கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ‌சிந்தனை - 19

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே 
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன.

தானத்தில் சிறந்தது அன்ன தானம். ஏனெனில் சாப்பாடு ஒன்றுதான் மனதிற்குப் போதவில்லை என்றால்கூட வயிறு மறுதலித்துவிடும். அவ்வையாரும் ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய். இருநாளைக்கு ஏலாய்.. வயிறே உன்னோடு வாழ்தலரிதென்கிறார்.

ஸம்ப்ரதாயம் தெரிந்தவர்கள் வாசலில் யாராவது பிச்சை என்று வந்தால் போடவில்லை என்றாலும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். அடுத்தவீட்டில் போய்ப் பார் என்பார்கள். ஏனெனில் அடுத்தவீட்டில் ஏதாவது போட்டால் அந்தப் புண்ணியத்தில் இவர்களுக்கு ஒரு சிறு பங்கு வருமாம்.

தானத்தில் சிறந்தவன் கர்ணன். அவனது புண்ய பலன்களின் காரணமாக சிலகாலம் ஸ்வர்கத்தில் இருந்தான்.

அப்போது அவனுக்குப்‌ பசியெடுத்தது. ஸ்வர்கத்தில் பசி, தாகம் எல்லாம்‌ கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தபோகிலும் தனக்குப் பசியெடுக்கிறதே என்று குழம்பிக்கொண்டிருந்தான்  அவன்.

அப்போது கண்ணன் ஸ்வர்கத்திற்கு ஒரு விஜயம்‌ செய்ய கண்ணனிடம்‌ சந்தேகத்தைக் கேட்கலாம் என்று முடிவு செய்தான். 

கண்ணா, ஸ்வர்கத்தில் பசி, தாகம், மூப்பு எதுவும் கிடையாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

ஆமாம் கர்ணா..

ஆனா, எனக்கு மட்டும் பசிக்குதே. இங்கிருப்பவர்கள் யாருக்கும் பசியிருப்பதுப்போல் தெரியலையே.

மெலிதாய்ச் சிரித்த கண்ணன், 

கர்ணா உன் வலதுகை ஆள்காட்டி விரலை வாயில்  வைத்துக்கொள். பசி போயிடும்
என்றான்.

கர்ணனும் அவ்வாறு செய்ய பசி அடங்கியது. மிகவும் ஆச்சர்யமுற்ற கர்ணன்‌ கேட்டான்,

இதெப்படி கண்ணா, விரலை வாயில் வெச்சதும் பசி போயிடுச்சு.

கண்ணன் பதிலிறுத்தான்

கர்ணா, நல்லா யோசிச்சுப்பார். நீ ஏகப்பட்ட தானங்கள் செய்தாலும் அன்ன தானம் செய்ததில்ல.
நீ எண்ணெய் தேய்ச்சுக் குளிக்க உட்கார்ந்திருக்கும்போது  ஒருத்தர் வந்து ஏதாவது சொல்லி தானம் கேட்பார். நீ எண்ணெய் வைத்திருக்கும் வெள்ளிக் கிண்ணத்தை ஏதும் யோசிக்காமல் அப்படியே கொடுப்ப. அவரும் சந்தோஷமாத்தான் போவார். ஆனா, அரண்மனை வாசலுக்குப் போனதும் அவருக்கு என்ன தோணும் தெரியுமா?

என்ன?

ச்சே .. நான் ஒரு துர்பாக்யசாலின்னு..

ஏன் கண்ணா?

நான் தானம் கேட்டுப் போன சமயம் கர்ணன் கையில் ஒரு வெள்ளிக்கிண்ணம் தானா இருகணும்? ஒரு தங்கச் சொம்பு இருந்திருக்கக்கூடாதான்னு நினைப்பார்.

ஹா..

பொன்னாலும் பொருளாலும் ஒருவரையும் திருப்திப் படுத்தமுடியாது கர்ணா. அன்னதானம் செய்தா உணவு எவ்வளவு சுவையா இருந்தாலும் வயிறு நிரம்பிதும் போதும் என்ற திருப்தி வந்துடும்.


நீ அன்னதானம் செய்யாததால்
உனக்கு ஸ்வர்கம் வந்தாலும்‌ பசிக்கிறது..

ஆனால், விரலை வாயில் வைத்ததும் பசி நின்னதெப்படி?

அதுவா?
நான் யுத்தத்துக்கு முன்னால் பாண்டவர்களுக்காக தூது வந்தபோது, நான் யார் வீட்டுக்கும் போகாம நடந்துண்டிருந்தேன். அப்ப நீ விதுரனின் குடிசையைக்‌காட்டி,
ஓ க்ருஷ்ணா, நீ‌ அந்த தாசி புத்ரன் விதுரன் வீட்டுக்குத்தானே போவ? என்று ஏளனம் பேசின.

நானும் விதுரன் வீட்டில்போய் அன்னிக்கு அவன் குடுத்த கூழையும் வாழைப்‌பழத் தோலையும் சாப்பிட்டேன். நான் பகவானாச்சே. என் வயிற்றில் ஸகல ஜீவராசிகளும் அடக்கம். எனக்கு ஒரு வேளை உணவு சாப்பிடும் வீட்டை நீ இந்த ஆள்காட்டி விரலால காண்பிச்ச. அதனால் சகல ஜீவராசிகளுக்கும் உணவுக்கு வழி காட்டியதுபோல் ஆச்சு. அதனால் அந்த ஆள்காட்டி விரலை வாயில் வெச்சதும் உன் பசி போச்சு
என்றான்.

அன்னதானத்தின் மகிமை அப்படிப்பட்டது.

இப்போதெல்லாம் வீட்டு வாசலில் நாய்கள் ஜாக்கிரதை என்று அறிவிப்புப்பலகை வைக்கிறார்கள். அப்படி பலகை வைத்த வீட்டிற்கு 
பிச்சை கேட்பவர் ஒருவர் வந்தார்.
அங்கே ஒரு நாய் கட்டப் பட்டிருந்தது. அது இவரைப் பார்த்து வள் வள் என்று குலைத்தது. அவர்  நினைத்தார் ,

இதென்ன ஒரு நாய் தானே இருக்கு? ஏன் நாய்கள் ஜாக்கிரதை என்று போர்டு வெச்சிருக்காங்க என்று.

நாயின் குலைப்புச் சத்தம் கேட்டதும் வீட்டினுள்ளிருந்து வந்தவர்,

பொழுது விடிஞ்சா இதே பொழப்பா வந்துடறானுங்க என்று ஆரம்பித்து தொடர்ந்து என்னென்னமோ சொல்லிக் கத்த ஆரம்பித்தார்.

பிச்சை கேட்க வந்தவருக்கு அறிவிப்பு ஏன் பன்மையில் இருக்கிறது என்ற காரணம் விளங்கியது.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37