நவ(நீத)ரஸகுண்டு..(25)
ஒருநாள் நந்தன் வீட்டுப் பசு ஒன்று கன்றை ஈன்றது. அத்தருவாயில் இரண்டு கோமுகங்களை தரிசிப்பது பேறு என்பதால் அனைவரும் கொட்டிலில் குழுமினர்.
ப்ரசவித்துக்கொண்டிருந்த பசுவை வணங்கினர்.
புதிதாய்ப் பிறந்தது ஒரு அழகான கன்று.
கண்ணன் எதிரில் இருக்கும்போது அது வேறு யாரைப் பார்க்கும்?
பிறந்ததும் அது முதலில் கண்டது நம் கண்ணனை. அவனையே அம்மா என்று நினைத்துக்கொண்டது.
கண்ணன் விதம்விதமாகப் பெயர் வைப்பதில் ஸமர்த்தன். ஸுமுகி, ஸுகுணா, நந்தினி, வத்ஸன் என்று அவனது கன்றுகளுக்கு அழகழகான பெயர்கள்.
அது காளைக்கன்றானதால் அதற்கு ரிஷபன் என்று பெயர் வைத்திருந்தான்.
எல்லாப் பசு, கன்றுகளுக்குமே கண்ணன்மீது கொள்ளைப் பிரியம். அவை தன் தாய் / கன்றுகளை விட்டு கண்ணனைத்தான் தேடும்.
அதிலும் இந்தப் புதுக் கன்றுக்குட்டி தாய்ப்பசு இருக்கும் திசைக்கே போகாது.
எப்போதும் கண்ணனுடனேயே தான் இருக்கும். இரவு தூங்கும்போது கண்ணனே அதைக் கொண்டுபோய்க் கொட்டிலில் விட்டுவிட்டு வருவான்.
தாய்ப்பசு கன்றை நினைக்கும்போது கொடுக்கும் ஒலி கேட்டு கண்ணனே குட்டிக்கன்றை தாயிடம் அழைத்துப்போவான். அப்போதும் அதற்கு அம்மாவிடம் ஊட்டத் தெரியாது. கண்கொட்டாமல் கண்ணனையே பார்க்கும்.
வேறு வழியின்றி
அதன் வயிறு நிறைவதற்காக கண்ணன் அதன் கழுத்தை அணைத்து தாய்ப் பசுவின் மடியில் தானும் கன்றோடு சேர்ந்து ஊட்டுவான்.
கண்ணன் வந்தால் மட்டுமே அவனுடன் இணைந்து பாலை ஊட்டும் குட்டிக் கன்று.
Comments
Post a Comment