கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 9

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே 
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன.

சிறு வயதிலேயே‌ சிற்சிறு கதைகளின் மூலமும், நமது பேச்சு, நடவடிக்கைகள் மற்றும்  பழக்கவழக்கங்களின் மூலமும், குழந்தைகளின் மனதில் நற்குணங்களையும்,‌ நன்னடத்தையின் அவசியத்தையும் பதிய வைத்து விட வேண்டும்.

உணர்வு பூர்வமாக, நன்றாக அனுபவித்துச் சொல்வதைப் போல் வேறு நல்ல உபாயம்  குழந்தைகளைக் கவர்வதற்கு இல்லை.

தாயோ, தந்தையோ வீட்டிலுள்ள பெரியவர்களோ அவ்வாறு கதைகள் சொல்வார்களானால், குழந்தைகள் வீடியோ கேம், தொலைக்காட்சி இவற்றின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

சொல்பவர்கள் முதலில் தான் சொல்லும் கதையை நன்றாக உள்வாங்கிக்கொண்டு, அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி உணர்ச்சி பொங்கச் சொல்லவேண்டும். சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். 

ஸ்வாமி விவேகானந்தருக்கு புவனேஸ்வரி தேவி சிறு வயதில் ஏராளமான கதைகள் சொல்வார் என்று அவரது சரித்திரத்தில் படிக்கிறோம். குழந்தையான ராமானுஜர், திருக்கச்சியப்ப நம்பிகளிடம் கதை கேட்டார். ராமன் கதை கேட்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவன் என்கிறார் வால்மீகி. கண்ணனும் ஏராளமான கதைகளைக் கேட்பதில் ஆர்வமுள்ளவன்.

நீங்கள் எந்த அவதார புருஷரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சிறு வயதிலேயே அவர்கள் கதை கேட்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 

இறைவனைப் பற்றிய கதைகளால் சொல்பவர்கள் கேட்பவர் மனத்தில் இறைவனை ப்ரதிஷ்டை செய்துவிடுகிறார்கள்.

விஸ்வாமித்திரர் ராமனையும் லக்ஷ்மணனையும்  தசரதரிடம் 
தன்னுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டார். தசரதன் வசிஷ்டர் பரிந்துரை செய்ததால் மிகுந்த தயக்கத்துடன் இருவரையும் முனிவரோடு அனுப்பினான்.

சிறு வயதிலிருந்தே இயற்கையோடு ஒன்றுவது ராமனுக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. அரண்மனை வாழ்வை விட ஆரண்ய வாழ்வில் மிகவும் விருப்பம் அவனுக்கு.

அயோத்தியிலிருந்து  வனத்திலிருக்கும்  விஸ்வாமித்திரர் ஆசிரமம் வரை நடக்க வேண்டும். பதினைந்து வயது நிரம்பிய சிறுவர்களுக்கு நடையில் களைப்பு தெரியாமல் இருக்க ஏராளமான கதைகளைச் சொன்னார் விஸ்வாமித்திரர். 
ராமன் லக்ஷ்மணன் இருவரும் பஞ்சம ஸ்வரத்தில் அழகாக இணைந்து ஊம் கொட்டுவது சங்கீதம் போல் இருந்தது. முனிவரும் மிகுந்த உற்சாகத்துடன் கதை சொன்னார்.

பரமனுக்கே கதை சொல்கிறோம் என்ற பெருமை அவருக்கு. 

பாண்டிய தேசத்தில் மஹாத்மாவான ஸத்யவ்ரதன் ஆட்சி செய்து வந்தான்.

ம்ம்
ஒருநாள்‌ ஸத்யவ்ரதன் வைகை நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்தான்.

ம்ம்

அப்போது மாலை வேளையாகிவிட்டதால் நதியிலேயே அர்க்யம் விட்டு ஸந்த்யாவந்தனம்‌ செய்தான்.

ம்ம்

ஸந்தியாவந்தனம் செய்ய நதியிலிருந்து நீரைக் கைகளில் எடுத்தபோது

ம்ம்

அவனது கைகளில் ஒரு குட்டி தங்க மீன் இருந்தது.

ம்ம்

மிகவும் அழகாக இருந்த அந்த மீனைச் சற்று ரசித்துவிட்டு 

ம்ம்

மீண்டும் நதியில் விடப்போனான். 
ம்ம்

அப்போது அந்த மீன் பேசிற்று.

மீன் பேசிற்றா?
மிகுந்த வியப்போடு கேட்டனர் சிறுவர்கள்.

ஆம் ராமா..

என்ன பேசிற்று?

என்னை உன்னோடு எடுத்துச் செல்ல மாட்டாயா? என்று கேட்டது.

அடடா..

அதிசய மீனாக இருக்கிறதே என்று வியந்து, 

ம்ம்

அதை ஒரு ஜாடி நீரில் போட்டு அரண்மனைக்குக் கொண்டு சென்றான்.

ம்ம்

அரண்மனையில் கொண்டு வைத்ததும் சற்று நேரத்தில் அது அலறியது..

எதற்கு?

நீ பெரிய மஹாராஜாவாக இருக்கிறாய். எனக்கு இன்னும் கொஞ்சம் பெரிய இடம் தரக்கூடாதா மூச்சு முட்டுகிறது‌ என்றது

ம்ம்

 அந்த மீனைப் பார்த்து ஆச்சரியம்‌அடைந்தான் அரசன். 

ஏனாம்?

ஏனெனில், அது ஜாடி முழுவதுமாக வளர்ந்திருந்தது. 


அதைக் கொண்டுபோய் ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டியில் விட ஏற்பாடு செய்தான்..

ம்ம்

சற்று நேரத்தில் காவலர்கள் ஓடிவந்தனர்.

எதற்கு?

அவர்கள்‌சொன்னர்கள், 
அரசே அந்த தங்க மீன் தண்ணீர்த்தொட்டி முழுவதும் வளர்ந்துவிட்டது 
ம்ம்

ஓடி வந்து பார்த்த அரசனிடம் 

ம்ம்

எனக்கு இன்னும் பெரிய இடம் வேண்டும் என்றது.

அதை அரண்மனையிலிருந்த குளத்தில் விடச் சொன்னான் ஸத்யவ்ரதன்.

ம்ம்

சற்றுநேரம்தான் ஆயிற்று.

ம்ம்

குளத்தில்‌ மீன் திரும்புவதற்குக்கூட இடமில்லை. 

அவ்வளவு பெரியதாகிவிட்டதா?
இடத்தைக் கொடுத்தால் மடத்தைக் கேட்குமோ?

கேள் ராமா

ம்ம்

வேறு வழியின்றி அதைக் கொண்டுபோய் நதியில் விட்டால், 

ம்ம்

நதிநீர் அதற்கு ஒரு செதிலுக்குக்கூட போதவில்லை.

என்ன செய்வதென்று திகைத்த அரசனிடம்

ம்ம்

தன்னைக் கடலில் விடச் சொன்னது அந்த ‌மீன்.

ம்ம்

எல்லா ஏற்பாடுகளும் செய்து மீனைக் கொண்டுபோய் விட்டான்.

ம்ம்

அவன் பார்த்துக்கொண்டிருக் கொண்டிருக்கும்போதே 

பெரியதாகிவிட்டதா?

ஆம். வளர்ந்துகொண்டேயிருந்த அந்த மீனை 

ம்ம்

நமஸ்காரம்‌ 
செய்தான் அரசன்.

ம்ம்

ஸ்வாமி, நீங்கள் இறைவன் என்பதை அறிந்துகொண்டேன்.  என் மீது கருணை காட்டுங்கள். நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்கு வழிகாட்டுங்கள் என்று வேண்டினான்.

ம்ம்

அப்போது, 
மஹாப்ரளய காலம் வரப்போகிறது. ப்ரளயத்திற்குப் பிறகு வரும் மன்வந்தரத்திற்கு மனுவாக உன்னைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். 

ம்ம்

ஏழு நாள்களில் வைகையாற்றில் வெள்ளம் வந்து ப்ரளயமாக‌ மாறப்போகிறது. 

ம்ம்

அதற்குள் சில ஔஷதிகளின் பெயரைச் சொல்லி அவற்றைச் சேகரித்துக் கொண்டு தயாராய் இரு. 

ம்ம்

அடுத்த மன்வந்தரத்தின் ஸப்த ரிஷிகளாகப் போகிறவர்களும் உன்னைத் தேடி வருவார்கள்.

ம்ம்

அவர்களை அழைத்துக்கொண்டு உன் அரண்மனை மாடியில் காத்திரு. 

ம்ம்

அரண்மனை மூழ்கும் அளவு வெள்ளம் வரும்போது பெரிய படகு வரும். 


அதில் ஸப்த ரிஷிகளை ஏற்றிக்கொண்டு ஔஷதிகளையும் எடுத்துக்கொண்டு  நீயும் ஏறிக்கொள்.

என்று சொன்னார்.

