கிரிதர கோபாலா.. (19)
மீராவிற்கு உலக வாழ்வைப் பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லை. அவளால் அதைப் பற்றி சிந்திக்கவும் முடியவில்லை.
ராணாவின் மனைவிகளுக்கும் ஊதாவிற்கும் மீரா பேசுபொருள் ஆனாள்.
அவர்கள் ஜெயமல்லைத் தூண்டிவிட, அவன் ராணாவிடம் வந்து நின்றான்.
ராணாவிற்கு மீரா செய்வது பிடிக்கவில்லை என்றாலும், அவளைப் பற்றிய புகார்களை அவன் மனம் ஏற்கவில்லை.
ஜெயமல்லின் முகத்தைப் பார்த்ததுமே மீராவைப் பற்றிப் புகார் சொல்லப்போகிறாய் என்றால் பேசாமல் சென்றுவிடு. எதையும் நான் கேட்கத் தயாரில்லை என்றான்.
ஜெயமல்லோ, முக்கியமான அரசாங்க விஷயங்களையோ, சங்கடம் தரும் செயல்களையோ உங்களைத் தவிர வேறு நான் வேறு யாரிடம் சொல்வது என்று கேட்டான்.
வேறு வழியின்றி ராணா,
சீக்கிரம் சொல் என்றவுடன்
ஜெயமல் தன் வார்த்தை ஜாலத்தைத் துவங்கினான்.
அண்ணா, மீரா பொது மக்கள் முன்னால் ஆடிப் பாடுவது குலத்திற்கே விரோதம். அதுகூடப் பரவாயில்லை. இரவெல்லாம் கோவிலிலேயே தங்குகிறாள். நேற்று நள்ளிரவு நான் கோவிலின் அருகே சென்று கொண்டிருந்தபோது அவள் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.
கோவிலின் ஆராதனைகள் முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர். கோவில் சாத்தியபின்பு இவள் யாருடன் பேசுகிறாள் என்றறிய முற்பட்டேன். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் வேண்டுமானால் இன்று நள்ளிரவில் சென்று சோதனை செய்து பாருங்கள்.
அவ்வளவுதான். நான் வருகிறேன். என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்.
மீராவின் இயல்பு ராணாவிற்கு நன்றாகத் தெரிந்தபோதிலும், சந்தேக நெருப்பு நெஞ்சில் விழுந்துவிட்டது.
மீரா அப்படிச் செய்யமாட்டாள் என்று ஒரு மனம் அடித்துச் சொன்னபோதிலும், ஒருக்கால் அப்படி இருந்தால்? நான் என்ன செய்தாலும் மீரா என்னை சட்டை செய்வதே இல்லையே. வேறு யாருடனாவது தொடர்பு இருக்குமோ என்று இன்னொரு மனம் கேட்டது.
மிகவும் படபடப்புடன் அன்று நள்ளிரவில் கோவிலுக்குச் சென்றான் ராணா.
கோவிலில் அனைவரும் சென்று விட்டனர். நடை சாத்தப்பட்டிருந்தது. கதவின் மேல் காதை வைத்துக் கேட்டான்.
நான் திருமணமானவள். என் புடைவையை இழுக்கலாமா?
மீராவின் குரல் கேட்டது.
ராணாவின் கண்கள் சிவந்தன. கோபம் தலைக்கேறியது. உருவிய வாளுடன் கதவைத் தள்ளிக்கொண்டு வேகமாக உள்ளே சென்றான்.
அங்கே மீரா கிரிதாரியிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவளது புடைவை கிரிதாரியின் புல்லாங்குழலில் மாட்டிக்கொண்டிருந்தது.
அதைக் கண்டதும் ராணா அவமானத்தாலும் வெட்கத்தாலும் தலையைக் குனிந்து கொண்டான். வாள் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது.
மன்னித்துவிடு மீரா..
மன்னித்துவிடு மீரா..
ராணாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
என்னவாயிற்று மஹராஜ்? நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்?
நான் உன்னைத் தவறாக எண்ணிவிட்டேன்.
நீ யாரோ பரபுருஷனுடன் பேசுகிறாய் என்றெண்ணினேன். உன் தொடர்பனைத்தும் பரமபுருஷனோடு மட்டுமே இருக்கிறது. நீ குழந்தையைப் போன்றவள் மீரா. இவ்வுலக வாழ்வின் சூது வாதுகளை அறியாதவள். என்னை மன்னித்துவிடு மீரா என்றான்.
மஹராஜ், இதுவும் கிரிதாரியின் லீலைதான். பரவாயில்லை.
ஆனாலும், மீரா, நீ இனி பஜனை செய்யவேண்டாம்.
மீராவின் தலையில் இடி விழுந்தது போலிருந்தது.
நீங்கள் இப்படிச் சொல்லக்கூடாது மஹராஜ். கிரிதாரியைப் பாடாமல் எப்படி இருப்பேன்.
அதெல்லாம் தெரியாது மீரா. இனி நீ பஜனை செய்யவேண்டாம். இது என் உத்தரவு.
ராணா சென்று விட்டான்.
என்ன செய்வாள் மீரா..
கிரிதாரியின் சரணத்தைக் கட்டிக் கொண்டாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment