கிரிதர கோபாலா.. (16)

ராணா யாத்திரை அழைத்துச் செல்வதாகக் கூறியதை மீராவால் நம்பவே முடியவில்லை. கண்ணா! எல்லாம் உன் லீலையா? என்னை ப்ருந்தாவனம் அழைக்கிறாயா? குதூஹலம் கரை புரண்டோடியது.

அந்தப் புரத்திலிருந்த ஒருவரும் இதை எதிர்பார்க்கவே இல்லை. விக்கித்துப் போயிருந்தனர். ஓரிரு நாள்களில் யாத்திரை துவங்கியாயிற்று.

செல்லும் வழியில் அயோத்தி, காசி, புஷ்கர், பதரி, ஜகந்நாத புரி, பண்டரிபுரம் எல்லா தலங்களுக்கும் சென்றனர். கங்கையிலும் யமுனையிலும் இன்ன பிற புண்ய தீர்த்தங்களிலும் ஆனந்தமாக ஸ்நானம் செய்தனர். கடைசியில் ப்ருந்தாவனம் வந்தே விட்டது.
ஸ்ரீவனத்தை நோக்கிச் செல்லத் துவங்கியதிலிருந்தே மீரா தன் நிலையிலேயே இல்லை. ஸ்ரீவனத்தில் கால் வைத்தாளோ இல்லையோ மண்ணை வாரி வாரித் தலையிலும் வாயிலும் போட்டுக்கொண்டாள். உடலெல்லாம் பூசிக்கொண்டாள்.

கண்ணன் வாழ்ந்த மண். அவன் நடந்த பூமி. இங்குள்ள ஒவ்வொரு மண் துகளிலும் கண்ணனின் பாத அச்சு இருக்கிறது. எத்தனை லீலைகள், கோபிகளுடனும், கோபர்களுடனும். ஒவ்வொரு இடத்திலும் அவ்விடத்தில் நடந்த லீலை மீராவின் கண்முன் தெய்வீகக் காட்சியாக விரிந்தது. அவளுக்காக மீண்டும் ஒரு முறை நடத்திக் காட்டினான் கண்ணன்.

மீராவைப் பார்க்க பார்க்க, ராணாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்படிக்கூட பக்தி செய்ய முடியுமா? அவள் நடிக்கவில்லை. தன்வயப்பட்டிருக்கிறாள் என்பது நன்கு புரிந்தது.

ஒவ்வொரு இடத்திலும் ராணாவுக்கு அவ்விடம் பற்றிய விஷயங்களை விவரமாக எடுத்துச் சொன்னாள் ‌மீரா.

மஹாராஜ்! இதோ பாருங்கள். இதுதான் வம்சீவடம். இதன் கிளை இப்படித் தாழ்ந்திருக்கிறதா. இதன் கிளையில் கண்ணன் அமர்ந்தால் கால் யமுனையில் இடிக்கும். யமுனை தாமரைப் பூக்களைக் கொண்டு வந்து கண்ணனுக்குப் பாத பூஜை செய்வாள். கண்ணன் தினமும் அமர்ந்து குழலூதும் மரம் இது. தொட்டுத் தொட்டுப் பார்த்தாள். மரத்தைக் கட்டிக்கொண்டாள். இங்கேதான் இங்கேதான் கண்ணன் அமர்ந்திருப்பான். திரும்ப திரும்பச் சொன்னாள்.

 ஆனந்தத்தில் பாடி ஆடலானாள். உடன் வந்திருந்த ஸாதுக்கள் அனைவரும் வாங்கிப் பாடினர். ராணாவும் பாடினான்.

இன்னொரு இடத்திற்குப் போனால், மஹராஜ், இங்கேதான் காளியன் வசித்த மடு இருந்தது. காளியனின் மீது கண்ணன் நடனமாடிய கதை முழுதும் விஸ்தாரமாகச் சொல்லி பாடி ஆடினாள்.

