கிரிதர கோபாலா.. (21)
ஸாதுக்கள் அனைவரும் சென்றதும், கோவிலின் கதவை சாத்துவதற்காகச் சென்ற மீரா, கதவின் அருகில் இரண்டு பெரியவர்கள் நிற்பதைக் கண்டாள்.
கிரிதாரிக்கு ஜெய்! ஜெய் கோவர்தன கிரிதர லால் கீ! ஜெய்!
மீராவைப் பார்த்ததும் இருவரும் கோஷமிட்டனர்.
என்ன வேண்டும்?
சத்சங்கம் முடிந்துவிட்டது. நாளை வாருங்கள்.
நீங்கள் மிக அழகாகப் பாடுகிறீர்கள்.
கிரிதாரியைப் பற்றி யார் பாடினாலும் அழகாகத்தான் இருக்கும்.
நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம். உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம்.
என்னைப் பற்றிக் கேள்விப்பட என்ன இருக்கிறது? நீங்கள் போகலாம். இது தனியார்க் கோவில். பொதுக்கோவில் அல்ல. இங்கு குறிப்பிட்ட நேரத்திற்குப்பின் இருக்க அனுமதி இல்லை. போய் வாருங்கள்.
கிரிதாரிக்காக ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறோம்.
மீண்டும் சொல்கிறேன், இது அரசரின் தனிக் கோவில். இங்கு நாங்கள் வெளியாரிடமிருந்து எதையும் வாங்கிக் கொள்வதில்லை. கோவிலின் தேவைகள் அனைத்தும் அரசாங்கமே பூர்த்தி செய்துவிடும். வெளியில் யாரிடமிருந்தாவது எதையாவது வாங்கினால் அது குற்றமாகும். நீங்கள் அதை வேறு கோவிலில் கொடுத்துவிடுங்கள்.
நாங்கள் ப்ருந்தாவனம் சென்றிருந்தோம் மா. அங்கிருந்து நேராக இங்குதான் வருகிறோம்.
ப்ருந்தாவனம் என்ற சொல் மீராவை அங்கெயே அழைத்துச் சென்றுவிட்டது.
ப்ருந்தாவனமா? நான் எப்போது செல்வேனோ? கண்ணனைக் காண்பேனா?
எங்கு காண்பேனோ? உன்னை நான் என்று காண்பேனோ? கண்ணா
முரளீதர கோபாலா
உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா? பெரியவர் தொடர்ந்தார்.
என்ன?
நாங்கள் ப்ருந்தாவனம் சென்றிருந்தபோது கண்ணன் எங்கள் முன் தோன்றினானம்மா.
நிஜமாகவா? கண்ணனா? அவனைப் பார்த்தீர்களா? நீங்கள் எவ்வளவு பாக்யம் செய்தவர்கள். உங்களைப் பார்த்ததே புண்ணியம்.
ஆமாம் மா. ஸத்தியமாகப் பார்த்தோம். அப்போது, இந்த முத்து மாலையை கண்ணன் எங்களிடம் கொடுத்தான். தங்களது கிரிதாரிக்காகக் கொடுத்ததாகச் சொன்னான். இது கண்ணன் ப்ரசாதம். உங்களுக்கில்லை. கிரிதாரிக்காகத்தான். மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள்.
மீராவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
சற்று யோசித்தாள். பின்னர், சரி, கண்ணன் ப்ரசாதம் என்பதால் வாங்கிக்கொள்கிறேன் என்று வாங்கினாள்.
மிக அழகான முத்துமாலை. அதைப் பார்க்கக்கூட இல்லை. நேராக கொண்டுபோய் கிரிதாரிக்கு சாற்றினாள்.
சரி நீங்கள் போய் வாருங்கள் என்று சொல்லி, இரண்டு பழங்களைப் ப்ரசாதமாகக் கொடுத்து அனுப்பிவிட்டாள்.
வெளியில் வந்த இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. மீராவைப் பார்த்தாயிற்று. தனிமையில் பேசியாயிற்று. பரிசும் கொடுத்தாயிற்று.
அவளது பாடலின் இனிமையைப் புகழ்ந்துகொண்டே மேவாரின் எல்லை வரை வந்தனர். எல்லை கடந்ததும், முன்பு சென்ற அதே மண்டபத்தில் சென்று அரச உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினர்.
கோவில் சாத்தியபிறகு மீரா என்ன செய்கிறாள் என்பதைக் கண்காணிக்க தனியாக ஒற்றர்களை நியமித்திருந்தான் ஜெயமல்.
யாரோ இருவர், எல்லாரும் சென்றபின் கோவிலில் இருக்கிறார்கள் என்ற செய்தி அவனுக்குப் பறந்தது. அடுத்த கணம் ஜெயமல் வந்துவிட்டான். மறைந்திருந்து அவர்களைத் தொடர்ந்தவன், அவர்கள் மேவார் எல்லையைக் கடந்து உடை மாற்றிக்கொண்டதைப் பார்த்து விட் டான். தங்கள் பரம எதிரியான அக்பர்தான் உடன் ஒருவரை அழைத்துக்கொண்டு மேவாரின் அந்தப்புரம் வரை வந்து சென்றிருக்கிறான் என்றறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோனான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment