கிரிதர கோபாலா.. (24)
சிறையில் அழுதழுது சிவந்த கண்களுடனும், அழுக்கடைந்த மேனியுடனும், உணவு, உறக்கம் ஏதுமின்றிக் கிடந்தாள் மீரா. சில சமயம் கடின ஹ்ருதயம் கொண்ட ஊதாவிற்குக் கூட அவள் மீது இரக்கம் வந்தது.
ஆனால், ராணா அவளைச் சென்று பார்க்கக்கூட விரும்பவில்லை. பார்த்தால் தன் மனம் மாறிவிடுமோ என்று அஞ்சினான் போலும்.
ஜெயமல் இல்லாமல் அரசாங்க விஷயங்களைக் கவனிக்க அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனால் எதிலும் ஈடுபடவும் முடியவில்லை. நிம்மதியின்றித் தவித்தான் ராணா. ஆனால், அதற்கு பரம பக்தையான மீராவைத் துன்புறுத்துவதுதான் காரணம் என்று அவன் உணரவில்லை.
சந்தேகமும், கோபமும் அவனது கண்களை மறைத்தன. மீராவால்தான் தன் நிம்மதி போயிற்று என்று நினைத்தான். அவள் இறந்த செய்தி கேட்டால் ஜெயமல் எங்கிருந்தாலும் திரும்பி வந்துவிடுவான் என்று நினைத்தான்.
யாருக்கும் தெரியாமல் தந்திரமாகக் கொன்றுவிடலாம் என்று திட்டமிட்டான். ஒரு பெட்டியில் கடும் விஷமுள்ள பூநாகத்தை வைத்து அதை ஊதாவிடம் கொடுத்தான்.
சிறையில் இருப்பதால் கிரிதாரி விக்ரஹத்தை அவளால் பூஜை செய்ய முடியாது. எனவே கிரிதாரியின் ரூபமாக இருக்கும் சாளக்ராமத்தை வைத்துக்கொள் என்று சொல்லச் சொல்லிக் கொடுக்கச் செய்தான்.
ஊதா மீராவிடம் பெட்டியைக் கொடுத்ததும், அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள் மீரா.
கிரிதாரி, கிரிதாரி நீ வந்துவிட்டாயா? நீ எந்த உருவில் இருந்தால் என்ன? நீ என் கிரிதாரிதான். என்னைத் தேடி வந்துவிட்டாயே.
பெட்டியைத் தலையில் வைத்துக் கொண்டாடினாள்.
கன்னத்திலும் நெஞ்சிலும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டாள்.
மெல்ல பெட்டியைத் திறந்தாள். அதில் பூநாகம் இல்லை. ஒரு அழகான க்ருஷ்ண சாளக்ராமம் இருந்தது.
கண்ணீராலேயே திருமஞ்சனம் செய்தாள். இன்றும் அந்த சாளக்ராமத்தை ப்ருந்தாவனத்தில் மீரா தங்கியிருந்த வீட்டில் காணலாம். அதில் மீராவின் கண்ணீர் பட்ட அடையாளங்களும் உள்ளன.
பாம்புக்கு பதில் நிஜமாகவே சாளக்ராமம் இருப்பதைக் கண்டு ஊதா திகைத்தாள். அவளுக்கு மீராவைப் பார்க்கவே பயமாக இருந்தது. ஓடோடிப்போய் அண்ணனிடம் சொன்னாள்.
ஆனால், ராணா அதை நம்பவே இல்லை.
உனக்கு மீராவின் மீது கருணை வந்துவிட்டது ஊதா. அவள் அழுகையைப் பார்த்து மனமிரங்கி நீ பாம்பை மாற்றிவிட்டாய். பாம்பைப் பெட்டிக்குள் வைப்பதை நானே நேரில் உறுதி செய்தபின்தான் கொடுத்தனுப்பினேன்.
பெட்டியைத் திறந்தவுடன் கொட்டிவிடும். கொட்டினால் அடுத்த கணமே உயிர் போகும் அளவு விஷமுள்ள பாம்பு அது. அதெப்படி சாளக்ராமக்கல்லாக மாறும். என்றான்.
மிகுந்த குழப்பத்துடன்
அடுத்த நாள் ஊதாவிடம், ஒரு கிண்ணத்தில் பாலைக் கொடுத்து, அதில் தன் கையாலேயே கடுமையான விஷத்தை ஊற்றினான். ஊதாவிடம் இதைக் கொண்டுபோய் கிரிதாரி பிரசாதம் என்று சொல்லிக் கொடு என்றான்.
ஊதாவிற்கு பயமாக இருந்தாலும், ராணாவின் சொல்லைத் தட்டமுடியவில்லை.
மீரா, நீ வெகுநாள்களாக ஒன்றும் சாப்பிடவே இல்லை. இது கிரிதாரியின் பிரசாதப் பால். அரசர் கொடுக்கச் சொன்னார்.
மீரா பால் கிண்ணத்தைக் கையில் வாங்கினாள். கிரிதாரி பிரசாதமா? அரசர் கொடுத்தனுப்பினாரா? ஓ.. கிரிதாரியும் அரசரும் போட்டி போட்டுக் கொண்டு என்மீது கருணை செய்கிறார்கள் என்றாள்.
பாலின் மீது வட்டமாக மிதந்த விஷத்தைப் பார்த்தாள்.
ஓ.. கிரிதாரி! உன் நீலமேனியின் வண்ணம் உன் பிரசாதத்தில் எதிரொளிக்கிறதே. என்னே என் பாக்யம்! என்றாள்.
கடகடவென்று ஒரேமூச்சில் குடித்தாள்.
விஷ் கா ப்யாளா ராணாஜி னே பேஜா
பீவத மீரா ஹாம்சீரே
பக குங்கரு ரே!
தன்னை மறந்து ஆடத்துவங்கினாள்.
ஊதாவிற்குத் தலை சுற்றிக்கொண்டு வந்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment