Posts

க்ருஷ்ணமாதுரி - 55

Image
ஆயிரம் சூரியன்களுள் ஒன்றை எடுத்து கரம் போன போக்கில் இலாவகமாய் வீசுகிறாய்.. விழுந்த பொருளை விட்டு வீசிய கரம் தேடுகிறேன்.. இப்போது சூரியன்கள் விண்மீன்களாயின.. நீயோ அறிதுயிலில் ஆழ்ந்துபோகிறாய்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 54

Image
என்னைச் சுற்றும் துன்பங்களுக்கு பல்வேறு தீர்வுகளை எண்ணிக் குழம்பித் தவிக்கும் நேரம்.. உன் தெள்ளிய நீர்மையால் பெருகிவரும் நீர்போல் புது வழி கண்டுபிடித்து என்னைச் சுழலினின்று விடுவிக்கிறாய்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 53

Image
காதுவரை நீண்ட உன் தாமரை விழிகளுக்குள் இயங்குகின்றன சூரிய மண்டலமும் சந்திர மண்டலமும் ஒரு கண்ணை மூடித் திறந்து.. என் திசை நோக்கி ஒரே ஒரு ஓரப்பார்வை வீசினாய்.. பக்கம் பக்கமாய்க் கிறுக்கிக்கொண்டு அரைக்கிறுக்காய் அலைக்கழிகிறேன்.. மூடாத விழிகளோடு முழுக்கிறுக்காகும் நாளை எதிர்பார்த்துக் கொண்டு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 52

Image
சூரியனுக்கு வேர்க்கிறதென்று குடை பிடித்தாற்போலாயிற்று.. நதிகளை நரம்புகளாய்க் கொண்ட உனக்கு வேர்க்கிறதென்று ஆலவட்டம் போடுவது.. ஆனாலும் போடுகிறேன்.. உன்மீது பட்ட காற்று என்மீது படுமே என்ற நப்பாசையில்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 51

Image
வீட்டுச் சாவி சில்லறை கொஞ்சம் பணமும் என்றோ பயணித்த பேருந்துச்சீட்டு கோவிலில் கொடுக்கப்பட்ட ப்ரசாதப்பூக்களின் காய்ந்த இதழ்கள் பண அட்டைகள் சில முகவரி அட்டைகளும் இரண்டு மஞ்சள் கிழங்குகள் பேனா ஒரு சீப்பு ஒரு சிறிய குங்கும டப்பா ஒரு கறுப்புக்குடை சிறிய நீர்க்குப்பி அலைபேசி இவற்றின் நடுவே தனக்கும் ஒரு இடம் பிடித்துக்கொள்கிறது உன் சின்னஞ்சிறு படம்.. என்‌ மனத்திற்கும் கைப்பைக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.. ஹ்ம்ம்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 50

Image
வராகமாய் வந்தபோது தெற்றுப்பல்லில் வைத்து பூமிப்பந்தைச் சுழற்றினாய்.. வாமனனாய் வந்து பின் வளர்ந்து நின்றபோது பூமி சுழன்றது உன் காலுக்கடியில். கோகுலம்‌ காக்க ஒரு விரலில் வைத்துச் சுழற்றுகிறாய் மலையை.. கோள் பந்துகள் அனைத்தும் உன் ஓரப்பார்வைக்கே பயந்து ஒழுங்காய்ச் சுழல்கின்றன.. பெரிய சுழற்பந்தாட்டக்காரனடா நீ.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 49

Image
அண்டம் காக்கும் குடைதான் உன் பாதம்.. உன் அருட்கொடையின் கீழ் அனைத்தும் நலமாய்.. ஆனாலும்.. பெருமழை பெய்த அன்று எமக்காக விரலில் மலையேந்தினாயே.. இன்றைய மழைக்கு நான் குடை பிடிக்கிறேன் வருவாயா.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 48

Image
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் உறக்கம் நீங்கி எழும்போது.. அன்னை விழித்தால் தானும் விழித்துக்கொள்ளும் கைப்பிள்ளை போல்.. என்னோடு சேர்ந்து எழும் நீலவண்ணன் பற்றிய சின்னஞ்சிறு சிந்தனை.. என்னை விடாமல் பற்றிக்கொண்டு அன்றைய நாளை நிர்மலமாக்கி நளினமாக்குகிறது. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 47

Image
பனிக்கட்டியின் குளுமையாய் உன்‌ அன்பு.. குளிர்ந்துபோக வேண்டியிருக்க மாறாக என் வெம்மை அதிகரிக்கிறது.. எவ்வளவு உண்டாலும் போதாது உன் அன்பை.. என்னைக்‌குளிரச் செய்ய நீ இரங்கி முழுமையாய் என்னுள்‌ இறங்கினால்தான் உண்டு... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 46

Image
இருளில் தவிக்கும்‌ நேரமெல்லாம் இருள் நிறத்தான் உன் அண்மையை உணர்கிறேன்.. ஒரே ஒரு கணம்தான்.. நீ வந்தவுடன் இருள் அகன்றுவிடுகிறது. வெளிச்சம் வந்தால் காணாமல் போகிறாய்.. மீண்டும் இருளை எதிர்பார்த்துக்கொண்டு நான்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 45

