கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 10
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
உலக விஷயங்களானாலும் சரி, ஆன்மீக விஷ்யங்களானாலும் சரி, குருமுகமாகக் கற்க வேண்டியவற்றை, ஒரு தகுந்த குருவை அண்டித்தான் கற்கவேண்டும்.
அதிலும் புராணங்களோ, இதிஹாஸங்களோ குருமுகமாகக் கேட்டு அறிந்துகொள்பவர்களுக்கு அவ்விஷயம் ஐயமின்றி விளங்குவதோடு, அனுபவங்களும் ஏற்படும். புத்தகங்களை நாமாகப் படித்து உயர்ந்த விஷயங்களை அறிய முற்படும்போது, தவறான புரிதல்களும், குழப்பங்களும் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம்.
ஒரு மின்சார ரயில் இயக்கும் ஓட்டுனர் இருந்தார். மின்சார ரயில்களை மிகவும் திறமையாக இயக்கக் கூடியவர். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் விபத்து நேராமல் சாதுர்யமாகவும் கவனமாகவும் செயல்படுபவர்.
அவருக்கு சொந்த வேலை காரணமாக சில நாள்கள் விடுப்பு தேவையாய் இருந்தது.
அவ்வமயம் பயிற்சிக்கு புதிதாக நிறைய நபர்கள் சேர்ந்திருந்தனர். அவர்களுள் ஒருவன் மிகுந்த அறிவாளியாய் இருந்தான். முன்னமேயே ரயில் சம்மந்தமான அத்தனை புத்தகங்களையும் படித்து விட்டிருந்தான். பயிற்சி வகுப்புகளில் கேள்விகளாகக் கேட்டுத் துளைத்து எடுத்துவிடுவான்.
அவன் ஏடுகளில் படித்திருந்த விஷயங்களுக்கும், தற்போதைய செயல்முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.
பாடம் நடத்துபவர்களும்கூட சில சமயம் பதில் தெரியாமல் திகைப்பார்கள்.
நமது திறமை மிக்க ஓட்டுனர் விடுப்பில் போன சமயம், வேறு மாற்று ஓட்டுனர்கள் சரியாக அமையவில்லை.
ஒருநாள், அன்றைய விரைவு ரயிலை ஓட்டுவதற்கு ஆள் கிடைக்கவில்லை. அந்த ரயிலில் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் நிறைந்திருந்தன. மற்றவர்களுக்கு அதை இயக்குவதில் தயக்கம் இருந்தது.
இன்று ஓட்டிக் கொண்டு போய் இரண்டு நாள்கள் கழித்துத்தான் திரும்ப இயலும் என்பதாலும் சிலர் தயங்கினர்.
தலைமை நிர்வாகிக்கு நமது புது பயிற்சியாளரின் நினைவு வந்தது. ரயிலை இயக்க யாரும்த யாரில்லை என்ற நிலையில் ரத்து செய்வதற்கு பதிலாக புதியவருக்கு பயிற்சி கொடுக்கலாம் என்று நினைத்து
அவரை அழைத்தார்.
தம்பி, நீங்க இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. உங்களால் ரயிலை ஓட்ட முடியுமா?
அவர் சொன்னார்,
நான் படிச்சிருக்கறதென்னவோ உண்மைதான். இருந்தாலும் இதுவரைக்கும் ரயிலை எல்லாம் ஓட்டியதில்லை. எனக்கு சந்தேகங்கள் வந்தா என்ன செய்யறது?
ஓடும் ரயிலில் யாரைக் கேட்பது?
அந்த திறமையான ஓட்டுனரின் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்க.
சரி என்று புறப்பட்டார் பயிற்சியாளர்.
இந்த விஷயத்தை அந்த மூத்த ஓட்டுனரிடம் சொன்னதும் அவரும் ஒப்புக்கொண்டார்.
ரயில் புதிய ஓட்டுனருடன் கிளம்பியது.
துவக்குவது, இயக்குவது, நிறுத்துவது, திருப்புவது இன்னும் முகப்பில் இருந்த எல்லா பொத்தான்களின் செயல்பாடுகளையும் புத்தகத்தை வைத்து சரி பார்த்துக் கொண்டார் அந்தப் புதியவர்.