ம்ம்

இறைவனை வணங்கிய ஸத்ய வ்ரதன் அவ்வாறே செய்தான். 

ம்ம்

இறைவனின் ஸங்கல்பத்தையும் கருணையையும் நன்குணர்ந்தவனாய் 

ம்ம்

படகு வரும்வரை அரண்மனை மாடியில் இறைவனையே தியானம்‌ செய்தான் ஸத்யவ்ரதன்.

ம்ம்

படகு வந்ததும் அரசனும், ஸப்த ரிஷிகளும் ஏறிக்கொண்டதும், அரண்மனையும் முழுகிற்று. 


முழுவதுமாக நீர் சூழ்ந்தது. உள், வெளி, காலம் அனைத்தும் கடந்த ப்ரளய காலம்.

ம்ம்

படகு‌ நீரில் சுற்றிக்கொண்டிருந்தது. 

ம்ம்

எவ்வளவு காலம் உலகில் ப்ரவ்ருத்தி உண்டோ, அவ்வளவு காலம் செயல்பாடுகளின்றி அனைத்தும் அவன் ஒருவனே என்ற நிலையும் இருக்கும். 

அவ்வளவு காலத்திற்குப் படகிலேயே இருந்தால் பொழுது எப்படிப் போகும்?

எட்டு பேரும் சரீரத்தை மறந்து இறைவனையே தியானம்‌ செய்ய,

ம்ம்

பளபளக்கும், பெரிய தங்க மீனாக அவர்கள் முன் தோன்றினான் பகவான்.

ம்ம்

அவன் தன் வயிற்றினுள் வேதங்கள் அனைத்தையும் அடக்கியிருந்தான். 

ம்ம்

படகை விடவும் பெரிய மீனான அவன் உருவத்தைக் கண்டு அவர்கள் ஸ்தோத்திரம்‌ செய்தனர்.

ம்ம்

 படகு சிறிது ஆடியது.


திக்கின்றி அலையும் படகைத் தன்‌ மூக்கின் மேலிருந்த கொம்பில் கட்டச்சொன்னான்.

ம்ம்

 அரசனும் அவ்வாறே‌ செய்தான்.

ம்ம்

படகை இழுத்துக்கொண்டு ப்ரளய காலம் முழுவதும் ஜலத்தில் நீந்தினான் மத்ஸ்யாவதாரமான இறைவன்

ம்ம்

அப்போது அவர்களுக்கு வேதத்தையும், உலகம்‌ தோன்றியதும் நிறுவ வேண்டிய விஷயங்களையும் உபதேசம்‌ செய்துகொண்டே வந்தான். 

ம்ம்

இறைவனது சமீபத்தினால்  அவர்களுக்குப் பல்லாயிரம் கோடி ஆண்டுகளுடைய அந்த  ப்ரளய காலம் நொடிப்பொழுதாய் ஓடியது.

..

ஊம் சத்தம் வராததால் திரும்பிப் பார்த்தார் கௌசிகர்.

ராமனின் முக பாவனையைப் பார்த்து 
ஏதாவது சந்தேகம்‌ இருந்தால் கேள் ராமா,

மிகவும் மகிழ்ச்சியுற்ற குழந்தை கேட்டான்

ஸ்வாமி, 
மீனாக வந்த இறைவன் தன் மூக்கில் படகைக் கட்டிக்கொண்டு எப்படி நீந்தியிருப்பான்?
வேதங்களும் கதைகளும் முகத்தால்தானே சொல்ல முடியும்? படகை இழுத்துக்கொண்டு அவன் முன்னால் சென்றால் அவர்களது முகத்தைப் பார்த்து எப்படிக் கதை சொல்லமுடியும்?

பதில் சொல்லி சமாளிக்க முனிவர் என்ன கௌசல்யையா?

இறைவனுக்கே அவன்  கதையைச் சொல்லி மாட்டிக்கொண்டோமே..
திருதிருவென்று விழித்தார் முனிவர்.

அவரைப் பரிதாபமாய்ப்‌ பார்த்த ராமன் சொன்னான்..

ஸ்வாமி ஒருவேளை இப்படி இருக்குமோ?

எப்படி?

இறைவன் பின் பக்கமாகவே நீந்தியிருப்பானோ..

அப்பாடா..
இருக்கும்.. இருக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும்..

அவதாரம் செய்தவனுக்குத் தெரியாதா எப்படி நீந்தினான் என்று.

நான் உனக்கு இன்னொரு கதை சொல்கிறேன் ராமா. இந்தக் கதை போதும் என்றார் விஸ்வாமித்திரர்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37