கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 6
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
கண்ணனின் பாலலீலைகள் எண்ணற்றவை. அவற்றுள் பலவற்றை பல பக்தர்கள் அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள்.
ஒரு சமயம் ராம பக்தரான தியாகராஜரிடம் ஒருவர் சொன்னார்.
கிருஷ்ணன் சிறுவயதில் பல பாலலீலைகள் செய்திருக்கிறான். ஆனால், உங்கள் ராமன் சிறுவயதில் லீலைகளே செய்யவில்லையா? ஒன்று கூட கிடைப்பதில்லையே என்றார்.
அவருக்கு பதில் எதுவும் சொல்லாத தியாகராஜர் உள்ளே ராமனிடம் ஒடினார். பயமோ, கவலையோ, மகிழ்சியோ,
தங்களது அனைத்து உணர்வுகளையும் மஹான்கள் தங்கள் இஷ்ட தெய்வத்திடமே பகிர்ந்து கொள்வர். மீராவின் சரித்திரத்திலும் இதைப் பார்க்கலாம்.
தியாகராஜர் மிகவும் மென்மையான மனமுடையவர். ராமன் பாலலீலை எதுவும் செய்யவில்லையா என்ற கேள்வி அவரைத் துடிக்கச் செய்தது.
இறைவன் என்றாலும் மனித தர்மத்தைப் பின்பற்றி வாழத் துணிந்தவன். இளவயதில் விளையாடாமலா இருந்திருப்பான்? பிறகு ஏன் வால்மீகி பகவான் எதையும் எழுதவில்லை?
வெகுநேரம் வருந்தியவருக்குக் காரணம் புலப்பட்டது.
வால்மீகி ஒரு லட்சம் ஸ்லோகங்களுக்கு மேல் ராமாயணத்தை விவரித்து எழுதினார்.
பின்னர், ராமனின் குணச் செல்வங்களை எடுத்துக் காட்டவே இந்தக் காவியம் என்பதால், அதற்கு மட்டும் முக்கியதுவம் கொடுத்து கதைப்போக்கிற்கு அவசியமானவற்றைத் தேர்ந்தெடுத்து 24000 ஸ்லோகங்களாகச் சுருக்கினார் என்று எங்கோ படித்தது நினைவில் வந்தது. அதனாலேயே ராமாயணத்தில் சொல்லப்படும், பல விஷயங்கள் தற்போது கிடைக்கும் வால்மீகி ராமாயணத்தில் காணப்படுவதில்லை.
சரி, அவர் எழுதியது கிடைக்காவிட்டால் என்ன? நமக்கு ராமன் இருக்கிறானே. அவனையே தியானித்து அவன் செய்த பாலலீலைகள் ஒன்றையாவது அனுபவிக்கலாம்
என்று ராமனிடம் வேண்டினார்.
குழந்தை ராமன், சகோதரர்களோடும், நண்பர்களோடும் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். இன்னும் பாடசாலை செல்லும் பருவம் வரவில்லை.
எல்லோரும் ஒளிந்து விளையாடுவதென்று முடிவானது.
த்வாதச நாமங்களை இங்கி பிங்கி பாங்கி மாதிரி சொல்லி கைகாட்டியதில் ராமனின் பால் தாமோதர நாமம் வந்தது.
ஹே ராமன் ராமன்
ராமா கண்ணை மூடிக்கோ
இரண்டு கைகளால் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு பத்து வரை எண்ணணும். சரியா?
பத்து எண்ணினதும் எங்களைத் தேடி வந்து கண்டுபிடிக்கணும்.
சற்று பெரியவனாய் இருந்த ஒரு சிறுவன் சொன்னான்.
எல்லாவற்றுக்கும் தலையாட்டினான் குழந்தை ராமன்.
இரண்டு கைகளால் கண்களை மூடினால், மூட வந்தால்தானே? எப்படி மூடினாலும், குட்டித் தாமரைகளான கரங்களுக்குள் நீளமாக காது வரை நீண்டிருக்கும் தாமரைக் கண்கள் அடங்கவேயில்லை. எப்படி மூடினாலும் கண்கள் வெளியே தெரிந்தன.
துணியால் கட்டத் தெரிந்திருக்கவில்லை போலும்.
அந்தப் பெரிய சிறுவன் பார்த்தான்,
ராமா, உனக்கு கண்ணை மூடவரலை. நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட. நீ பேசாம ஒளிஞ்சுக்கோ. நானே கண்ணை மூடி எண்ணறேன்.
சரியென்று அதற்கும் தலையாட்டியது குழந்தை.
அந்தச் சிறுவன் எண்ணி முடிப்பதற்குள் எல்லோரும் ஒளிந்துகொண்டனர்.
எண்ணி முடித்துக் கண்ணைத் திறந்த சிறுவன், மூலையில் இருந்த ஒரு மண்டபத்திலிருந்து திடீரென்று நீல ஒளி வருவதைப் பார்த்தான். நேராக அதற்குள் சென்றான். அங்கே ராமன் இருந்தான்.
ராமனின் உடலிலிருந்து ப்ரகாசிக்கும் நீல ஒளி அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
என்னதான் செய்யறது?
நீ இதுக்கும் சரிப்பட்டு வரமாட்டேங்கறியே..
நாங்க விளையாடறோம். நீ ஸாக்ஷியா இரு.
அதிலிருந்து
ராமனை நடுவில் உட்கார வைத்துவிட்டு,
குழந்தைகள் அனைவரும்
சுற்றிச் சுற்றி ஓடி
ஸாக்ஷிராமா லக்ஷ்மணன் எங்க?
ஸாக்ஷி ராமா, முகுந்தனைப் பார்த்தியா?
என்று விளையாட்டுக்கு நடுவில் வந்து வந்து கேட்பார்கள்.
உண்மையிலேயே ஸர்வஸாக்ஷியாய் விளங்கும் பரம்பொருளை சிறுவர்கள் ஸாக்ஷிராமன் என்று செல்லப் பெயரிட்டு அழைத்தனர்.
Comments
Post a Comment