கிரிதர கோபாலா.. (30)

மிக அழகாகத் தன்னைப் பணிப்பெண்கள் அலங்கரிக்கத் துவங்கியபோதிலிருந்தே மீராவிற்குத் தான் இன்று கண்ணனுடனும் ராதையுடனும் ராஸத்தில் பங்கேற்கப் போகிறோம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

தர்பாருக்குப் போகும் வழியில் பாதியில் குழலிசை கேட்டு ஓடிவந்தவள் ராஸ நடனம் என்ற நினைவிலேயே பாடி ஆடத் துவங்கினாள்.

கோவிந்த கிரிதாரி - ராஜ
கோபால கிரிதாரி
கிரிதாரி கிரிதாரி
கோவர்தன கிரிதாரி

என்ற நாமாவளியை சுழன்று ஆடிக்கொண்டு மீரா பாட, ஸாதுக்கள் வாங்கிப் பாட, அதன் ஒலி விண்ணை எட்டியது.

ராணா கோவிலை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டதும், காவலர்கள் பீரங்கிகளுடன் விரைந்து வந்து கோவிலைச் சூழ்ந்தனர்.

உள்ளிருக்கும் ஸாதுக்களை வெளியேற்றிவிட்டு இடிக்கலாம் என்று படைத்தலைவன் சொன்னதும், பலர் சென்று ஸாதுக்களை வெளியில் வரும்படி அழைத்தனர்.

கீர்த்தனத்தின் இனிமையிலும், தெய்வீகத் தன்மையிலும் மூழ்கியிருந்த ஸாதுக்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் அவற்றையெல்லாம் உணரவும் இல்லை. உத்தமமான மஹாத்மாவுடன் ஸத்ஸங்கத்தில்‌ ஈடுபடுபவர்க்கு இந்நிலை எளிதாக அமைந்து விடுகிறது.

அழைத்தழைத்துப் பார்த்தும், பலமுறை எச்சரிக்கைகள் விடுத்தும் எந்த ஸாதுவும் மீராவின் சத்சங்கத்தை விட்டு வெளியில் வருவதாக இல்லை.

அரசரின் உத்தரவைச் செயல்படுத்தாவிடில் தங்களுக்கும்‌ தண்டனை கிடைக்கும். கீர்த்தனம் முடிந்தபின் கோவிலை இடிக்கலாம் என்றால், அது எப்போது முடியும் என்றே தெரியவில்லை. மீராவின் ஸத்ஸங்கம் நாள்‌ முழுதும் நீடிக்கக்கூடியது.

படைத்தலைவன் தயங்கியபோது, ராணா அவ்விடம் வந்துவிட்டான். ம்ம்.. ஆகட்டும்.. ஆகட்டும்... என்று ராணா உத்தரவிட,
பீரங்கிகளிலிருந்து கோவிலை நோக்கி குண்டு மழை பொழியத் துவங்கியது.

ராணா மீராவிற்காகப் பார்த்து பார்த்துக் கட்டிய கோவிலைத் தானே இடிக்க உத்தரவிட்டான். கோவிலின் மதில்கள், சுவர்கள், தூண்கள், கோபுரம் ஒவ்வொன்றாகப் பெருத்த சத்தத்துடன் புழுதியைக் கிளப்பிக்கொண்டு விழுந்து கொண்டிருந்தன.

உள்ளே‌ இருந்த அத்தனை ஸாதுக்களும் கிரிதாரியின் பெயரைச் சொல்லியபடியே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

வெளியில் சத்தம் கேட்டுப் பெரிய கும்பல் கூடிவிட்டது. அவர்கள் ராணா ஒழிக! என்று கூச்சலிடத் துவங்க, காவலர்கள் அவர்களை அடித்து விரட்டினர். கோவில் தரை மட்டமாகியது.

அங்கே மீரா உள்பட ஒருவரும் உயிருடன் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் ராணா அரண்மனைக்குச் சென்றான்.

வெகுநேரம் கழித்து ஒரு தூணுக்கடியில் கிரிதாரியைக் கட்டிக்கொண்டு விழுந்திருந்த மீராவிற்கு உணர்வு வந்தது. தூண் அவள் மீது படாமல் அவளைக் காப்பதுபோல் விழுந்திருந்தது.

சிறிய கீறல்கூட இல்லாமல் மீரா கிரிதாரியுடன் எழுந்து மெதுவாக வெளியில் வந்தாள்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று நினைவு படுத்திக்கொள்ளவே வெகு நேரமாயிற்று.

அச்சோ! கோவிலில் என்னுடன் நூற்றுக்கணக்கான ஸாதுக்கள் இருந்தார்களே! என்ற நினைவு வந்தபோது சொரேல் என்றது. அங்குமிங்கும் ஓடிச் சென்று பார்த்தபோது நிறைய ஸாதுக்கள் இறந்துபட்டிருப்பதை உணர்ந்தாள். மீராவின் தலைமேல்‌ இடிவிழுந்தாற் போலிருந்தது.

ஹே! ப்ரபோ! கிரிதாரி! நந்தலாலா! மலை தாங்கினாயே! கோபாலா! இதென்ன கொடுமை! என் பொருட்டு இத்தனை ஸாதுக்களும் இறந்துவிட்டார்களே!
கதறினாள், அழுதாள், புரண்டாள்.

இடிபோன்ற குரலில் கிரிதாரி அவளுடன் பேசினான்.
மீரா! அழாதே! இதுவும் என் லீலைதான். இவர்கள் அனைவரையும் வைகுண்டம்‌ அழைத்துக் கொண்டேன். உன்னோடு ஸத்ஸங்கத்தில்‌ ஈடுபட்டவர்களுக்கு வினைப்பயன் ஏது மீரா? அத்தனை பேரும் என்னை வந்தடைந்துவிட்டனர்.

பின் ஏன் என்னை மட்டும் விட்டுவிட்டீர்கள் ப்ரபோ? என்னையும் சேர்த்துக் கொண்டிருக்கலாமே! நான் தங்களுடைய அடியாள் இல்லையா? இத்தனை பேர் வைகுண்டம் வரும்போது என்னை ஏற்றிருக்கலாமே!

மீரா! உனக்கு பூமியில் இன்னும் வேலைகள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் நினைவில் கொள் மீரா. நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். அனைத்தும் என் லீலைதான்.

கிரிதாரி மறைந்ததும், சற்று நேரம் மீரா ப்ரமை பிடித்ததுபோல் அமர்ந்திருந்தாள்.

என்னதான் கிரிதாரியின் லீலை என்றாலும், இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் இறந்துபோயொருந்த ஸாதுக்களின் திருவுடல்களைப் பார்த்ததும் அவளால் தாங்கவே முடியவில்லை.

தன்னைக் கொல்ல முடிவுசெய்து பீரங்கியை ஏவி, தான் இறந்துவிட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் ராணாவிற்கு இனியும் தான் கட்டுப்பட வேண்டியதில்லை. இவ்வாறு எண்ணிய மீரா, கிரிதாரியை இறுக்கிக் கட்டிக்கொண்டு, இருள் கவிந்த அப்பொழுதில் அங்கிருந்து வெளியே நடக்கத் துவங்கினாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37