கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 20
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
நீலகண்ட தீக்ஷிதர் என்னும் மஹாத்மா சிவலீலார்ணவம் என்று பரமேஸ்வரனின் திருவிளையாடல்களை ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார்.
அதில் ஒரு ஸ்லோகத்தில் சிவபெருமானைப் பார்த்து விளையாட்டாக நிந்தா ஸ்துதிபோல் கேட்கிறார்.
பிட்டுக்கு மண் சுமந்த லீலையைச் சொல்லும்போது,
ஹே! பரமேஸ்வரா! நீ ஒரு பக்ஷபாதி. ஏமாற்றுகிறாய்.
எப்படித் தெரியுமா?
அரசன் உன் முதுகில் அடித்தபோது
அனைவர் முதுகிலும் அடி விழுந்தது.
ஆனால், நீ பிட்டைச் சுவைத்தபோது அனைவர் நாவிலும் தித்தித்ததோ?
பிட்டு மட்டும் உனக்கு.
அடி எங்கள் அனைவருக்குமா?
என்று வம்பிழுக்கிறார்.
பரிகளனைத்தும் நரிகளானபோது, மணிவாசகரை அரசன் சிறையிலடைத்தான். பரமேஸ்வரனின் ஒரு கையில் அக்னியும், தலையில் நீரும் இருப்பதால், சிவனடியாரைச் சிறையிலடைத்தற்காக வெகுண்டு வைகையில் வெள்ளத்தைக் கிளப்பிவிட்டார் எம்பெருமான்.
உடையும் நிலையிலிருக்கும் ஆற்றின் கரையை அடைக்க வீட்டுக்கொருவர் வரவேண்டும் என்று உத்தரவிட்டான் மன்னன். தனியொருவளாகப் பிட்டு விற்று வாழும் ஏழை மூதாட்டி என்றும் பாராமல், வந்திக் கிழவியைக் கரையை அடைக்க வரவேண்டும் அல்லது வேலைக்கு ஆள் வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டான் மேற்பார்வை செய்தவன்.
அக்கம் பக்கத்திலுள்ளோரும் சரி, பார்த்துக்கொண்டிருந்தவர்களும் சரி, யாருமே அவளுக்கு உதவிக்கரம் நீட்டாததால், தினமும் அவள் அன்போடு வைக்கும் பிட்டை நிவேதனமாய் ஏற்ற இறைவன் உதவிக்கு வரவேண்டியதாயிற்று. திக்கற்றோர்க்கு தெய்வமே துணையன்றோ?
சற்றும் தயையற்ற அந்த நடவடிக்கையின் காரணமாக மன்னனுக்கு மட்டுமின்றி அதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கும் சேர்த்து அடி விழுந்தது.
சமூகத்தில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்காமலும், தன்னால் இயன்றபோதிலும் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்யாமல் கண்டும் காணாமலும் செல்வோருக்கு அந்தக் கொடுமையின் பாவத்தில் பங்குண்டு என்பதால் அடி மட்டும் அனைவர்க்கும் விழுந்தது போலும்.
Comments
Post a Comment