கிரிதர கோபாலா.. (20)

மலருக்குள் இருக்கும் மதுவை அறிய வண்டுக்கு ஏதேனும் அழைப்பிதழ் வேண்டுமா?
மலரின் நறுமணத்தை ஒளித்துவைக்க இயலுமா?

தன் கவிதா சாமர்த்தியத்தினால் கவிஞர்கள் உலகையே வசப்படுத்துகின்றனர். ஞானிகளுக்கு அரசர்களும், பெரும் பராக்ரமசாலிகளும் அடி‌பணிகின்றனர்.
இறையன்பு நிரம்பியவர்களைத் தேடி தானே உலக மக்கள் வருவர்.

மீரா, துளசிதாசர், அக்பர், தான்சேன், ஹரிதாஸ், ரயிதாஸ் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.

அக்பர்‌ மிகப் பெரிய கலா ரசிகன். தன் சபையில் அவ்வப்போது நிறைய கலை நிகழ்ச்சிகளையும், கச்சேரிகளையும் ஏற்பாடு செய்து ரசிப்பான்.

தான்ஸேன் அக்பரின் அவைக் கலைஞராக இருந்தார். அவர் அவ்வப்போது தான் கேள்விப்படும் அருமையான கீர்த்தனங்களை சபையில் பாடுவார். துளசிதாசரின் பாடல்கள், ஸ்ரீ வல்லபரின்‌ சீடரான க்ருஷ்ணதாஸ், சூர்தாஸ் ஆகியோரின் பாடல்கள் மற்றும் பல நல்ல சாஹித்யங்களைப் பாடுவார்.

தான்ஸேனுக்கு மிக இனிமையான குரல். உள்ளம் உருகும் வண்ணம் மிக இனிமையாகப் பாடுவார். அவருடைய திறமையை கௌரவிக்கும் விதமாக அக்பர் தான்சேனுக்கு தனக்கு சமமான ஆசனம் கொடுத்திருந்தான்.

மீராவின் பாடல்கள் ஸாதுக்கள்‌ மூலம் நாடெங்கும் பரவின. அவற்றின் இனிமை அனைவரையும் பாடத் தூண்டியது.
தான்ஸேன் ஒரு சமயம்‌ மீராவின் ஒரு கீர்த்தனத்தைக் கேட்டு, அதை அக்பரின் சபையில் பாடினார்.

அக்பர் அதைக் கேட்டதும் மயங்கிவிட்டான்.
இவ்வளவு அருமையான பாடலை யார் எழுதியது? நான் அவரைப் பார்க்கவேண்டும். எவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் பாடலை எழுதியவரை சபைக்கு அழைத்து வாருங்கள்‌ என்றான்.

தான்ஸேனோ, அவர் சபைக்கெல்லாம் வரமாட்டார். ராஜபுத்ரர்கள் நமக்கு எதிரிகள். இந்தப் பாடலை எழுதிய மீரா என்பவர் ராஜபுத்ர அரசனான மஹாராணா கும்பாரின் மனைவி. ராணா நமக்கு பிரதான எதிரி. மீரா அரசி வேறு. வெளியிலேயே வரமாட்டார்.

அந்தப்புரத்தினுள்ளேயே கோவில் அமைத்து பஜனை செய்துகொண்டிருக்கிறார்.

உங்களுக்கெப்படிப் பாடல் கிடைத்தது?

மீராவின் பஜனைக்கு வயதான ஸாதுக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. அங்கு சென்ற ஒரு வயதான சாது மூலம் இந்தப்பாடலைத் தெரிந்து கொண்டேன்.

மீரா இங்கு வரவேண்டாம். நாம் போகலாம்.

நாம் எப்படிப் போகமுடியும்?

வயதான ஸாதுவாக மாறுவேடத்தில் போகலாம்.

ஏதாவது விபரீதம் நேரும் ஹுஜூர். வேண்டாம்.

அதெல்லாம் ஒன்றும் ஆகாது. எனக்கு மீராவின் பாடலை நேரடியாக அவளே பாடிக் கேட்கவேண்டும். நாளை அதிகாலை மேவார் கிளம்புவோம். தயாராக இருங்கள்.

தான்ஸேனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அக்பரை எதிர்த்துப் பேச இயலாது.
மறுநாள் இருவரும் கிளம்பினார்கள்.

மேவார் எல்லை வரை சென்று அங்கே ஒரு மண்டபத்தில் வயதானவர்கள் போல் வேடத்தை மாற்றிக்கொண்டு மேவாருக்குள் நுழைந்து விட்டனர்.

மெல்ல‌மெல்ல, ராஜவீதியை அடைந்து, அந்தப்புரத்தினுள் இருக்கும் கோவிலுக்கும் வந்து கூட்டத்தோடு கூட்டமாக கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டனர்.

ராணாவோ மீராவை பஜனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தான். மறுநாள் அதிகாலையே ஸாதுக்கள் வந்துவிட, மீரா அனைத்தையும் மறந்து வழக்கம்போல் கிரிதாரியின் பூஜையில் ஈடுபட்டாள். தம்பூராவை மீட்டிக்கொண்டு, கிரிதாரி முன்பாக நின்று தன்னை மறந்து மீரா ஒரு கீர்த்தனம் பாடி சுழன்று ஆடினாள்.

கோவிந்த கப்ஹூ மிலை பியா மீரா

என்னை எப்போது உன்னுடன் சேர்த்துக்கொள்வாய் கிரிதாரி

பாடல், அதன் சொற்கட்டு, இசை, ராகம், மீரா அதைப் பாடிய விதம், அவளது அபிநயம், எல்லாவற்றையும் தாண்டிய தெய்வீகம் இவையனைத்திலும் மயங்கிப்போனான் அக்பர்.

அவளை எப்படியாவது தனிமையில் சந்தித்துப் பாராட்டவேண்டும் என்று விரும்பினான்.

பஜனை முடிந்து எல்லா‌ ஸாதுக்களும் கிளம்பும்வரை காத்திருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37