கிரிதர கோபாலா.. (12)
மரத்தை விட்டுப் பிரிந்து கீழே விழுந்த ஒரு சிறிய இலைக்கு தன் இஷ்டப்படி செல்ல சுதந்திரம் இருக்கிறதா என்ன? மரத்தில் இருந்தவரை ஒரே இடத்தில் கட்டுப்பட்டிருந்தது. மரத்திற்கான தன் பணியைச் செய்தது, கீழே விழுந்ததும் பணிகள் ஏதும் இல்லை. ஆனால், சுதந்திரம்? அதுவும் இல்லை. காற்று எப்படி அலைக்கழிக்கிறதோ அப்படித்தான் பறக்க இயலும். அதுபோலத்தான் ஒரு ஜீவனின் வாழ்வும்.
அது கர்மத்தளைகளாலோ அல்லது இறைவன் விருப்பப்படியோ செலுத்தப்படுகிறதே அன்றி ஜீவனின் விருப்பம் என்பது எதுவும் இல்லை.
கண்ணன் ஏன் இவ்வாறு செய்தான்? என்ற கேள்வி நம் ஒவ்வொருவரையும் துளைத்தெடுக்கிறது. தன்னை அண்டிய ஜீவனை ஏன் இன்னொருவருக்குத் திருமணம் முடிக்கச் சொல்கிறான்? புதிய தளைகளை ஏன் உருவாக்குகிறான்?
அவனது அலகிலா விளையாட்டு என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்?
எங்கு கொண்டு போய்ப் போட்டாலும் மீராவின் மனம் கண்ணனைத் தவிர வேறெதையும் எண்ணப் போவதில்லை. அசோக வனத்திலிருந்த சீதாதேவி ராமனை கணமேனும் மறந்தாளா? அதுபோல் மீராவும் சூழல் பற்றிய கவலையே இன்றி கண்ணனை ஆராதிக்கக் கூடியவள்.
எனக்குக் குடும்பம் இருக்கிறது. வேலை இருக்கிறது, குழந்தைகள் உண்டு. பொறுப்புகள் பல. எல்லாவற்றையும் முடித்தபின் இறைவனை எண்ணுவேன் என்று சொல்லி எவரும் தப்பிக்க இயலாது. எந்த வேலை செய்தாலும் மூச்சு விடுவது போல் சூழல் எப்படி இருப்பினும் அது பக்திக்குத் தடையாகாது.
வைரத்தை உண்டபின்னும் மீராவை மரணம் தீண்டவில்லை. ஆராஅமுதாக அவன் நாமம் இருக்க அரியின் அடியார்க்கு அழிவென்பதேது.
ராணாவைத் திருமணம் செய்துகொள் - இடிபோன்று அவள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. இறைவனின் கட்டளையை மீற அவளுக்குத் தெம்பில்லை. திருமணத்திற்குச் சம்மதித்தாள். ஆனால், மீளா அமைதிக்குள் புதைந்து போனாள் மீரா.
திருமண ஏற்பாடுகளை தூதாராவ் மிக விமரிசையாகச் செய்தார். அரண்மனை தேவலோகம் போல் அலங்கரிக்கப்பட்ட து.
மற்ற பெண்கள் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு மீராவின் மனத்தில் வேலைப் பாய்ச்சினர்.
என்னமோ கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்ன! உன்னை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்போம். எல்லாரும் இப்படித்தான் பிகு பண்ணிப்பாங்க.
ஒருத்தி, மீராவின் கையிலிருந்த கிரிதாரியைப் பிடுங்க முயற்சி செய்தாள். இனிமே இந்த உலோக பொம்மை எதுக்கு? உயிருள்ள ராஜாவே உன் கைல பொம்மையாட்டாம் ஆகப்போறார்.
மீரா கிரிதாரியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அதற்குள் தூதாராவ் வந்து அவர்களை அனுப்பிவிட்டார்.
அத்தனை பேச்சுக்களுக்கும் பதிலேதும் சொல்லாமல் அமைதி காத்தாள் மீரா.
மணநாளும் வந்தது. முந்தைய நாளே ராணாவும் அவனது உறவினர்களும் வந்து விட்டார்கள். ரகுநாததாஸின் வர்ணனையிலிருந்து மீராவைப் பற்றிய பல்வேறு கற்பனைகள் அவர்கள் மனத்தில் இருந்தன. அவர்கள் மீராவைப் பார்க்க விழைந்தனர்.
அதற்குள் காற்று வழியாக, மீராவிற்குத் திருமணத்தில் விருப்பமில்லை என்ற செய்தி அவர்களை எட்டியது.
நாட்டின் மஹாராஜா, வீரன், அழகன், பராக்ரமசாலி, பிரஜைகளிடம் தந்தைபோல் அன்புள்ளவன், அவனைக் கல்யாணம் செய்ய உனக்குக் கசக்கிறதா? எவ்வளவு செல்வம் தெரியுமா? ஒவ்வோரு ராணியும் பெரிய பெரிய சமஸ்தானத்திலிருந்து வந்தவர்கள். உன் போல் கப்பம் கட்டும் சிற்றரசன் மகளில்லை. அவன் தகுதிக்கு சற்றும் பொருத்தமில்லாவிட்டாலும், உன் அழகைக் கேட்டு மயங்கி கல்யாணம் செய்துகொள்ள வந்திருக்கிறான். அவனை அலட்சியம் செய்ய உனக்கு எவ்வளவு தைரியம்?
மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஒரு வயதான பெண்மணி வந்து மீராவை மிரட்டிவிட்டுப் போனாள்.
அடுத்த நாள் மணநாள்.
Comments
Post a Comment