கிரிதர கோபாலா.. (31)

தனக்கும் அவ்விடத்திற்கும் இனியும் தொடர்பில்லை என்றுணர்ந்த மீரா, அங்கிருந்து கிளம்பினாள்.

கிரிதாரியை இறுக்கி அணைத்துக் கொண்டு விடுவிடுவென்று இருளில் வேகமாக நடந்தாள்.

இரவு முழுதும் நடந்து நடந்து மேவாரின் எல்லையைக் கடந்தாள். எவ்வளவு தூரம் நடந்திருப்பாளோ.. எத்தனை நாள்கள் கடந்தனவோ..

எப்படியோ காட்டு வழியாக யமுனைக் கரைக்கு வந்துவிட்டாள். யமுனா நீரைப்‌ பார்த்ததும் இவ்வளவு நாள்களாகத் தேக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் தாயைக் கண்டதும் பீறிடுவதுபோல் அழுகையாய் வெளிப்பட்டது.

அம்மா! என்று கதறி அழுதாள். பின்னர் கண்ணன் விளையாடிய உன் மடியிலேயே எனக்கும் அடைக்கலம் கொடு தாயே! என்று அரற்றிக்கொண்டு ஓடிச் சென்று யமுனையில் விழுந்தாள்.

சேயைத் தாய் தாங்குவதுபோல் யமுனாதேவி மீராவைத் தாங்கிக்கொண்டாள்.

மெதுவாகக் கிழக்கு வெளுக்கத் துவங்க, பறவைகள் இனிமையான சத்தங்களுடன் வானில் பறக்கத் துவங்கிய நேரம். மக்கள் அனைவரும் கம்பளியால் போர்த்திக்கொண்டு அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தனர்.

ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம் ராதே ராதே என்ற கோஷம்‌ எழும்பியது. யமுனையின் கரையில் ஸாதுக்கள் பாடும் இறை நாமத்தின் மதுரத்வனி கேட்டுக் கொண்டிருந்தது.

ஆம்.. ப்ருந்தாவனமேதான்.

யமுனையில் நீராடச் சென்ற ஒரு ஸாது, நீராடிவிட்டு, நீருக்குள் கதிரவனை நோக்கி நின்றுகொண்டு கண்களை மூடிக்கொண்டு ஜபம்‌ செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் காலில்‌ ஏதோ மோத, கண்களைத் திறந்து பார்த்தார். ஒரு இளம்பெண் மயக்க நிலையில் நீரில்‌ இழுத்துவரப் பட்டிருந்தாள். அவள் வாயிலிருந்து கிரிதாரி கிரிதாரி என்று மெல்லிய ஒலி வந்து கொண்டிருந்தது. கழுத்தில் துளஸிமாலையும் அரச வம்சத்து நகைகள் சிலவும் அணிந்திருந்தாள்.

தன்னொளி திகழும் அவள் முகத்தைப் பார்த்ததுமே க்ருஷ்ண பக்தை என்று புரிந்து கொண்டார். அவளைக் கரையில் இழுத்துக் கொண்டுவந்து போட்டார். அதற்குள் இன்னும் சில ஸாதுக்கள்‌ கூடிவிட்டனர்.

அவள் கரத்தில் ஒரு துணி மூட்டையை இறுக்கிப் பிடித்திருந்தாள். அதை அவிழ்ந்த்துப் பார்த்ததில் உள்ளே அழகான க்ருஷ்ணனின் மூர்த்தி இருந்தது. கிரிதாரி கிரிதாரி என்று கத்திக்கொண்டே ஒரு மூத்த ஸாது மூர்ச்சித்து விழுந்தார்.

அவரது கரங்களில்தான் யமுனை மீராவை ஒப்படைத்திருந்தாள். அவர் வேறு யாருமல்ல. சிறு வயதில் அவளுக்கு கிரிதாரியைக் கொடுத்து விட்டுப் போன அதே ரயிதாஸ் என்ற மஹாத்மாதான். அவர் மீராவின் குருவும் ஆவார்.

மூர்ச்சை தெளிந்து எழுந்த அவருக்கு மீராவைப் பார்த்ததும் இப்போது அடையாளம்‌ தெரிந்துவிட்டது.

ஓ! மீரா! நீ எப்பேர்ப்பட்டவள்! உன் நிலை இப்படியா ஆகவேண்டும்? ஹே கிரிதாரி! உன் மீராவை ப்ருந்தானவத்தில் நீ வரவேற்கும் முறை இதுதானா? இது உனக்கழகா? அரசியாக இருந்தவளை ஸாதாரண பிக்ஷை எடுக்கும் ஸாதுக்களுடன் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாயே. எப்படியோ இவள் ப்ருந்தாவனத்திற்கு வந்துவிட்டாள். இதுவும் உன் லீலையா..

அவருக்கு மனம் தாங்கவில்லை. கிரிதாரி மீராவை குருவின் திருவடியில் சேர்த்து விட்டான்.

 
குருவின் திருவடிதானே எல்லா ஜீவன்களுக்கும்‌ அடைக்கலம். அதுவே நம் வினை தீர்க்கும் படைக்கலம்.

குருவின் அருளால்தான் ஒருவன் ப்ருந்தாவனத்தைப்‌ புரிந்துகொள்ளவும் இயலும்.

பின்னர் ரயிதாஸ் தன்னைத் தேற்றிக்கொண்டு, ஸாதுக்களைப் பார்த்து

இவள் இறக்கவில்லை. மூர்ச்சை அடைந்திருக்கிறாள். நாம் அனைவரும் சூழ்ந்து க்ருஷ்ண கீர்த்தனம் செய்தால் விழித்துக்கொள்வாள். அது ஒன்றுதான் இவளை எழுப்பும் வழி என்றார்.

எல்லா ஸாதுக்களும் மீராவைச் சுற்றி அமர்ந்துகொண்டு பாடத் துவங்கினர்.

பன்ஸீதரா கன்னையா
கனஷ்யாம சுந்தரா
கிரிதாரி கோப பாலா
ப்ருந்தாவன விஹாரா..

மீரா மெல்ல மெல்ல உணர்வு பெற்றாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37