கிரிதர கோபாலா.. (23)

மீரா மயங்கி விழுந்ததுமே ஜெயமல் அன்றிரவே ராணாவின் மேல் கோபம் கொண்டு எங்கோ சென்றுவிட்டான். ராணா மீராவை ஆதரிப்பான் என்று நினைத்துவிட்டான்.

மூர்ச்சை தெளிந்த மீரா மலங்க மலங்க விழித்தாள். கை கால்களில் இரும்புச் சங்கிலிகள். இருட்டறை. அது சிறை என்றுணரவே இல்லை அவள்.

கிரிதாரியைக் காணவில்லையே என்று தேடினாள். சற்று நேரம் கழித்துத்தான் தான் கோவிலில் இல்லை என்பதையே உணர்ந்தாள்.

அச்சோ, கிரிதாரியின் ஸேவைக்கு நேரமாயிற்றே. பிரபோதனம் செய்யவேண்டுமே என்று அரக்கப் பரக்க எழுந்தாள். விருட்டென்று சங்கிலியால் இழுபட்டுக் கீழே விழுந்தாள்.

பார்க்கவே பயம் கொள்ள வைக்கும் உருவத்துடன் இருவர் அறை வாசலில் காவலுக்கு நின்றிருந்தனர். மீராவோ அவர்களிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

என்னை கிரிதாரியிடம் அழைத்துக்கொண்டு போங்கள். அல்லது கிரிதாரியை இங்கே கொண்டு வாருங்கள்.

காது கேளாதவர்கள்போல் இருவரும் நிற்க, தரையில் புரண்டு அழத் துவங்கினாள். அவளால் கிரிதாரியைப் பிரிந்திருக்கிறோம் என்பதைத் தாங்கவே முடியவில்லை.

நான் பாட்டுக்கு கிரிதாரியுடன் விளையாடிக்கொண்டிருந்தேனே, இப்படி ஒரு வாழ்வில் மாட்டிக்கொண்டேனே. ஆனால், என்னவானாலும் சரி. இவையனைத்தும் உன் லீலை. உன்னைக் குறை சொல்லமாட்டேன் கிரிதாரி. ஆனால், உன்னைப் பிரிய முடியாது. என்னிடம் வந்துவிடு.

பஸோ மேரே ‌நயனன மே நந்தலால்
என் கண்களுக்குள் குடியேறிவிடு நந்தலாலா

என்பதாக அவளது புலம்பலைக் கேட்டு சிறையின் கற்சுவர்கள்கூட கசிந்தன.

அவ்வப்போது ஊதா வந்து வந்து மீராவைத் திட்டிவிட்டுப் போனாள். அவள் எது பேசினாலும் அமைதியாய் இருந்த மீரா, நான் சிறையில் இருப்பதைப் பற்றிக் கவலை இல்லை. கிரிதாரியை என்னிடம் கொண்டுவந்து கொடுங்கள். என்றாள்.

அதைப் பற்றி ஊதா, பலமுறை ராணாவிடம் சொல்லியும் அவன் சற்றும் இரங்கவில்லை.

இதற்கிடையே கோவில் பூட்டியிருப்பதைப் பார்த்த சாதுக்கள் வந்து வந்து ஏமாந்துபோனார்கள். மீரா சிறைப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி ஓரிரு நாள்களுக்குள் நாடெங்கிலும் காட்டுத் தீயாய்ப் பரவியது.

அனைவரும் ராணா செய்தது தவறு. மீரா அப்பழுக்கற்றவள் என்று பேசத் துவங்கினர். ஒற்றர் மூலம் மக்களின் எண்ணத்தை அறிந்த ராணாவிற்கு இன்னும் கோபம் அதிகமாயிற்று.

நான் அமைதியாக நல்லாட்சி செய்துகொண்டிருந்தேன். நாட்டு மக்கள் அனைவரும் என்னைத் தந்தை போல் நினைத்திருந்தனர். இந்த மீராவால் இப்போது நான் அனைவருக்கும் தீயவனாகத் தெரிகிறேன் என்று பொருமினான்.

ரகுநாததாஸின் காதுகளுக்கும் மீராவைப் பற்றிய செய்தி எட்டியது.

அவர் மிகவும் வருந்தினார். எவ்வளவு உயர்ந்த பக்தை மீரா. தான் வளர்ந்த பையன் என்பதால்தானே ராணாவிற்கு அவளைத் திருமணம் செய்துவைத்தோம். இப்படிச் செய்துவிட்டானே என்று பதறிக்கொண்டு ராணாவைப் பார்க்க வந்தார்.

ராணாவின் குடும்பத்தினர் அனைவருமே ரகுநாததாஸ் மீது அளவற்ற மரியாதை வைத்திருந்தனர்.

அவர் வந்த சில நொடிகளிலேயே அவரது நோக்கத்தை ராணா அறிந்துகொண்டான்.

ரகுநாததாஸ் ராணாவிடம்,
மீராவை சந்தேகப்படுவது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்து கொள்வதற்கொப்பானது. அவளது பக்தி உனக்குப் புரியாது. அவளுக்கு நீ நினைப்பதுபோல் அக்பர் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. உனக்கு அவளுடன் வாழ விருப்பமில்லாவிட்டாலும் பரவாயில்லை. அவளை உடனே விடுவித்துவிடு. அவள் ஸாதுக்களோடு ஸாதுக்களாக வாழ்ந்துகொள்ளட்டும். என்றார்.

ராணா தயங்காமல் சொன்னான்.

நீங்கள்‌ என் மரியாதைக்குரியவர். உங்கள் சொல்லை இதுவரை நான் தட்டியதே இல்லை. ஆனால்‌ இது என் சொந்த விஷயம். இதில் தலையிடவேண்டாம்.

ஓஹோ! சொந்த விஷயமா? மீராவின் கண்களிலிருந்து வரும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் உன் குலத்திற்கான குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது என்பதை மறவாதே. ஸாதுக்களை ஹிம்சை செய்யும் இடத்தில் எனக்கென்ன வேலை. இனி உன் நாட்டில் இருக்கமாட்டேன். நீ நன்றாக வாழ்ந்துகொள் என்று கூறிவிட்டு கோபத்துடன் வெளியேறினார்.

ஜெயமல் ராணாவின் வலது கரம் போலிருந்து நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்தான். ரகுநாததாஸ் ராணாவின் ஆன்ம பலமாவார். தன் சந்தேக புத்தியால் அறிவிழந்து எதையும் யோசிக்காமல் செயல்பட்ட ராணா இருவரையும் இழந்துவிட்டான். அவனது பலமனைத்தும் அழிந்துபோயின.

மக்கள் தன்னை இகழ்ந்து பேசுவதை ராணாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மீரா இருந்தால்தானே பிரச்சினை. எனவே அவளைக் கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37