கிரிதர கோபாலா.. (26)

காட்டு வழியாகச் சென்றுகொண்டிருந்த ஸாதுக்கள் கூட்டம் மிகவும் இருட்டிவிட்டதால் ஒரு ஆலமரத்தடியில் ஓய்வெடுப்பதற்காகத் தங்கினர்.
அப்போது..

சாக்கர ராகோ‌ஜி மேனே
என்னை உன் சேவகியாக வைத்துக்கொள்..

ஒரு இனிமையான கானம் கேட்டது. எங்கிருந்து கேட்கிறது என்று சிலர் குரல் வந்த திசையில் தேடிக்கொண்டு வந்தார்கள்.

அழுக்கடைந்த மேனி, கழுத்தில் துளசி மாலை, ஒரு கையில் தம்புரா, மறு கையில் சிப்ளா, பக்தியில் தன்னை மறந்து
கிளியைப் பார்த்துப் பாடிக்கொண்டிருந்த பெண்ணைக் கண்டனர்.

ராதே க்ருஷ்ண போல் தோதீ மைனா
தானா காவே தோதீ
பானீ பீவே
பிஞ்சர் மே கரத கல்லோல் தோதீ மைனா
ராதே க்ருஷ்ணா என்று சொல்லு கிளியே
தானியம் உண்பாய் 
நீர் பருகிடுவாய்
நாமம் சொன்னால் நீ
கூட்டுக்குள் இருப்பினும் சுதந்திரம் உணர்வாய்
ராதே க்ருஷ்ணா என்று சொல்லு கிளியே

சாதுக்களின் இதயம் உருகிவிட்டது. எந்த சூழ்நிலையிலும் இறைநாமம் நிம்மதி தரும் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டாள்.

கிரிதாரியை நினைந்து நினைந்து மனத்தால் ப்ருந்தாவனத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள் மீரா.

ஆதி ராத் ப்ரபு தர்ஷன் தியே 
ப்ரேம்‌ நதி கே தீர்
நடு இரவினில் 
அன்பு நதிக் கரையினில்
தரிசனம் தந்தாரே ப்ரபு 
தரிசனம் தந்தாரே

ஆஹா! சாதுக்கள் தன்னை மறந்து சொல்ல, கண்ணைத் திறந்து பார்த்த மீரா அவர்களை வணங்கினாள்.

அம்மா! நீங்கள் யார்?

அவர்கள் கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் மீரா கேட்டாள்.
நீங்கள் எல்லோரும் யார்? எங்கு செல்கிறீர்கள்?

நாங்கள் ப்ருந்தாவன யாத்திரை செல்கிறோம் அம்மா!

ப்ருந்தாவனமா? இவ்வழி ப்ருந்தாவனம் செல்லும் வழியா?

ஆமாம் அம்மா! நீங்கள் ஏன் இங்கு காட்டில் தனியாக இருக்கிறீர்கள்? நீங்கள் யார்?

நான் ப்ருந்தாவன விஹாரியின் பணியாள். அவன் என்னை இங்கே தனிமையில் இருக்கும்படி அனுப்பிருக்கிறான். இதுவும் அவன் லீலைதான்.

அம்மா! நீங்கள் உண்மையில் யார்? ஒளிக்காமல் சொல்லுங்கள்.
அதற்குள் இன்னொருவர் ஓடிவந்து இவர் மீரா மாயி என்றதும், அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

மீரா! உங்களை இப்படியா பார்க்கவேண்டும். சித்தோடின் இளவரசியான தங்களுக்கு இந்த நிலையா? கண்ணன் உங்களை
இப்படி நடுக்காட்டில் தனிமையில்  விட்டிருக்கிறானே. என்ன ஒரு கஷ்டம்?

கஷ்டமா? எனக்கா? அதெல்லாம் இல்லை. என் பக்தியை அதிகரிக்க அவன் நடத்தும் லீலை இது.

சரி அம்மா! நீங்கள் பல நாள்களாக சாப்பிடவில்லை என்று தெரிகிறது. இந்த உணவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மீரா எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமாக சாப்பிடவைத்தனர். அவள் கிரிதாரிக்கு அர்ப்பணம் செய்துவிட்டு உணவை  உண்டாள்.
மறுநாள் காலை அந்த ஸாதுக்களுடன் வந்த சில பெண்கள் வந்து மீராவிற்குப் புதிய ஆடையை அணிவித்தனர்.

சில நாள்கள் அவர்கள் மீராவுடன் அங்கேயே தங்கி ஆனந்தமாக பஜனை செய்துவிட்டுக் கிளம்பினர்.

தங்களுடன் ப்ருந்தாவனத்திற்கு வருமாறு விண்ணப்பித்தனர்.
ஆனால், மீரா, இது பகவானின் லீலை. அவன் என்னை இங்கிருக்கும் படி பணித்திருக்கிறான். அவனது ஆணையை மீற இயலாது. அவனே என்னை அழைக்கும்போது ப்ருந்தாவனம் செல்வேன். நீங்கள் போய் வாருங்கள் என்று விடை கொடுத்தாள்.
இத்தகைய கஷ்டத்திலும் மீராவின் பதிலைக் கேட்டு மிகுந்த ஆச்சரியத்துடன் சாதுக்கள்‌ கிளம்பிச் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37