Image
காய்கறிக் கடை வாசலில் ஒற்றையாய் நிற்கும் மாட்டின் பின்னால்.. பள்ளிக்கூடம் விட்டதும் துள்ளிவரும் சிறார்களின் பின்னால்.. மண் சாலையில் எழும்பும் புழுதிப்படலத்தின் பின்னால்.. மழைநாளில் ஒதுங்க இடமின்றித் தவிக்கும் உயிர்களின் பின்னால்.. பழம் விற்றுச் செல்லும் முதிர்ந்த வியாபாரியின் பின்னால்.. பால்காரக் கிழவியின் பின்னால்.. உன் வேடமிட்டுக் கள்ளமின்றிச் சிரிக்கும் மழலைகளின் பின்னால்.. உன் பெயரைச் சொல்லும் அடியவர் பின்னால்.. சுற்றி சுற்றிச் சென்று உன்னைத் தேடுகிறேன்.. ஒரே ஒரு முறை எவ்வுருவிலேனும் உன் திருக்கோலம் காட்டு... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 44

Image
ராகம்:விஜயநகரி மாக்கோலமிட்டு வைத்தேன் - கண்ணா உந்தன் வரவை எதிர்பார்த்து வாசலில் அழகான(மா) பூக்கோலங்களுமிட்டு புது வெண்ணெய் எடுத்தேன் நாவைச் சுண்டும் நல்ல பக்ஷணங்கள் செய்தேன் தோரணங்கள் கட்டி தோதாய் மாலை தொடுத்தேன் வாரணம் போல் வந்து வெண்ணெய்க்கோலமிட்டிடுவாய் (மா) தெருக்கோடி வரை சென்று விழிகள் உனைத் தேட தேனான குழலிசை கேட்கச் செவி ஏங்க காய்ச்சின பாலுமிங்கே ஆறிச் சுவை தேய தேவாதிதேவன் நீயும் கடிதில் என் கன்னம்‌சேர (மா) Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 43

Image
ஒன்பது க்ரஹங்களும் பணிந்தேத்தும் நீ காராக்ரஹத்தில் பிறந்தாய்.. எமக்கு அனுக்ரஹம் செய்வதற்காக.. -மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 42

Image
உன் பெயரைச் சொன்னதற்கு நான் கேளாமலே  அரசபோகம்  கொடுத்திருக்கிறாய்.. இவ்வுலக அரசபோகம் எனக்கெதற்கு.. உன் இதயராணியாக விரும்புவது பேராசை.. என்றும் உன் மனமாகி நிற்பவளின் பணிப்பெண்ணாய் வாழ்வதே எனக்குப் போதும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 41

Image
பௌர்ணமி அலையின் பேரிசை  வெளியில்.. உள்ளே  அதற்கேற்ப நிசப்தமாய்  உன் குழலிசை.. நானோ.. ஒலிக்கும் அமைதிக்கும்  நடுவில்... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 40

Image
கருநீல வர்ணத்தில்.. குண்டாய்.. குள்ளமாய்.. ம்ருதுவாக.. உருண்டு திரண்டு.. அதீத சுவையுடன்.. ஏனோ.. கத்தரிக்காயைப்  பார்த்தால்  உன் நினைவு வருகிறது.. தவறு என் மேல் இல்லை.. கோபிக்காதே கண்ணா... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 39

Image
வானத்தை எதிரொளிக்கும் நீர்நிலையாய்.. உன்னை எதிரொளிப்பதாக எண்ணி நான்  தினம் தினம் அணிவதெல்லாமே நீல ஆடைகள்தாம்... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 38

Image
என் மனக்கதவு திறக்க இசைக்கருவிகளைத் திறக்கவேண்டியதில்லை. மூங்கிலின் துளைகளை மூட இயலுமா என்ன? என் முகாரியை நிறுத்த ஓடிவரட்டும்  உன்  அதராம்ருதவர்ஷிணி... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி- 37

Image
ஒரு கட்டையில் ஒரே மாதிரி  ரீங்கரிக்கிறது இந்த வண்டு... ஓ.. உன் குழலிசைக்கு ஸ்ருதி சேர்க்கிறதோ.. சலசலவென்ற யமுனையின்  பக்க வாத்யமும்  தயார்.. சேர்ந்திசைக்கு குயிலும் தயார்.. மயங்குவதற்கு மூவுலக ஜீவராசிகளும் வந்தாயிற்று. உன் இடுப்பெனும்  பஞ்சு மெத்தையில் உறங்கியது போதும்.. அந்தக் குழலை எழுப்பிக்  கச்சேரியைத் துவங்கு... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 36

Image
எவரெனைக் காணினும் உனை நினைவூட்டும் காகமாவேனோ.. புரியாவிட்டாலும் விடாமல்  உன் பெயரைச் சொல்லும் கிளிப்பிள்ளையாவேனோ.. பஞ்சமஸ்வரத்தில் இனிக்கும் குரலில் உன் புகழ் பாடும் குயிலாவேனோ.. குப்பையிலும்  தானியம் தேடிக் கொறிக்கும் கோழியாக விஷய விஷங்களுக்கிடையில் விஷ்ணுவைத் தேடுவேனோ... தொலைவு அதிகமானாலும் கூர்ந்துனை நோக்கும்  கழுகாவேனோ.. உன் முக சந்த்ரனை  எதிர் நோக்கி  உயிர் வாழும்  சகோரமாய் ஆவேனோ.. பாலெது நீரெதுவெனத் தெரிந்து உன் அன்புப்பாலைப் பருகும்  அன்னமாவேனோ.. எப்போதும் உனை நோக்கி விழித்திருக்கும் ஆந்தையாவேனோ..  எப்பறவையானாலும் எனக்கேற்பு கண்ணா.. பறந்து வந்து  உன் தோளில் அமரும்  வரம் தா... Previous    Home    Next