கிரிதர கோபாலா.. (15)

ராணாவின் ராணிகள் மீராவைப் பற்றி அவனிடம் புகார் சொல்ல முயன்றனர். ராணா எதையும் காதில் வாங்கவேமாட்டான். மேலும், மீராவின் பக்தியைப் புரிந்துகொள்ள உங்களால் இயலாது. அவளைப் பற்றி என்னிடம் புகார் சொல்லவேண்டாம் என்று அடக்கிவிடுவான். அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போனதோடு மீராவின் மேல் பொறாமை கொழுந்து விட்டெரிந்தது.

ராணா அருகில் இல்லாத சமயங்களில் மற்ற ராணிகளும், ஊதாவும் மீராவைச் சொற்கணைகளால் துளைத்தெடுத்தனர்.

கணவனை மகிழ்விக்காதவள் எல்லாம் ஒரு பெண்ணா?

விருப்பமில்லை என்றால் எதற்குத் திருமணம் செய்துகொண்டாய்?

உலக விஷயங்களையே ஒருத்தி வெறுக்கும் அளவுக்கு பக்தி வந்துவிட்டதா? இதெல்லாம் பக்தியில் சேர்த்தியா?

கண்ணனிடமிருந்து பிரிந்ததால் பாலும் கசந்தது, உணவு செல்லவில்லை என்று பாட்டு வேறு பாடுகிறாள்.

கண்ணனா? யாரது?

இறைவனாம்? கணவனைத் தவிர பெண்ணுக்கு இன்னொரு இறைவன் உண்டா என்ன?

நமக்கு மட்டும் பக்தி இல்லையா? நாமெல்லாம் சந்தோஷமாக வாழவில்லை? இவள் எப்போது பார்த்தாலும் அழுகிறாள். அதுவா பக்தி?

இறைவனை நினைத்து இப்படியெல்லாம் யாராவது அழமுடியுமா? கல்யாணத்திற்கு முன் யாராவது காதலன் இருந்திருப்பான். அவனை நினைத்து அழுகிறாள்.

அசோக வனத்தில் அரக்கிகளின் நடுவே மாட்டிக்கொண்ட சீதையைப் போலாயிற்று மீராவின் நிலை.

இதையெல்லாம் கேட்டு கண்ணனிடம் சென்று அழுதால், ஊதா வந்து, இங்கே அரண்மனையில் இவ்வளவு வசதியாக வாழ்க்கைப்பட்டும், ஏதோ பாலைவனத்தில் விட்டமாதிரி எதற்கு அழுகிறாய்? என்று திட்டுவாள்.

அழுவதற்குக்கூட மீராவிற்குச் சுதந்திரம் இல்லை.

மீரா கண்ணனுக்காக சந்தனம் அரைக்கத் துவங்கினால், இதெல்லாம் பெண்கள் செய்யலாமா? அவ்வளவுதான், இறைவனுக்குக் கோபம் வரும்.

தம்பூராவை மீட்டப்போனால், எப்போது பார்த்தாலும் டொய்ங் டொய்ங் என்று சத்தம். வேறு வேலையே இல்லையா? காது வலிக்கிறது.

ஆடுவதற்காக சலங்கையை எடுத்தால், அரசிகள் இவ்வாறு ஆடலாமா? அதுவும் நாட்டியக்காரிகளைப் போல் குதித்து ஆடுகிறாள். குடும்பத்திற்கே ஆகாது.

எதற்கெடுத்தாலும் திட்டத் துவங்கினர்.

அவளருகில் யாரும் போகவேண்டாம் என்று எச்சரித்தனர்.

மீராவிற்கு தாத்தாவின் வீட்டில் தான் சந்தோஷமாக கண்ணன் முன்னால் ஆடிப் பாடியது நினைவு வர, கண்ணீர் பெருகியது.

ராணா வந்த சமயம், மீராவின் கண்களில் கண்ணீரைப் பார்த்து துடித்துப்போனான்.

மீரா உனக்கு இங்கு ஏதாவது கஷ்டமா? நான் உன் விருப்பப்படி நடக்கவில்லையா? உனக்கு என்ன குறை மீரா? என்னிடம் சொல். நிவர்த்தி செய்கிறேன்.

எனக்கு ஒரு குறைவும் இல்லை மஹராஜ். நீங்கள் இருக்கும் போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.

வேறென்ன மீரா? உனக்குக் குறையில்லாமல் பார்த்துக் கொள்வது என் கடைமை.

எனக்கு இங்கே ஸாது சங்கம் இல்லை மஹராஜ்.

அவ்வளவுதானே. எனக்கும் உன்னோடு ஸத்ஸங்கத்தில் ஈடுபடவில்லையே என்று கஷ்டமாக இருக்கிறது. அரசாங்க காரியங்கள் அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் சிலகாலம் அமைச்சர்களிடம் விட்டு விடுகிறேன். அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். ஸாதுக்களுடன் சேர்ந்து நாம் ஒரு தீர்த்த யாத்திரை போய் வரலாம். உனக்கு சந்தோஷமா மீரா.

மிக்க‌ மகிழ்ச்சி. சிறு வயது முதல் எனக்கு ப்ருந்தாவனம் போகவேண்டும் என்று ஆசை. நீங்கள் அழைத்துப்போவீர்களா?

அவசியம் போவோம் மீரா. அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன்.
நீ மகிழ்ச்சியுடன் இருந்தால் போதும்.

மீராவிற்கு சந்தோஷமாக இருந்தாலும் ராணாவை நினைத்து பரிதாபமாக இருந்தது. என்னைப்போல் ஒருத்தியிடமிருந்து எந்த சுகமும் கிடைக்காத நிலையிலும் மிகவும் அன்போடு ராணா இருப்பதற்கு கண்ணனின் கருணையே காரணம் என்று நம்பினாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37