கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 14
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
மிகவும் சிஷ்டரான ஒரு பெரியவர் இருந்தார். அவர் ஸேது ஸமுத்திரக்கரையில் அனுஷ்டானங்களைச் செய்வதற்காகச் சென்றிருந்தார். பெரியவர்கள் எப்போதும் கையில் தீர்த்த பாத்திரம் வைத்திருப்பார்கள். தீர்த்தம் என்பது கவசம் போன்றது. அவர்களது ஜப சக்தியை சேமித்து வைக்கவும், மற்றவர்களுடைய எண்ண அலைவரிசை தம்மை பாதிக்காமல் இருப்பதற்கும் தீர்த்தம் பயன்படுகிறது.
துரத்தப்படும் ஒரு திருடன் நடுவில் மழையில் நனைந்தாலோ, அல்லது ஒரு குளத்தில் இறங்கிவிட்டுச் சென்றாலோ அவனை மோப்பநாயால் தொடர இயலாமல் போவதை நடைமுறையில் பார்க்கிறோம். ஏனெனில் அவனது அலைவரிசை அந்த நீரோடு அறுபட்டுவிடுகிறது.
இப்போது அந்தப் பெரியவரைப் பார்க்கலாம். அவர் ஸமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதற்காக இறங்கினார். தீர்த்த பாத்திரத்தை கடலில் விட்டுவிடுவோமோ என்று யோசனை வந்தது. அதைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கரையில் வைக்கலாம் என்றால் உடன் யாரையும் அழைத்துவரவில்லை.
சற்று நேரம் யோசித்தார்.
அப்படியே வைத்துவிட்டுப் போனால், ஸ்நானம் செய்து வருவதற்குள் காணாமல் போக வாய்ப்புண்டு. மேலும் நிம்மதியாக ஸ்நானம் செய்யமுடியாது. சொம்பு பத்திரமாக இருக்கிறதா என்ற நினைவு மனத்தை அலைக்கழிக்கும்.
என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு ஒரு எண்ணம் வந்தது.
கிடுகிடுவென்று சமுத்திரக் கரையில் கைகளாலேயே ஒரு சிறு குழி பறித்தார். அதில் சொம்பை வைத்து மூடினார்.
மீண்டும் சந்தேகம். குளித்துவிட்டு வந்தபின் சொம்பு வைத்த இடத்தை இவ்வளவு பெரிய கடற்கரையில் எப்படிக் கண்டுபிடிப்பது?
சொம்பைப் புதைத்த இடத்தில் கோபுரம்போல் மணலைக் குவித்து அதன்மேல் ஒரு சிறு கல்லை வைத்தார். நிம்மதியாக ஸ்நானம் செய்யப்போனார்.
அவர் கோபுரம் கட்டும் சமயம் பார்த்து, இரண்டு பேருந்துகள் நிறைய வடநாட்டினர் வந்திறங்கினர். யாத்திரைக்காக வந்தவர்கள் போலும். அவர்கள் இந்த ஸமுத்திரத்தில் குளிக்கும் முறைமைகள் எதையும் அறிந்தாரில்லை. அவர்களுக்குள் தலைவன் போலிருந்த ஒருவர் யாரேனும் பெரியவர்கள் கரையில் இருக்கின்றனரா, என்று பார்த்தார்.
சோதனையாக நமது பெரியவர் ஒருவர்தான் இருந்தார். அவர் கோபுரத்தைக் கட்டிவிட்டு கடலில் இறங்கினார்.
தன்னைத் தலைவனாக நினைத்துக் கொண்டிருந்தவர்
ஆ, சமஜ் கயா
என்று
எல்லோரையும் வண்டிகளைவிட்டு இறக்கி, அந்த மணற்கோபுரத்தைக் காட்டி, இங்கு இதுதான் சம்பிரதாயம். எல்லோரும் ஆளுக்கொரு மணற்கோபுரத்தக்கட்டி அதன்மேல் கல்லை வைத்துவிட்டு கடலில் சென்று குளிக்கலாம். என்று அவர்களுக்கு அறிவுறுத்தினான்.
அவர்கள் அனைவரும் அப்படியே செய்ய, அதன்பின் வந்தவர்களும் கோபுரம் கட்டத் துவங்கினர்.
நமது பெரியவர் நிம்மதியாக ஸ்நானம் செய்துவிட்டு, வந்து சொம்பை எடுக்க வந்தவர் அப்படியே மயங்கி விழுந்தார். கடற்கரை முழுதும் ஒருவரைப் பார்த்து ஒருவர் என்று கால் வைக்கக்கூட இடமின்றி ஆயிரக்கணக்கான மணற்கோபுரங்கள் முளைத்திருந்தன.
என்னதான் செய்வார் அவர்?
புகழுடையவர்களும், பெரியவர்களும் செய்யும் சாதாரணச் செயல்கள்கூட கேள்வியின்றி பாமர மக்களால் பின்பற்றப்படும். எனவே, அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த கவனத்தோடு செய்யவேண்டும். இல்லையேல் அனர்த்தமாகிவிடும்.
Comments
Post a Comment