கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 12
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
ராவணனோடு சமர் செய்து தாயாரை மீட்டாயிற்று.
விபீஷணன்,
வெற்றி பெற்ற ராஜ்ஜியம் தங்களுக்கே சொந்தம். எனவே, நீங்களே அரசனாக இருங்கள்
என்று வேண்டியதைத் தட்டிக் கழித்து, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினான் சக்கரவர்த்தித் திருமகன்.
பதினான்கு வருட வனவாசம் முடிய ஒருநாள்தான் பாக்கி. நாளையே அயோத்தி செல்ல வேண்டும்
என்று பரபரத்தான்.
ஏன் அயோத்திக்குச் செல்ல இத்தனை அவசரம்? ஒரு நாள் கழித்துப் போனால்தான் என்ன?
போகலாம்தான். ஆனால், பரதனைப் பற்றி நன்கறிவான் ராமன். நாளை கடைசி நாள் என்றால், நாளை மாலை வரை காத்திருக்க மாட்டான் பரதன். சூர்யோதயம் ஆனதுமே அண்ணா வரவில்லை என்று நெருப்பை மூட்டி குதித்துவிடுவான்.
பதினான்கு வருடங்களுக்கு மேல் ஒருநாள் கூடப் பொறுக்கமாட்டேன், அக்னி ப்ரவேசம் செய்வேன் என்று ப்ரதிக்ஞை செய்துவிட்டான் அவன். எனவேதான் அவசரம்.
விபீஷணன் புஷ்பக விமானத்தை அனுப்பினான். ராமனையும் சீதையும் கண்டவர் பிரியத் துணிவரோ..
அதுவும் பட்டாபிஷேகம் நடக்கப்போகிறது. நான் பார்க்க வேண்டாமா என்று அத்தனை பேரும் கிளம்ப, அவர்களது அன்பை மறுதலிக்காமல், ராமனின் மனம் போலவே புஷ்பகவிமானமும் விரிந்து அனைவருக்கும் இடமளித்தது. போகும் வழியில் கிஷ்கிந்தையில் விமானத்தை நிறுத்தி, அந்தக் குரங்குகளின் குசலாக்களையும் ஏற்றிக்கொண்டாயிற்று.
சித்ரகூடத்தைக் கடக்கும் சமயம், ராமனுக்கு நினைவு வந்தது. விமானத்தை நிறுத்தச் சொன்னான்.
பரத்வாஜ மஹரிஷி வனவாசம் துவங்கும்போது ராமனை தன் ஆசிரமத்தில் வரவேற்றார். ரிஷிகள் அனைவரும் இருவருக்கும் மீண்டும் திருமணம் நிகழ்த்தி ஆனந்தப்பட்டனர். ரதி மன்மதன் போல் இருந்த இருவரையும் பார்த்து பார்த்து அலங்கரித்தனர்.
அனசூயை சீதையைத் தன் மகளாகவே கொஞ்சி, தன் நகைகளைப் பூட்டி அனுப்பினாள். வனவாசம் முடிந்து திரும்புகாலில் நிச்சயம் இங்கு வரவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அவசியம் வருகிறேன் என்று பரத்வாஜ மஹரிஷிக்கு வாக்களித்துவிட்டான் ராமன்.
இப்போது விமானத்திலிருந்து கீழே அந்த இடத்தைப் பார்த்ததும், நினைவு வந்துவிட்டது.
ராமனோடு ஒரு பெரிய பட்டாளமே வந்திருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சியடைந்தார் ரிஷி.
ராமா,
நீ யுத்தம் செய்து களைத்துப்போய் வந்திருக்கிறாய். என் மகளைப்போன்ற இந்த ஜானகியோ பத்து மாதங்கள் அன்ன ஆகாரமின்றி வெளுத்துப்போயிருக்கிறாள்.
இந்தக் கோலத்தில் உன்னை உன் அன்னையரோ, பரதனோ பார்த்தால் மிகவும் வருந்துவார்கள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள். விருந்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நாளை போகலாம் என்று கூறிவிட்டார்.
இவ்வளவு நேரம் போகவேண்டும் போகவேண்டும் என்று தவித்த ராமனை ரிஷியின் அன்பு கட்டிப்போட்டது. உடனே ஹனுமனை அழைத்து பரதனிடம் சேதி சொல்ல அனுப்பினான்.
அவ்வளவுதான்.
ராமனது அத்தனை பரபரப்பும் சட்டென்று அடங்கியது. ஆற அமர, தீர்த்தாமாடி, சீதையோடு சேர்ந்து, ஒவ்வொரு ரிஷியையும் ரிஷி பத்னியையும் வணங்கிவிட்டு சாப்பிட உட்கார்ந்தான்.