அவ்வப்போது அந்த அனுபவமிக்க ஓட்டுனரையும் தொடர்பு கொண்டு பேசினார். ரயில் மும்பையை நோக்கிப் பறந்தது. வழியில் வரும் ஸிக்னல்கள் எல்லாவற்றையும் அனுசரித்து நன்றாக ஓட்டினார்.
ஒரு கிராமப்புறப் பகுதியை ரயில் கடந்து சென்றது. அப்போதுதான்
கவனித்தார்.
இரண்டு கிமீ தொலைவில் தண்டவாளத்தில் ஒரு எருமைமாடு படுத்துக் கொண்டிருந்தது.
ரயில் இன்னும் சில நிமிடங்களில் அங்கு சென்றுவிடும் என்ற நிலையில் வேகத்தைச் சற்று குறைத்துவிட்டு யோசித்தார். புத்தகங்களில் இந்த சூழ்நிலையைப் பற்றி எழுதப்படவில்லை. உடனே அந்த மூத்த ஓட்டுனரைத் தொடர்பு கொண்டார்
மாடு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
ஒரு கிமீ தொலைவில்..
ரயில் எவ்வளவு வேகத்தில் செல்கிறது?
வேகத்தைக் குறைத்துவிட்டேன். இருந்தாலும் 100 கிமீ வேகம்.
அப்படின்னா இன்னும் ஒரு நிமிஷம்தான்.
ரயிலை நிறுத்தமுடியாது. நிறுத்தினால் தடம் புரண்டுடும். ரயிலில் இருக்கும் ஆயிரக்கணக்கானோரைக் காப்பாத்தணும். ஒரு மாடு போனால் பரவால்ல. வண்டியை நிறுத்தாமல் ஒலி எழுப்பிக்கொண்டே சென்றுவிடு.
தொடர்பு அறுபட்ட நிலையில்
அந்த மூத்த ஓட்டுனர் வீட்டில் இருந்தவாறு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது காட்பாடி அருகே பெரும் ரயில் விபத்து என்று விரைவுச் செய்தி வந்தது. பார்த்தால் அது நமது பயிற்சியாளர் ஓட்டிய ரயில்தான். மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார்.
அந்தப் புதிய ஓட்டுனர் குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரைப் பார்க்கவேண்டும் என்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்தார்.
தம்பி, என்ன ஆச்சு?
நான்தான் எருமைமாட்டை அடிச்சுடுங்க பரவால்ல. வண்டியை நிறுத்தினா கவிழ்ந்துடும்னு சொன்னேனே..
நான் நீங்க சொன்னபடி எருமையை அடிச்சுடலாம்னுதான் வேகமா ஓட்டினேன். வண்டியை நிறுத்தல.
பின்ன எப்படி வண்டி கவிழ்ந்தது?
எருமை தண்டவாளத்தை விட்டிறங்கி வயலுக்குள் ஓடிட்டது. நானும் அதைத் தொடர்ந்து வண்டியை செலுத்தினேன்.
என்றாரே பார்க்கவேண்டும்.
பட்டறிவு இல்லாமல் ரயில் ஓட்டுவது தவறு, அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்பது எவ்வளவு சாத்தியமோ, அதே மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் ஆராயாமல் வம்பு வளர்த்து தவறான கருத்துக்களைப் பரப்புவதும் ஆபத்தானது.
ஒரு ரயில் விபத்தினால் உயிர்ச்சேதமும் பொருள்சேதமும் என்றால், நமது சாஸ்திர விஷயங்கள், புராண இதிஹாஸங்களை சரியாக அறிந்துகொள்ளாமலேயே, அவற்றைப் பற்றிய தவறான புரிதல்களும், கேலிப்பேச்சுக்களும், அவற்றின் பிரசாரங்களும் செய்யத் துணிவது அதற்கு சற்றும் குறைந்ததல்ல.
முன்னது சாத்தியமில்லை
ஆனால் துரத்ருஷ்டவசமாக பின்னது சகஜமாக நிகழ்ந்து விடுகிறது..
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அதுவும் ஆன்மீக விஷயங்களில் வெறும் புத்தக அறிவு அனர்த்தத்தில் கொண்டுவிடும்.
Comments
Post a Comment