கிரிதர கோபாலா.. (25)
விஷத்தைக் குடித்துவிட்டு முன்னைவிட இன்னும் அதிகப் பொலிவுடன் நடனமாடிய மீராவைக் கண்டு அதிர்ந்துபோனாள் ஊதா.
மீராவைக் கொல்லும் முயற்சிகள் பற்றி மெல்ல மெல்ல நாட்டில் செய்திகள் பரவின.
மீராவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த மக்கள் துடித்துப்போனார்கள்.
மீரா மாதாவை விடுதலை செய்யுங்கள் என்று கோஷமிட்டுக்கொண்டு அரண்மனை வாசலில் கூடினர்.
அவர்கள் யாரையும் ராணா சந்திக்கக்கூடத் தயாராக இல்லை.
மேலும், அரசை எதிர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்தான்.
மக்கள் ஆங்காங்கே கூடி, மீரா ப்ரபு கிரிதாரி என்று இரவு பகலாகப் பாடத் துவங்கினார்கள்.
இதனால் ராணாவிற்கு மீராவின் மீதான வெறுப்பு பன்மடங்காயிற்று. மீராவை மேன்மேலும் துன்புறுத்த, அவள் எதற்கும் கலங்காமல் சிறையின் சுவற்றில் தன் நகங்களால் கிரிதாரியை வரைந்து வைத்து வழிபடத் துவங்கினாள்.
தொடர்ந்து மீராவைச் சிறையில் வைத்திருந்தால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்று அஞ்சிய ராணா வேறு வழியின்றி அவளை அரண்மனைக்கு அழைத்துவந்தான்.
மீரா ராணா இழைத்த துன்பங்கள் எதையும் உணரவே இல்லை. அவள் அவளது கிரிதாரியுடன் வேறு உலகில் ஆனந்தமாக வாழத் துவங்கிவிட்டிருந்தாள்.
இம்மாதிரியான பக்தர்களுக்குத்தான் பகவான் எவ்வளவு சோதனைகள் வைக்கிறான்?
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கும் போது அவர்களது மன நிலை எப்படி இருந்தது என்பதே ஆகும்.
துன்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க இறைவன் மீதான பிடிப்பும், காதலும் அவர்களுக்கு அதிகரிப்பதைப் பார்க்கிறோம்.
ஆனந்த ஸ்வரூபமான இறைவனை நினைப்பவர்களை உலகியல் துன்பங்கள் என்ன செய்துவிடும்?
ராணாவிற்கு மீராவைத் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்பது நன்றாக விளங்கிற்று.
அவளது உயர்ந்த பக்தியின் முன்னால் தான் ஒரு பொருட்டே அல்ல என்பதை உணர்ந்தான். மீராவுடன் திருமண வாழ்வை அனுபவிக்க எண்ணியவனுக்கு அவள் முகத்தைப் பார்த்து ஒரு வார்த்தை பேசக்கூட முடியவில்லை.
அவளை அரண்மனையில் வைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை. வெளியில் அனுப்பினால், மற்ற ஸாதுக்களுடன் சேர்ந்து பொது இடங்களில் ஆடிப் பாடுவாள். அதையும் சகித்துக் கொள்ளமுடியாது. மீராவை இவ்வுலக வாழ்வின் எந்த வரம்பிற்குள்ளும் அடைக்க இயலாமல் திணறினான்.
சாதுக்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.
என்ன இருந்தாலும் ராணாவிற்கு அக்பர் அவளைச் சந்தித்தை அவனால் ஏற்கவும் இயலவில்லை.
யோசித்து யோசித்து தலை வெடிக்கும் நிலையில் மீராவை காட்டின் நடுவில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில் சிறை வைக்க முடிவெடுத்தான்.
அங்கு உணவும் நீரும் இன்றி மீரா சில நாள்களில் தானாகவே இறந்துவிடுவாள் என்று எண்ணினான்.
காட்டு வாழ்க்கை ஸாதுக்களுக்கு கல்கண்டைப் போன்றது என்று ராணா அறியவில்லை.
இருள் சூழ்ந்த ஒரு மாலையில் மீரா காட்டில் விடப்பட்டாள்.
நிலவொளியில் காடு மிக அழகாகத் தெரிந்தது. சலசலவென்ற ஒலியுடன் மெல்லிய நீரோடையும்,
அடர்ந்த மரங்களும், அங்குமிங்குமாக அலையும் காட்டு விலங்குகளும், வண்ண வண்ண மலர்களும், பறவைகளும், பற்பல செடி கொடிகளும், ஒற்றையடிப் பாதையும், மீராவுக்கு ப்ருந்தாவனத்தை நினைவு படுத்தின.
ஒவ்வொன்றையும் மீரா ரசித்துக் கொண்டிருந்த வேளையில் அவளது காதுகளில்
தேன் பாய்வதுபோல் சாதுக்கள் பாடிக்கொண்டு வரும் பஜனை ஒலி கேட்டது. ஒரு ஸாதுக்கள் கூட்டம் அந்தக் காட்டு வழியாகத் துளியும் பயமின்றி பாடிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
யமுனாதீர விஹாரி
ப்ருந்தாவன ஸஞ்சாரி
கோவதனோத்தாரி
கோபால க்ருஷ்ண முராரி..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment