கிரிதர கோபாலா.. (27)
ப்ருந்தாவனத்திற்குக் கிளம்பிய ஸாதுக்களால் சிறிது தூரம் கூடச் செல்ல முடியவில்லை.
மீரா மாதாவை காட்டில் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோமே.
இத்தகைய கஷ்டத்திலும் இறைவன் மீது அவளுக்கு எவ்வளவு நம்பிக்கை.
அசோக வனத்தில் ஹனுமான் சீதையை என்னுடன் வாருங்கள். நான் அழைத்துக்கொண்டு போய் ராமனிடம் உங்களை சேர்ப்பிக்கிறேன் என்று அழைத்தபோது, அன்னை, ஹனுமானுடன் செல்ல மறுத்தாள்.
சரணாகதியின் பூரண லட்சணம் அது. ராமனே வந்து அழைத்துச் செல்வதுதான் இருவருக்கும் பெருமை என்றாள்.
இறைவன் எப்படி வைத்திருக்கிறானோ அப்படியே இருப்பது. ஒரு பூமாலை இருக்கிறது என்றால், அதற்கு என்னை அணிந்துகொள் என்று கேட்கும் உரிமை இல்லை. தலைவன் அதை கழுத்தில் அணியலாம், அணியாமல் அப்படியே வைக்கலாம். சிறிது நேரம் போட்டுக்கொண்டு கழற்றலாம். அல்லது காலில் போட்டு மிதிக்கவும் செய்யலாம். ஏனென்று மாலையால் கேட்க இயலாது. அதுபோல் சரணாகதனும் இறைவனிடத்தில் மலரைப் போலவும், சந்தனம் போலவும் வைத்தது வைத்தபடி இருப்பார். அத்தகையவர்கள் இறைவனாகப் பார்த்து எந்த நிலையில் வைத்தாலும் சரி என்ற மனநிலையில் எந்தக் குறையும் சொல்லாமல் இறைவன் பெயரைப் பாடிக்கொண்டிருப்பார்கள்.
ஸந்த் துகாராம் சரித்ரத்திலும் இவ்வாறு நடப்பதைப் பார்க்கிறோம். சத்ரபதி சிவாஜியின் குருவாக இருந்தபோதும், குடிசை வீடு, நிறைய குழந்தைகள், வறுமை என்றே வாழ்ந்தார். அரசன் பொன்னும் பொருளும் அனுப்பினாலும் ஏற்கவில்லை.
உனக்கும் எனக்கும் சில நாள்களாகத்தான் தொடர்பு. எனக்கும் பாண்டுரங்கனுக்கும் பல பிறவிகளாகத் தொடர்பு. நான் இப்படி இருந்துகொண்டு பக்தி செய்யவேண்டும் என்பது இறைவன் சங்கல்பம் என்கிறார்.
தியாகராஜர் வாழ்விலும் இத்தகைய நிகழ்வு உண்டு. அவதார புருஷர்கள் பலர் இத்தகைய உத்தம சரணாகதியை எடுத்துக் காட்டுகிறார்கள்.
பலவாறு புலம்பிக்கொண்டு சென்ற ஸாதுக்கள் மனம் பொறாமல் மீராவிடமே திரும்பி வந்து விட்டனர்.
தன் பெயர் எந்த இடத்தில் பாடப்படுகிறதோ அந்த இடத்தில் இறைவன் பூரண ஸாந்நித்யத்துடன் இறைவன் இருக்கிறான் என்ற கூற்றின்படி, எப்போதும் கிரிதாரியைப் பாடும் மீராவை விட்டு அவன் எங்கு போவான்? கிரிதாரி இருக்குமிடமே ப்ருந்தாவனம். நாம் ஏன் தனியாகத் தேடிக்கொண்டு போகவேண்டும்? மீரா மாதாவைத் தனியாக விடவேண்டாம்.
ஒருக்கால் உணவின்றியோ, காட்டு மிருகங்களாலோ மீராவுக்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால் நம்மை இறைவன் மன்னிக்கமாட்டான். என்று நினைத்தனர். அனைவரும் மீராவிடமே திரும்பி வந்து காட்டிலேயே ஆங்காங்கே கூடாரம் அமைத்துக்கொண்டு அவளுடனேயே தங்கிவிட்டனர்.
மீரா அவர்களை யாத்திரையைத் தொடரச் சொல்லி எவ்வளவு வேண்டியும் அவர்கள் கேட்கவில்லை.
நட்ட நடுக்காட்டில் எப்போதும் பஜனை, கதாச்ரவணம் என்று சத்சங்கம் அமைந்துவிட்டது மீராவிற்கு. இதைவிட ஆனந்தம் வேறென்ன இருக்கிறது. அனைவரும் மீராவின் பக்தியில் நனையத் துவங்கினர்.
காட்டில் மீராவை தன்னந்தனியாக விட்ட ராணாவிற்கு இருந்த கொஞ்ச நஞ்சம் மனநிம்மதியும் காணாமல் போயிற்று. உணவும் உறக்கமும் கூட செல்லவில்லை. வாழ்வே வெறுத்துப்போனது. ஒற்றர்களை அனுப்பி மீரா காட்டில் என்ன செய்கிறாள் என்று பார்த்துவரச் சொன்னான்.
காட்டில் மீராவின் நிலையை ஒற்றர்கள் வந்து சொன்னதும், ராணாவின் மனத்தில் கோபத்திற்கு பதிலாக ஒரு சிறிய கீற்றாக நிம்மதி பிறந்தது. இவ்வளவு நாள்களாக அவளை அநாவசியமாகக் கொடுமைப்படுத்திவிட்டோமே என்று வருந்தினான்.
வளர்ப்புத் தந்தை போலவும், குருவாகவும் இருந்து அவனைச் சிறு வயது முதல் வழிநடத்தி வந்த ரகுநாத தாஸ் இல்லாமல் அவனால் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை.
மீராவைச் சற்று மரியாதையாக நடத்தினால் அவர் திரும்பி வருவார் என்று எண்ணினான்.
உடனே ஒரு பல்லக்கை அனுப்பி, மீராவை பத்திரமாக அரண்மனைக்கு அழைத்துவரச் செய்தான். கிரிதாரியின் கோவிலில் மறுபடியும் மீராவின் இனிய கானம் கேட்கத் துவங்கியது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment