கிரிதர கோபாலா.. (13)
மீரா ஏற்கனவே அழகு. அவளைத் தோழியர் அலங்காரம் செய்யப்போய் தேவலோகத்துப் பெண்ணைப் போல் ஆகிவிட்டாள்.
கண்டவர் உள்ளம் கொள்ளை போகும் பேரழகு. அவளோ வேறு உலகத்தில் இருந்தாள். மீராவுக்கு இன்று கண்ணனுக்கும் தனக்கும் திருமணம் என்றே நினைவு. கண்ணனையும் மிக அழகாக அலங்காரம் செய்தாள்.
மணப்பெண்ணான நானே உனக்கு அலங்காரம் செய்யவேண்டியிருக்கிறது. உன் சார்பில் யாரும் கல்யாணத்துக்கு வரவே இல்லை பார் என்று கண்ணனைப் பகடி பேசினாள்.
மணமேடைக்கு வரும்போது கண்ணனைத் தூக்கிக்கொண்டு வந்தாள். மற்றவர்கள் அனைவரும் கண்ணனை வைத்து விட்டு வரச் சொல்லி வற்புறுத்த, தூதாராவிற்கோ அவள் மணமேடைக்கு வந்தால் போதும் என்றிருந்தது.
எனவே அவள் இஷ்டம் போல் விடுங்கள். ஒன்றும் சொல்லவேண்டாம். கண்ணனோடு வரட்டும். மாலை மாற்றும்போது யாராவது கண்ணனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.
ஸ்வர்கலோகமோ என்னும்படியான மணமேடையில் ராணா ஏற்கனவே அமர்ந்திருக்க, மீராவும் அமர்த்தப்பட்டாள். அவர்களது வழக்கப்படி மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் நடுவில் திரையிடப்பட்டிருந்தது. மெல்லிய திரையின் வழியே மீராவைப் பார்த்ததற்கே ராணா மயங்கிப் போனான். திருமணச் சடங்குகள் நடந்தேறின.
மாலை மாற்றும் சமயம், திரையை விலக்கியதும் ராணாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. இவ்வளவு பேரழகா? எவ்வளவு தெய்வீகமாக இருக்கிறாள்? தாமரைப் பூபோன்ற நிறம், மஹாலக்ஷ்மியே உருவெடுத்து வந்து அருகில் அமர்ந்திருப்பதாய் எண்ணினான்.
மாலை மீராவின் கைகளில் கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளையின் கழுத்தில் போடு மீரா என்று தூதாராவ் சொன்னதும், அழகாக மாலையை கிரிதாரியின் கழுத்தில் போட்டாள் மீரா. சபையே 'ஹா' என்ற சப்தத்துடன் ஸ்தம்பித்தது.
மீரா அவ்வாறு செய்தது அனைவரையும் முகம் சுளிக்கவைத்தது. கசமுசவென்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். தூதாராவிற்கு அவமானமாகப் போய்விட்டது.
ஆனால், ராணாவின் நிலை வேறு. அவன் மீராவின் அழகில் பைத்தியமாகியிருந்தான். அவளது பக்தியும் அவனுக்குப் பிடித்திருந்தது. தன் கழுத்தில் மீரா மாலையிடவில்லை என்பது ஒரு விஷயமாகவே அவனுக்குத் தோன்றவில்லை.
ஹிஹி என்று அசடு வழிந்து, அதனால் என்ன பரவாயில்லை. திருமணச் சடங்குகள்தான் முடிந்துவிட்டதே , அவள் விருப்பப்படி இருக்கட்டும். கண்ணனுக்கே மாலை இடட்டும். என்று சொல்லி, இன்னொரு மாலையையும் கொடுத்து இதையும் கண்ணனுக்குப் போடு மீரா என்று சொல்ல, அதையும் வாங்கி கிரிதாரிக்கு சூட்டினாள் மீரா.
திருமணம் முடிந்தது. ஊரே மீராவின் செயலை விமர்சனம் செய்து கொண்டிருந்தது, அவை எதையும் அறிந்திராத மீரா, கண்ணனுக்கும் தனக்கும் ஊர்கூடித் திருமணம் நடந்துவிட்டதாக நம்பினாள். அவளுக்கு சுய உணர்வு வர வெகு நேரமாயிற்று.
ராணாவுடன் மீரா மேவார் கிளம்பினாள்.
மீராவின் செயல் அவமானமாக இருந்தாலும், அவளது விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்துவிட்டோமே. அங்கே சென்றபிறகும், இந்தப் பெண் இதே மாதிரி நடந்துகொண்டால், கஷ்டப்படுவாளே என்று நினைக்க நினைக்க தூதாராவிற்கு துக்கம் பொங்கியது.
ஒருபுறம் தூக்கி வளர்த்த குழந்தையைப் பிரியவேண்டும். மற்றொருபுறம், போகும் இடத்தில் அவள் மகிழ்ச்சியாக இருப்பாளா என்ற ஐயம், வளர்த்த நானே புரிந்துகொள்ளவில்லை. புதிய மனிதர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்? பொங்கிப் பொங்கி அழுதார். மீராவிடம் மன்னிப்பு வேண்டினார்.
அவளோ, தாத்தா, எல்லாமே கண்ணன் விருப்பப்படிதான் நடக்கும். நீங்க கவலைப் படாதீங்க. நான் சந்தோஷமாதான் இருப்பேன். என்ன ஆனாலும் கிரிதாரியைப் பிரியமாட்டேன். என்று தாத்தாவின் கண்ணைத் துடைத்துவிட்டாள்.
மீராவிற்கு ஒரு தனிப் பல்லக்கு. அதில் கிரிதாரியுடன் அவள் பயணிக்க, ராணா இன்னொரு தேரில் சென்றான். ராணாவின் உறவினர்களும்,மற்ற ராணிகளும் தனித்தனிப் பல்லக்கில் வந்தார்கள். வீரர்களும், சீர்வரிசைகளும் புடை சூழ சித்தோடை விட்டுக் கிளம்பினார்கள்.
மீராவிற்குத் தான் கண்ணனைத் திருமணம் செய்துகொண்டு அவனது வீட்டிற்கு வாழச் செல்கிறோம் என்ற எண்ணமே இருந்தது.
மை கிரிதர் கே கர் ஜாவூம்
கிரிதர ம்ஹாரோ ஸாம்சோ ப்ரீதம
கிரிதாரியின் வீட்டிற்கு செல்கிறேன் நான்
என் இன்னுயிராக விளங்கிடும் அந்த
ஆனந்தமாகப் பாடிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment