கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 15

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே 
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன.

விஸ்வாமித்திர மஹரிஷியைத் தொடர்ந்து ராமனும் இலக்குவனும் காட்டில் நடந்துகொண்டிருக்கும்‌ சமயம். வெகுதூரம் நடைபயணம் என்பதால், பயணத்தில் களைப்பு தெரியாமல் இருக்க மஹரிஷி நிறைய கதைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார்.
பகவானின் அவதாரக் கதைகளைச் சொல்லிக்கொண்டே வந்தவர், கூர்மாவதாரக் கதையைச் சொல்லத் துவங்கினார்.

ராமா,  அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது.

ராமனும் லக்ஷ்மணனும் கோரஸாக உம் கொட்ட அது சங்கீதமாயிற்று.
அவர்களின் குரலினிமையையும், ராகமாக ஊம் ஐ இழுத்த விதமும் கண்டு மிகவும் மகிழ்ந்து மஹரிஷி திரும்பிப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தார்.

இதைக் கேட்பதற்காக எவ்வளவு கதைகள் வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டார்.
மேலும்‌ தொடர்ந்தார்,

சமயத்திற்கு தக்கபடி ஒரு சாரார் வெற்றியை எய்தினர்.

ஊம்

தேவேந்திரனுக்கு அவ்வப்போது மமதை ஏற்பட்டு,

ம்ம்

குருவையோ அல்லது பெரியவர்களையோ அலட்சியம் விடுவான்.

ம்ம்

உடனே தேவர்களது பலமனைத்தும் போய்விடும்

ம்ம்

சமயத்திற்காக காத்திருக்கும் அசுரர்கள்

ம்ம்

சண்டைபோட்டு
ம்ம்

 தேவர்கள் எல்லாரையும் நையப் புடைத்து

ம்ம்

தேவலோகத்தை விட்டு  விரட்டி விட்டுவார்கள்.

ம்ம்

தேவர்கள் போய்
எங்கேயாவது ஒளிந்துகொண்டு

ம்ம்

ஸ்வாமியைப் பூஜை செய்து

ம்ம்

வரம் பெற்று

ம்ம்

பலமும் பெற்று

ம்ம்

மறுபடி வந்து சண்டையிட்டு ஜெயிப்பார்கள்

ம்ம்

மிகவும் சுவாரசியமாகக் கதை போய்க் கொண்டிருந்தது.

அம்ருதம் கடையும்போது நிகழ்ந்த ரகளைகள் அனைத்தையும் மிகவும் ரசிக்கும்படி விவரித்தார் விஸ்வாமித்திரர்.

அவ்ளோ பெரிய மந்தர மலையைப் பாற்கடலில் எப்படிக் கொண்டுவந்து போட்டாங்க?

வழக்கம்போல் அது தேவர்களால் முடியல.

ம்ம்

மஹாவிஷ்ணுவே கருடனை ஏவ, அவர் தன் அலகால் தூக்கிக் கொண்டு வந்து போட்டார்.

ஓ.. அதுசரி, 
 மலையைக் கட்டி கடையற அளவு பெரிய கயிறு இருந்ததா?

புன்முறுவலுடன் சொன்னார் ரிஷி.
இல்லை ராமா, வாசுகிங்கற பாம்பை கயிறா பயன்படுத்தினாங்க..

ம்ம்

ஆனா, கடையறதுக்கு ஆதாரமில்லாம மலை பாற்கடலுக்குள்ள அமிழ்ந்துட்டது.

அடடா, அப்றம் என்ன பண்ணினாங்க?

எப்போதும் அபயம் கொடுக்கற மஹாவிஷ்ணுதான் இருக்காரே, அவர் ஆமையா அவதாரம் எடுத்து

ம்ம்

அடியில் போய், மலையை முதுகில் தாங்கினார்.

ம்ம்

பாம்பின் தலைப்  பக்கம் தேவர்கள் பிடிக்க,

ம்ம்

அசுரர்களுக்கு கோவம் வந்தது.

ஏனாம்?

வால் பக்கம் இழிவானது. நாங்க பிடிக்கமாட்டோம்னு..

ம்ம்

தேவர்களுக்கு காரியம் ஆகணுமே..
ம்ம்

சரி நாங்க வாலைப் பிடிக்கறோம், நீங்க தலையைப் பிடிங்கன்னு விட்டுக்கொடுத்தாங்க.