இதுதான்  நிதுவனம் மஹராஜ். இங்குதான் இன்றும் தினமும் ராஸலீலை நடக்கிறது. இங்கிருக்கும் செடி கொடிகளெல்லாம் கோபியர்களே. மாலைக்கு மேல் இங்கு எவரும் இருக்க இயலாது. மீறி இருந்தால் கண் பார்வை போய்விடும். மாலை தூய்மை செய்து பூட்டிவிட்டார்களானால் காலையில் இங்கு நிறைய பூக்களும், வண்ணப்பொடிகளும் கிடக்கும். அவ்விடத்தில் சுழன்று சுழன்று ஆடினாள்‌ மீரா.

இதோ இதோ யசோதாம்மா கண்ணனை உரலில் கட்டிய இடம் மஹராஜ். இதுதான் அந்த உரல். அந்த உரலைக் கட்டிக்கொண்டாள்.

இந்த மலையைப் பார்த்தீர்களா? வானளாவிய பெரிய மலையாக இருந்தது. கண்ணனைப் பிரிந்ததால் உருகி உருகி உயரம் குறைந்துவிட்டது. ஒரே விரலில் இதைத் தூக்கினான். ஏழு நாள்கள் நின்ற இடத்தில் நின்றான் தெரியுமா. எத்தனை பாடல்கள் பாடினாள் என்று கணக்கே இல்லை.

இது ப்ரும்ம மோஹனம் நடந்த இடம் மஹராஜ். ப்ரும்மா இங்குதான் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டினார்.

சொல்லிக்கொண்டே போன மீராவை ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாகப் பார்த்துக்கொண்டே இருந்தான் ராணா.

மீரா நான் ஒன்று கேட்கட்டுமா?

கேளுங்கள் மஹராஜ், இவ்வளவு நாள்களாக நீ‌ பொ‌ய்யே சொல்லமாட்டாய் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீ கூட பொய் சொல்லுவியோ என்று தோன்றுகிறது.

திடுக்கிட்டாள் மீரா. பொய்யா.. நானா.. இல்லையே. நான் பொய்யே சொல்லமாட்டேனே. நான் சொல்வதெல்லாம் உண்மைதான் மஹராஜ். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?

முன்பொரு முறை நான் கேட்டபோது நீ சித்தோடை விட்டு வெளியில் சென்றதே இல்லை என்றாய்.

ஆமாம்.

முதல்‌முறையாக யாத்திரைக்காக வெளியில் வருகிறேன் என்று சொன்னாய்.

ஆமாம்.

பிறகெப்படி உனக்கு இந்த இடங்கள் பற்றி தெரிகிறது. ஏற்கனவே பலமுறை வந்தவள் போல் ப்ருந்தாவனத்தின் ஒவ்வொரு இடத்தையும் காட்டிக் கதைகள் சொல்கிறாயே.

கலகலவென்று சிரித்தாள்‌ மீரா..

இவ்வளவுதானா.. அது ஒன்றுமில்லை மஹராஜ். ப்ருந்தாவனம் என்பது ஒரு ஸ்தூலமான இடம் மட்டுமல்ல. க்ருஷ்ண பக்தர்களின் இதயமே ப்ருந்தாவனம். இந்த இடங்களைப் பலமுறை என் மனக் கண்ணால் கண்டிருக்கிறேன். இங்கு வரும்போதே இங்கு நடந்த லீலைகள்‌ என் கண்முன்னால் விரிகின்றன. நான் பலகாலம் இங்கு வாழ்ந்ததுபோல் பழகிய இடமாகத்தான் தெரிகிறது.

ப்ருந்தாவனமே உன் மனமே
லீலைகள் நடந்திடும் தினம் தினமே
குருவின் அருளால் வளர்ந்திடுமே
ஒருநாள் அவனிடம் ஒன்றிடுமே

மீராவின் இனிமையான குரலில் அனைவரும் மயங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37