும். தன் கடைமைகளைச் செய்துகொண்டே இறையை ஆராதிப்பதன் மூலம் ஒருவன் சுலபமாக பிறவிக்கடலைக் கடந்துவிடமுடியும்.
ஆனால், மஹான்களின் விஷயத்தில் நிலைமை வேறாக இருக்கிறது.
இவ்வுலக விஷயம் எதுவுமே ஸாதுக்களின் மனத்தில் துளியும் ஏறாது என்னும்போது இல்லறம் எங்ஙனம் சுவைக்கும்?
பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் இறையைக் காண்பவர்களால் விவஹாரங்களில் எப்படி ஈடுபட இயலும்? அவர்கள் மனத்தினால் வேறொரு தனி உலகில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.
அவர்களது அன்பு, பக்தி, செயல்பாடுகள் எதுவுமே உலகத்தார்க்குப் புரிய வாய்ப்பே இல்லை. அப்படிப் புரிந்தாலும் அது கடலின் ஒரு துளி போன்றதே.
மற்ற எல்லாப் பெண்களையும் போலத்தான் மீராவும் கணவன் வீட்டில் வாழப் போந்தாள். ஆனால், அவள் நிலைமை என்ன?
மற்ற ராணிகளுடனும், ராணாவின் சகோதரியான ஊதாவுடனும் அந்தப்புரத்தில் விடப்பட்டாள்.
இறைச் சிந்தனை துளியும் இல்லாத, லௌகீக சுகங்களிலும், வீண்வம்புகள், ஆசை, பொறாமை ஆகியவற்றிலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு நடுவில் மீராவால் ஒரு கணம் கூட நிற்க முடியவில்லை. பாதி நேரம் அவர்கள் அவளைக் கேலி பேசுவது புரியக்கூட இல்லை.
எதற்கும் பயப்படுபவள் அல்ல அவள். ஆனால், தன் நிலையைச் சொல்லிப் புரியவைக்கும் அளவுக்கு அவர்களது மனநிலை இல்லை என்பதால் அமைதி காத்தாள். மீரா வந்ததிலிருந்து எந்நேரமும் அவளை இளக்காரமாகவும், கேலியாகவும் பேசுவதே அவர்களுக்கு வேலையாகப் போயிற்று. ராணா மீராவின் மேல் வைத்திருந்த அன்பும் அவர்களைப் பொறாமை கொள்ளச் செய்தது. ராணா அருகில் வரும் சமயம் எல்லாம் மீரா சொல்லொணாத வலியை அனுபவித்தாள்.
ஆடம்பரமான ஆடை அணிகலன்களைத் தவிர்த்தாள். தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டாள். எப்போதும் ஒரு அறையில் கிரிதாரியுடன் அடைந்து கிடக்கலானாள்.
அவளுடன் பேசுவதற்கு ஒருவரும் இல்லையே என்ற கவலையெல்லாம் இல்லை.
அப்னே மந்திர் மே பைட் பைட் கர் கீதா பாகவத வாசூங்கீ
என் இடத்திலேயே அமர்ந்துகொள்வேன். கீதையையும் பாகவதத்தையும் படிப்பேன்.
ஸ்ரீ பாகவதத்தில் ஸ்ரீசுக உவாச, வ்யாஸ உவாச, நாரத உவாச, பகவான் உவாச, த்ருவ உவாச, ப்ரஹ்லாத உவாச, கஜேந்திர உவாச, என்றெல்லாம் வரும். உவாச என்றால் சொன்னார் என்று பொருள். யாரிடம் சொன்னார்கள்? யார் பாகவதம் படிக்கிறார்களோ அவர்களிடம் சொன்னார்கள்.
எனில் என்னோடுதானே பேசுகிறார்கள்? என்னோடு இந்த மனிதர்கள் பேசாவிட்டால் என்ன? நான் ஸாதுக்களுடன் பேசிக்கொண்டு சந்தோஷமாக இருப்பேன். என்று நினைத்தாள்.
ராணா மீராவைக் காண வரும்போதெல்லாம் அவள் பாகவதம் படித்துக்கொண்டோ, பாடிக்கொண்டோ, தியானம் செய்துகொண்டோ இருப்பாள். அவளைப் பார்த்ததும் இவள் தன் மனைவி என்பதையே மறந்துவிடுவான் ராணா.
அவளது தெய்வீகத் திருவுரு, ஒரே காட்சியிலேயே அவன் மனத்திலிருந்த காமத்தை அழித்துவிடும். அவனை உட்காரவைத்து பாகவதக் கதைகளையும், கண்ணனின் லீலைகளையும் அழகான பாடல்களுடன் விவரித்துச் சொல்வாள். ராணாவிற்கு சொல்லொணாத மன அமைதி கிடைத்தது.
மற்ற மனைவிகள் என்ன புகார் செய்தாலும் ராணாவிற்கு மீராவின் மீதான மரியாதை குறையவே இல்லை. மாறாக அதிகரித்தே வந்தது. மேலும் அவர்கள் மீது வெறுப்பு வரத் துவங்கியது. இவ்வளவு நல்ல பெண்மீது குறை படிக்கிறார்களே என்று கோபம் வந்தது. அலுவல் நேரம் போக மீதி நேரத்தை மீராவுடனேயே கழிக்கத் துவங்கினான்.
கூடவே இருந்தும் மீராவைப் பார்த்து மற்ற உலக விஷயங்களையோ, ஒரு கணவன் என்ற முறையிலோ பேச ராணாவிற்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அதை அவன் பெரிதாக எண்ணவும் இல்லை.
மீரா ராணாவின் அந்தரங்க அறைக்குள் செல்லவேமாட்டாள். ஆனால், சமைப்பது, உணவு படைப்பது, உட்காரவைத்துப் பாடி மகிழ்விப்பது, வீணை வாசிப்பது போன்ற அவனது எல்லாக் கட்டளைகளையும் அவன் மனம் கோணாமல் குறைவறச் செய்தாள். எது செய்தாலும் வாய் நிறைய சத்விஷயங்களைச் சொல்லிக்கொண்டே செய்வாள். மீராவால் ராணாவின் காது மட்டுமில்லாமல், மனமும் நிறைந்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment