கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம்‌ சிந்தனை - 11

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே 
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன.

ஒரு உபன்யாசகர் ராமாயணம் சொல்லிக் கொண்டிருந்தார். தினமும் ஒருவர் கதை கேட்க வருவார். முதல் வரிசையில் அமர்ந்து அவ்வப்போது தலையாட்டி, சிரித்து,  ஆர்வமுடன் கதை கேட்பார்.

கதை சொல்பவர்களுக்கு ரசித்துக் கதை கேட்பவர்கள் ஒரு வரம். அவர்களைப் பார்த்துக் கொண்டே இன்னும் உற்சாகமாகக் கதை சொல்வார்கள்.

ஒன்பது நாள்களுக்கு ராமாயண நவாஹம் உபன்யாசம் முடிந்தது. 
ஒன்பதாம் நாள் கதை முடிந்ததும், உபன்யாசகர், தினமும் வந்து ஆர்வமுடன் கதை கேட்டாரே, அவரைப் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போகலாம் என்று நினைத்தார்.

அவரை அழைத்துச் சொன்னார்

உங்களை மாதிரி கதை கேட்கறவங்க ஒருசிலர் இருந்தால் போதும். உற்சாகமாக கதை சொல்லலாம். நீங்க எங்க இருக்கீங்க?
என் உபன்யாசம் எங்கு நடந்தாலும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். நீங்க அவசியம் வரணும் என்றார். 

அவரும், 

நீங்க ரொம்ப நல்லா கதை சொல்றீங்க. ஆனா, எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருக்கு. கேக்கலாமா?
என்றார்.

உபன்யாசகருக்கு மிகவும் சந்தோஷம்.

ஆஹா, இப்படித்தான் கேக்கணும். என்ன சந்தேகம்னாலும் சொல்லுங்க. அவசியம் தீர்த்துவைக்கறது என் கடமை. எனக்குத் தெரியலன்னாலும் நான் தெரிஞ்சுக்கிட்டு வந்தாவது கட்டாயம் சொல்வேன்.

நீங்க கதை முழுசும்
ரெண்டு பேர் சொன்னீங்க..
ராமன், அப்றம் ராவணன்..

ஆமா

மூணாவதா ராக்ஷசன்னு சொன்னீங்க..

..

எல்லாமே‌ 'ரா' வா இருக்கா..எனக்குப் புரியல.

என்ன புரியல?
உபன்யாசகர் முகத்தில் குழப்ப ரேகைகள்.

கதையில் ராமன் ராக்ஷசனா? ராவணன் ராக்ஷசனா?

உபன்யாசகருக்குத் தலை சுற்றியது.

ஆர்வமுடன் கதை கேட்டார் என்று நினைத்தோமே. இப்படி ஆகிவிட்டதே. பேசாமல் போயிருந்தால் அந்த திருப்தியோடு போயிருப்பேனே. 
நொந்துகொண்டார்.

சுதாரித்துக்கொண்டு நிதானமாகச் சொன்னார்

ஐயா, நீங்க சரியாத்தான் கேட்டீங்க..
ஆனா,
ராமனும் ராக்ஷசன் இல்ல. ராவணனும் ராக்ஷசன் இல்ல..

அப்றம்..

உங்களுக்கு கதை சொன்ன நான்தான் ராக்ஷசன் என்றார்..

சிலர் எவ்வளவுதான் நல்ல விஷயங்களைக் கேட்டாலும் அவற்றிலுள்ள ஸாரத்தை உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிடுகின்றனர். 

மேலோட்டமாக கிடைக்கும் சில விஷயங்களைப் பிடித்துக்கொண்டு, அதையும் சரியாக ஆராயாமல்,  அதையே சிந்தனை செய்து, குதர்க்கம் பேசி,  காலத்தையும் வாழ்நாளையும் நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37