அதில் ஒரு சூட்சுமம்.

என்ன..

கடையும்போது வாசுகிப் பாம்புக்கு வலிக்குமில்லையா?

ம்ம்

அதனால், அது விஷமா கக்கிட்டே இருந்தது.

ம்ம்

அதெல்லாத்தையும்‌ தலைப்பக்கம் இருந்த அசுரர்கள் தாங்க வேண்டியதாயிடுச்சு

ம்ம்

அப்றமும் கடைய முடியல..

ஏன்

மலையைப் போட்டு இழுத்து கடையற அளவு சக்தி பத்தல..

அப்றம் எப்படி கடைஞ்சாங்க?

பகவானே ரெண்டு உருவம் எடுத்து ரெண்டு பக்கம் பிடிச்சு அவர்களோட சேர்ந்து கடைஞ்சான்


அம்ருதம் வந்ததா?

முதல்ல வந்தது ஆலகால விஷம்..

அதோட வீரியத்தை யாராலும்  தாங்கமுடியல.

அப்றம்?

எல்லாரும் கஷ்டப்பட்டாங்க..

ம்ம்

கைங்கர்யம்னா முதல்ல ஒருத்தர் நிற்பார். பரம வைஷ்ணவர். 

யாரது?

நம்ம பரமேஸ்வரன்தான்

ஓடி வந்து அந்த ஆலகால விஷத்தை விழுங்கிட்டார்

அச்சோ...
அவருக்கு என்னாச்சு?

கவலைப்படாதே ராமா..
அவருடைய பத்னி கௌரி அந்த விஷத்தை அவருடைய கழுத்தில் நிறுத்திட்டாங்க..


அப்றம் மேல கடைய ஆரம்பிச்சாங்க

நிறைய அபூர்வமான பொருள்கள் வந்தன.

ம்ம்

ஒவ்வொன்னையும் ஒவ்வொருத்தர் எடுத்துண்டாங்க..

ம்ம்
 அம்ருதம் வந்ததா இல்லையா?

ஹாஹா
கடைசியா வந்தது ராமா.

அதை அசுரர்கள் பிடுங்கிண்டு ஓட..

ஹா..

திரும்ப பகவானே மோகினி அவதாரம் எடுத்து சமாதானம் பேசி தேவர்களுக்கு கொடுத்தார்


மஹரிஷி,  ஒவ்வொரு சமயத்திலும் பகவான் வந்து வந்து காப்பாத்தறார்.

ஆமா ராமா..

எனக்கு ஒரு சந்தேகம்.. கேட்கவா..

மஹரிஷிக்கு வயிற்றில் புளி கரைத்தது.. சுதாரித்துக் கொண்டு
கேள் ராமா

என்ன இருந்தாலும் மந்தரமலை ரொம்ப பெரிசு.. கடைஞ்சு முடிக்கற வரை முதுகில் தாங்கியிருக்கார். அவருக்கு சிரமமா இருந்திருக்குமா?
அதைப் போக்க ஏதாவது மந்திரம் ஜெபிச்சிருப்பாரா?

மென்று விழுங்கினார் ராஜரிஷி..
வந்து.. ராமா, இதைப் பத்தி அப்றம் சொல்றேன். 
என்று சமாளித்தார்

ஒருவேளை இப்படி இருக்கலாமோ?

சரிதான்.இவனோ பகவான். அவதாரம் செய்ததே இவன்தான். கடலைக் கலக்கியவன் நம்மைக் கேள்வியால் கலக்குகிறான்.
சொல்லு ராமா

மந்தர மலையை கருடனே மூக்கினால் சுமந்து வரமுடியுது. அவருக்கு வேதமே இறக்கைகளா இருக்குது..ஸ்வாமியோ வேதஸ்வரூபன்..
அப்ப ஸ்வாமிக்கு அது ஒரு பெரிய பாரமா, முதுகு சொறிந்துவிடுவது போல் இருந்திருக்கும்னு நினைக்கறேன்..
மேலும் வெளியிலும் ரெண்டு பக்கமும் அவரே நின்னு கடையறார்.
அவருடைய முதுகு ஓடு மலையைவிட கடினமானதா இருந்திருக்கும்..

புராணங்களைப் பற்றி சரியாய் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதும்,  அவர்கள்  கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலிறுப்பதும் பெரியவர்களின் தலையாய கடைமையாகிறது..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37