போக் என்று சொல்வார்களே அதுபோல், தடபுடலாக 125 பதார்த்தங்களுடன் மாபெரும் விருந்து. ரசித்து ரசித்து சீதையோடும், லக்ஷ்மணனோடும், விபீஷணனோடும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் உண்ணும் ராமனைப் பார்த்து பார்த்து பூரித்துப்போனார்கள் ரிஷிகள் அனைவரும். இவ்வளவு நாள்கள் கழித்து அண்ணா ரசித்து கேலி பேசிக்கொண்டு உண்பதைப் பார்த்த லக்ஷ்மணனுக்கு மனம் நிறைந்துவிட்டது. ராமனையே கண்களால் உண்டு கொண்டிருந்தான்.
சுக்ரீவன் மனத்தில் தீராத சந்தேகம். இலங்கையில் பரதன் தீக்குளித்துவிடுவான் என்று அரக்க பரக்க துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிய ராமனா இது?
அவர் முகத்தில்தான் எவ்வளவு அமைதி, சந்தோஷம். இப்படி ராமனைப் பார்த்ததே இல்லையே. மனைவியை இழந்து தவித்துக் கொண்டிருந்த ராமனைத்தான் சுக்ரீவன் அறிவான். குரங்குகளுக்கும் அதே சந்தேகம்தான். எப்படி ரசிச்சு சாப்பிடறார் பார். சரியான சாப்பாட்டு ராமன்..
பரிமாறிய பதார்த்தங்களின் பெயர்கூடத் தெரியவில்லை அவர்களுக்கு. காய் கனிகள், கிழங்குகள், தேன், மற்றும் காட்டில் கிடைக்கும் உணவு வகைகளைத்தான் அறிவார்கள். இலை முழுதும் பரிமாறப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை எடுத்துச் சாப்பிடக்கூடத் தெரியவில்லை அவர்களுக்கு. எல்லாக் குரங்கும் ராமனைப் பார்த்து பார்த்து அவன் எப்படி உண்கிறானோ அதே போல் உண்டன.
ஒருவழியாய் உண்டு முடித்ததும், சுக்ரீவன் கேட்டே விட்டான்.
ஸ்வாமி, இளவலான பரதன் தீக்குளிப்பார் என்று.
இடிஇடியென்று சிரித்த ராமன் பதில் சொன்னான்..
என்ன சுக்ரீவா, பரதனைப் பற்றிய கவலை ஏதுமின்றி இப்படி சாப்பாட்டைப் பார்த்ததும் உட்கார்ந்துவிட்டேனே என்று கேட்கிறாயா?
பேசாமல் இருந்த சுக்ரீவனைப் பார்த்து அழகான புன்முறுவலுடன் பதிலிறுத்தான் ராகவன்.
ஹனுமானை பரதனிடம் சேதி சொல்ல அனுப்பிவிட்டேன்.
ஹனுமானைப் போல் ஒருவனை ஒரு வேலை செய்யச் சொல்லி அனுப்பிவிட்டு கவலைப் படுவதும் அவரை சந்தேகம் கொள்வதும் முட்டாள்தனம் சுக்ரீவா. ஹனுமான் தன் உயிரைக் கொடுத்தாவது, பரதனை தீக்குளிக்காமல் தடுத்துவிடுவான்.
மேலும் என்னைப் பதினான்கு ஆண்டுகளாகக் காணாமல் தவித்துக்கொண்டிருக்கும் மக்களையும் அன்னையரையும் பட்டினியோடு வாடிய முகத்துடன் காணச் சென்றால், தீக்குளிக்க வேண்டிய அவசியமே இல்லை. என் வாடிய முகத்தைப் பார்த்ததுமே உயிரை விடுவான் பரதன்.
என்னைச் சரியான சாப்பாட்டு ராமன் என்று நினைத்து விட்டாயா?
தகுதியான ஒருவரிடம் வேலையைக் கொடுத்துவிட்டால் அதன் பிறகு கவலைப்படக்கூடாது சுக்ரீவா என்றான்
சுக்ரீவன் வெட்கித் தலை குனிந்தான். ஏனெனில் இதே ஹனுமான் தனக்குக் காவலாக இருந்தபோதும் கிஷ்கிந்தைக்குள் முதன் முதலில் வந்த ராம லக்ஷ்மணர்களை சந்தேகப்பட்டு, ஹனுமானின் மீதும் நம்பிக்கையின்றி ஒளிந்துகொண்டவனாயிற்றே..
தினம் தினம் விதம் விதமான பக்ஷணங்களையும் வெண்ணெய்யையும் வேளா வேளைக்கு உண்ணும் கண்ணனுக்கு சாப்பாட்டு க்ருஷ்ணன் என்ற பெயரில்லை. அவ்வளவு பரபரப்பிலும், செய்யவேண்டியதைச் சரியாகச் செய்துவிட்டு, நிதானமாய் ரசித்துச் சாப்பிட்ட ராமனுக்கு சாப்பாட்டு ராமன் என்று பெயர் வந்துவிட்டது.
Comments
Post a Comment