கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 13

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே 
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அந்தர்யாமியாக இறைவனே இருக்கிறான்.அவனே ஒவ்வொருவரையும் உள்ளிருந்து தூண்டுகிறான். நற்செயல்களின் ஒருவரை செலுத்துவதும், தகாதனவற்றைச் செய்யத் துணியும்போது உள்ளிருந்து எச்சரிப்பதும் அவனே..

இப்போதெல்லாம் இரண்டு வயது கூட நிரம்பாத குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பழக்கம் வந்துவிட்டது. ஒரு இரண்டு வயதுக் குழந்தையை உட்கார்த்தி வைத்துக்கொண்டு எதை சொல்லிக்கொடுக்க முடியும்?
ஒரு பாட்டோ கதையோகூட அந்தக் குழந்தையை எவ்வளவு நேரம் பிடித்து வைக்கும்?
குட்டி குட்டியாக வாத்துக்குட்டிகள் போல் கயமுய வென்று பேசிக் கொண்டிருக்கும் அந்த குழந்தைகளுக்கு 
ஆசிரியர் என்னமோ சொல்லித் தருகிறார். அவையும் அப்படியே சொல்கின்றன. 

உண்மையில் ஆசிரியர் சொல்லித் தருவதால் மட்டுமா குழந்தை கற்றுக் கொள்கிறது.. அப்படியானால் நான்கு பூனைக் குட்டிகளைக் கொண்டுவந்து கட்டிப்போட்டு அவற்றின் வாயிலிருந்து ஒரு வார்த்தையை வரவழைத்து விடலாமே.

குழந்தைக்கு உண்மையில் கற்றுக் கொடுப்பது யார்?
ஆசிரியர் சொல்வதை கவனிக்க வேண்டும் என்று தூண்டுவது யார்?

எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும்  இயல்பை மீறி செயல்பட்டு விட முடியுமா?

குழந்தையின் உள்ளிருந்து இயக்கும் இறைவன் அதை வெளி உலகிலிருந்து கற்றுக்கொள்ளத் தூண்டுகிறான். அது நாம் சொல்லிக் கொடுப்பதைக் கற்பதை விட, நமது நடத்தையை, பழக்க வழக்கங்களைப் பார்த்தே கற்றுக் கொள்கிறது. அப்படிக் கற்பதால்தான் தாய்மொழியும், அடிப்படைப் பழக்க வழக்கங்களும் வாழ்நாள் முழுதும் யாரும் நினைவு படுத்தாமலே கூடவே வருகின்றன. 

நாம்‌ அந்தர்யாமியை அடையாளம்‌ காண ‌மறுத்து அவனை வெளியிலும், மற்ற விஷயங்களிலும் தேடுவதாலேயே நிம்மதியை இழக்கிறோம்.

உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளும் ஆனந்தத்தைத் தேடுகிறேன் என்று அலைவது அந்தர்யாமியைத் தேடித்தான். அதை உணர்ந்து விட்டால் வெளியே தேடமாட்டார்கள்.

கும்பமுனியின்  கூற்றுப்படி,

தேடித்தேடி‌எங்கும் ஓடுகின்றார் - உன்னை
தேடிக் கண்டுகொள்ளலாமே - உள்ளே
தேடிக் கண்டுகொள்ளலாமே..

எனவே, எப்போதும்‌ நமக்குள் உறையும் இறைவனை ஒவ்வொரு கணத்திலும் உணர முயற்சி செய்வோம்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37