கிரிதர கோபாலா.. (17)
ஸ்ரீவனத்தில் இருந்த நாள்கள் தேனாய் இனித்தன. ஆனால், அங்கேயே நிரந்தரமாக இருக்க முடியுமா?
அனைவரும் மேவார் திரும்பினார்கள். வந்ததும் வராததுமாக அரசாங்கப் பணிகளில் மூழ்கிவிட்டான் ராணா.
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் மீராவை வந்து பார்ப்பதையும் அவளோடு சிறிது நேரம் இருப்பதையும் தவிர்க்கவே இல்லை.
மீராவின் அழகு, அறிவு, பொறுமை, பக்தி, இசை, ஆடல், கவித்திறன் அனைத்துமே அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. அவளது மனம் கோணாமல் நடந்து எப்படியாவது அவளுடன் இல்லற வாழ்வைத் துவங்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டான். அவள் என்ன விரும்புகிறாள் என்று பார்த்து பார்த்து நிறைவேற்றினான்.
பார்வையற்றவனுக்கு ஐந்து நிமிடங்கள் பார்க்கும் திறனைக் கொடுத்து மீண்டும் பறித்துக்கொண்டாற்போலாயிற்று மீராவின் நிலை.
யாத்திரை முழுவதும் ஸாதுஸங்கம், பஜனை, க்ருஷ்ண கதாம்ருதம் என்று மூழ்கிவிட்டு, சட்டென்று அரண்மனை வாழ்வில் ஒட்டமுடியவில்லை. ஸத்ஸங்கம் இல்லாத வேதனை இப்போது பன்மடங்காகிவிட்டது.
அரண்மனைச் சூழலில் அவளால் கிரிதாரிக்கு சரியாக சேவை செய்யவும் முடியவில்லை. கிரிதாரிக்கென்று தனியாக கோவில் அமைத்துவிட்டால், அங்கே அவனது பணிகள் தடையின்றி நடைபெறும். அந்தப்புரம் என்பதால் சாதுக்களோ மற்ற ஆண்களோ அனுமதி இல்லை. கோவில் என்றால் பொது இடம் அல்லவா? ஸாதுக்கள் வரலாமே என்று நினைத்தாள்.
மெதுவாக அதை ராணாவிடம் சொன்னபோது, மிகவும் மகிழ்ந்தான்.
மீராவை மகிழ்விக்கவேண்டும். அவளுடன் இல்லறம் நடத்த வேண்டும். அவ்வளவுதான் அவனது குறிக்கோள்.
பெரிய தோட்டத்தினுள் மிக அழகான வேலைப்படுகளுடன் பளிங்குக் கற்களால் ஆன கோவில் தயாராயிற்று. கோவிலைச் சுற்றி பல்வேறு வகையான வண்ண மலர்கள் பூக்கும் செடி கொடிகளுடன் தோட்டம். தோட்டத்தில் மான், மயில், குயில், கிளிகள் குருவிகள் அனைத்தும் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. மீரா கோவிலில் அமர்ந்து பஜனை செய்யத் துவங்கினாள்.
தினமும் ஆயிரக் கணக்கான ஸாதுக்கள் வரத் துவங்கினர். அதிலும் பெண்கள் மற்றும் ஆண்களில் வயதானவர்கள் அல்லது சிறுவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஊரெங்கும் மீராவின் புகழ் பரவலாயிற்று. மீரா மாயி, மீரா மாயி என்று அனைவரும் உருகினர்.
மீராவின் பாடல்கள் நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்கத் துவங்கின.
பொறாமைத் தீயால் மற்ற ராணிகள் ஊதாவிடம் சொல்ல, ஊதா ராணாவின் தம்பியான ஜெயமல்லிடம் சொல்லி இதை நிறுத்தும்படி சொன்னாள்.
ஜெயமல் அண்ணனிடம் பேசப்போனான்
மீராவைப் பற்றி எது சொன்னாலும் ராணா காதில் வாங்கவே மாட்டான் என்று தெரிந்திருந்ததால் தயங்கி தயங்கிச் சொன்னான்.
ஒரு ராஜபுத்ர ராணியாக இருந்துகொண்டு பொது மக்கள் முன்னிலையில் ஆடிப் பாடுவதெல்லாம் சரியா? அரண்மனைக்குள்ளேயே என்றால் பரவாயில்லை என்று இழுத்தான்.
அவ்வளவுதானே. நான் மீராவிடம் சொல்கிறேன். நீ போகலாம்.
ராணா மீராவைப் பார்த்து இதை எப்படிச் சொல்வதென்று தயங்கினான்.
மீரா, ஒரு வேண்டுகோள்.
நான் தங்கள் அடிமை மஹராஜ். உத்தரவிடுங்கள்.
ராஜபுத்ர வம்சத்தின் மஹாராணி நீ. பொதுமக்கள் முன்பாக ஆடிப் பாடுவதை பெரியவர்கள் ஏற்கமாட்டார்கள் மீரா.
மீரா வருந்தவில்லை. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி மஹராஜ். நானே உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன். நான் அரண்மனைக்குள்ளேயே கிரிதாரியை வைத்துக்கொள்கிறேன்.
உடனேயே கிரிதாரியைத் தூக்கிக்கொண்டு அரண்மனைக்கே வந்துவிட்டாள் மீரா.
அவ்வளவுதான் இனி இரவெல்லாம் பாடி உயிரெடுப்பாள். நமது தூக்கம் போயிற்று என்று புலம்பினார்கள் ராணிகள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment