கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 17
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
விஸ்வாமித்திரரோடு காட்டு வழி நடந்தனர் பாலகர்கள்.
பின்னாளில் பாரதம் முழுதும் நடந்து வந்த கோமானுக்கு இது ஒரு பயிற்சியாயிற்று.
இன்னும் என்னென்ன அவதாரங்கள் பண்ணினார் பகவான்?
தன் செப்பு வாயைத் திறந்து சக்கரவர்த்தித் திருமகன் கேட்டான்.
அடுத்ததா ஹிரண்ய கசிபுவைக் கொன்று ப்ரஹல்லாதன் எனும் மஹா பக்தக்குழந்தையை ரக்ஷிப்பதற்காக அவதாரம் பண்ணினான்
ம்ம்
அதென்ன அவதாரம்?
நரஸிம்மாவதாரம் ராமா..
அப்படின்னா?
சிங்கமுகமும் மனித உடலும் கொண்ட அவதாரம்.
ஆச்சர்யமா இருக்கே. இப்படி ஒரு அவதாரமா?
இப்படிக் கேள்வி கேட்பதைப் பார்த்தால் இவன் மானுடக் குழந்தைதானோ.. பகவத் அவதாரம் இல்லையோ என்று ஓரத்தில் சந்தேகம் எட்டிப் பார்த்தது முனிவருக்கு.
பின்னால் வருகின்ற ராகவனை திரும்பிப் பார்த்தார்.
அவனது ஒளிபொருந்திய திருமுகத்தைப் பார்த்ததும் எல்லா சந்தேகங்களும் பறந்தன. தன் சிறுமதியை நொந்துகொண்டு, தன் வாயிலாக அவன் கதையை அவனே கேட்க ஆசைப்படுகிறானே. இது நமக்கு பெரும் பாக்கியமாயிற்றே. சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா என்று நினைத்தவர்
அவனுக்கேற்றார்போல் அன்னையாகவே மாறி கதை சொல்லத் துவங்கினார்.
ஜெயவிஜயர்கள் சனகாதிகளிடம் அபசாரப்பட்டதையும், அதனால் சாபம் பெற்றதையும், பகவான் வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை அழித்ததையும் நினைவுகூர்ந்து, மேலே தொடர்ந்தார்.
தம்பியை அழிச்ச விழ்ணுவை அழிச்சுட்டு
ம்ம்
அவன் ரத்தத்தில் தம்பிக்கு தர்ப்பணம் பண்ணுவேன்னு சபதம் போட்டுட்டு
ம்ம்
ஹிரண்ய கசிபு தவம் செய்யப்போனான்.
ம்ம்
மஹா உக்ரமான தபஸ்
யாரை நோக்கி?
ப்ரும்மாவை நோக்கி..
ம்ம்
இதுவரை அவனைப்போல் யாரும் தபஸ் பண்ணினதில்லைன்னு ப்ரும்மாவே பாராட்டினார்னா பாத்துக்கோயேன்..
ஓ
இவன் என்ன கேப்பான்னு தெரியும் ப்ரும்மாவுக்கு
ம்ம்
அதனால் வராம எவ்வளவு வருஷங்கள் முடியுமோ அவ்வளவு வருஷங்கள் தள்ளினார்
ம்ம்
அப்றம் வேற வழியில்லாம
தவத்துக்கிரங்கி வந்தார்
ம்ம்
உடம்பெல்லாம் செல்லரிச்சு, எலும்புக்கூடாகப் போய் உயிர் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது
ஓ
அவன் மேல் தன் கமண்டல ஜலத்தைத் தெளிச்சதும்
ம்ம்
அவனுக்கு உடல் சரியாயிட்டது.
ம்ம்
வழக்கம்போல் கேட்டார்.
ம்ம்
என்ன வரம் வேணும்னு..
ம்ம்
மரணமே வரக்கூடாதுன்னு
ஓ
ப்ரும்மா அது முடியாது.. பிறப்புன்னு இருந்தா இறப்பு நிச்சயம். வேற ஏதாவது கேளுன்னார்.
ஓ
அடுத்ததா என்ன கேட்டான் தெரியுமா ராமா?
என்ன கேட்டான் ஸ்வாமி?
யாரை நோக்கி இவ்வளவு தபஸ் பண்ணினானோ அவரைப் பார்த்தே சொன்னான் அந்த அசுரன்
என்ன சொன்னான்?
உங்க சிருஷ்டி எதனாலயும் எனக்கு மரணம் வரக்கூடாதுன்னு
ஹாஹா..
இது ப்ரும்மாவுக்கு அவமானமில்லையா?
அதைப் பற்றி அவனுக்கென்ன?
