கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 21

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே 
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன.

அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் புதல்வனுமான பரீக்ஷித் ஒருவன்தான் பாண்டவ வம்சத்தின் ஒரே வாரிசு. 
கண்ணன் அவதாரத்தை முடித்துக்கொண்டு பூமியை விட்டுக் கிளம்பியது முதல் கலியுகம் ஆரம்பித்தது. 

ஆங்காங்கே கலியின் தோஷத்தால் நேர்ந்த கொடுமைகளைப் பார்த்த பரீக்ஷித்,
பூமி முழுவதும் யாத்திரை செய்து கலியின் கொட்டத்தை முழுவதுமாக அடக்கினான்.

ஒரு சமயம் ஒரு காளை மாட்டின் மூன்று கால்களும் வெட்டிவிட்டு அதன் நான்காவது காலையும் வெட்டுவதற்காக கையில் வாளை வைத்துக் கொண்டிருந்த ஒருவனை பரீக்ஷித் சந்தித்தான். காளையின் அருகே ஒரு பசுவும் மிகவும் தீனமாக அழுது கொண்டிருந்தது. பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க நிலையில் இருந்த அம்மனிதன் அரச வேஷத்தில் இருந்தான்.

வாயில்லாத ஜீவன்களைத் துன்புறுத்துவதைக் கண்ட பரீக்ஷித் வெகுண்டு, அம்மனிதனை கொல்லத் துணிய, அவனோ பரீக்ஷித்தின் பாதங்களில் விழுந்து உயிர்ப் பிச்சை வேண்டினான்.

காளை உருவிலிருந்தவர் தர்மதேவன் என்றும், பூமியே பசுவின் உருவத்திலுள்ளதெனவும், அம்மனிதன் கலிபுருஷன் எனவும் அறிந்துகொண்டான் பரீக்ஷித்.

கலியை தன் தேசத்தை விட்டு விலகினால் உயிர்ப்பிச்சை தருகிறேன் என்று மிரட்ட,
கலியோ,

பூமி முழுவதும் உங்கள் ராஜ்ஜியம்தான். நீங்களோ ஸார்வபௌமர். இந்த யுகத்தின் தேவதை நான்.  என்னை என் தர்மத்தைச் செய்ய அனுமதியுங்கள்.

என்று வேண்டினான்.

பரீக்ஷித் சற்று யோசித்துவிட்டு,

ஸாதுக்களுக்கு ஹிம்ஸை நடக்கும் இடம், மது, சூதாட்டம் ஆகியவை நடக்கும் இடங்களில் நீ இருக்கலாம்.

இந்த இடங்கள் எனக்குப் போதாது. இன்னும் சில இடங்களை தயவு செய்து கொடுங்கள்

தகாத முறையில் சேட்க்கப்படும் பணம், ஸ்வர்ணம் ஆகியவற்றில் இருக்கலாம்

சந்தோஷமடைந்த கலி சென்றுவிட்டான்.

இதைச் சொல்லிவிட்டு, குருநாதர் மேலும் சொன்னார்.

இன்னும் சில விஷயங்களை கலிபுருஷன் சொல்ல விட்டுவிட்டானாம். அதை என் கனவில் வந்து சொன்னான்.

எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், டீவி, செல்போன், கம்ப்யூட்டர் போன்றவற்றிலும் நான் நிறைந்து வசிக்கிறேன். அதை பரீக்ஷித்திடம் சொல்ல மறந்துவிட்டேன். என்று கலிபுருஷன் சொல்லிவிட்டுப் போனான்

என்றார்.

நம் நேரத்தைத் திருடுவதில் முதலிடம் வகிக்கும் மேற்சொன்ன பொருள்கள் கலியின் ஆயுதங்கள் என்றால் மிகையாகாது.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37