அவனுக்கு வேலையாகணும். அவ்ளோதான்..
அதுசரி
பாவம் அவனுக்கு தெரியல, மஹாவிஷ்ணு ப்ரும்மாவொட சிருஷ்டியில்ல. ப்ரும்மாவைப் படைச்சதே அவர்தான்னு
ஹாஹா..
இன்னும் கேட்டான்
என்ன
காலை, இரவு, பகல் ஆகிய சமயங்களில் மரணம் கூடாது
ம்ம்
உயிருள்ள பொருளால் கூடாது
உயிரற்ற பொருளாலும் கூடாது
ம்ம்
மனிதன், மிருகம் இவற்றால் கூடாதுன்னு அடுக்கிண்டே போனான்.
பாவம் ப்ரும்மா..
ஆமாம். மஹாவிஷ்ணுவை மனசார ப்ராத்தனை பண்ணினார்.
இவன் என்னென்னமோ சொல்றான். ஒண்ணும் புரியல. நீங்க இருக்க தைரியத்தில் வரத்தைக் குடுக்கறேன்னு
ஓ
அவனை மேலும் முடிக்கவிடாம
தந்தேன்ன்னு சொல்லிட்டு அந்தர்தானமாயிட்டார்.
ம்ம்
இப்ப புது பலம் கிடைச்சுடுத்து அசுரனுக்கு
அடடா..
மூன்று லோகங்களுக்கும் போய் அத்தனை பேரையும் ஜெயிச்சுட்டான்
ஓ
தேவர்கள் அத்தனை பேரையும் அடிமையா கொண்டுவந்து
ம்ம்
தன் அரண்மனை வேலைக்காரர்களாக்கினான்.
அடடா..
நவக்ரகங்களையும் குப்புற படுக்கவெச்சு படிக்கட்டாக்கி அதன் மேலேறிதான் ஆசனத்துக்குப் போவான்
ஹா
எவ்வளவு நாள் இப்படி இருக்க முடியும்?
இருந்தானே..
71 சதுர்யுகங்களுக்கு
ஓ
அவ்வளவு நாள் தேவர்கள் அடிமையா?
சொரணையே இல்லையா..
சொரணை இருந்து என்ன பண்றது?
தப்பிச்சு போக முடியலயே..
ஓ
எப்படி அப்படி அவனால் முடிஞ்சது?
ரொம்ப சுலபமா பண்ணினான் ராமா
யாகங்களால் தேவர்களுக்கு பலம்னு தெரிஞ்சுண்டு அத்தனையும் நிறுத்தினான்.
ஓ
அப்படி பண்ணினாலும் தேவர்களின் பேருக்கு பதிலா அத்தனை இடத்திலும் தன் பேரை போட்டுட்டான்.
ஓ
கோவில்களில் உள்ள மூர்த்தியை எடுத்துட்டு தன் சிலையை வெச்சாச்சு
ஓ
ஹிரண்ய கசிபு ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்ரம் எல்லாம் வந்துடுத்து..
ஓ
ஆக, இவனுடைய மூர்த்திக்கே எல்லா இடத்திலும் பூஜை, ஹோமம், ஹவிர்பாகமும் அவனுக்கே..
ஓ
பலம் ஜாஸ்தியாயிண்டே போச்சு..
ஓ
அப்படி பண்ணினவாளை சௌக்கியமாகவும் வெச்சிருந்தான்.
ஓ
அதனாலயும் ஒரு மன்வந்தரம் முழுக்க அவன் கொட்டத்தை யாரும் அடக்க முடியல.
ம்ம்
பகவான் வேடிக்கை பார்த்துண்டிருந்தாரா..
அவர் ஸாக்ஷி பூதம். ஸர்வ வியாபி.
தன்னை பூஜை பண்ணினா என்ன, தன் கிங்கரனைப் பூஜை பண்ணினா என்னன்னு பேசாம இருந்தார்.
அதுசரி...
இப்படியா இருக்கும்போது
ஹிரண்ய கசிபுவுக்கு
ஒரு குழந்தை பிறந்தது..
ம்ம்
நடந்து நடந்து அதற்குள் உச்சி வேளை வந்தது.
அனுஷ்டானம் முடிச்சிண்டு மீதியை சொல்றேன் ராமா என்று முனிவர் சொல்ல,
ராமனும் லக்ஷ்மணனும் அவருக்கு அனுஷ்டானத்திற்கு வேண்டியதை தயார் செய்யப் போனார் கள்.
ஓடி ஓடி தனக்காக வேலை செய்யும் குழந்தைகளை கண்ணீர் மல்கப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் விஸ்வாமித்திரர்.
Comments
Post a Comment