நவ(நீத)ரஸகுண்டு..(23)
கண்ணனும் பலராமனும் விளையாட நிறைய மண்பொம்மைகள் வாங்கிப்போட்டிருந்தான் நந்தன்.
கண்ணனுக்கோ மண்பொம்மைகளைவிட
தன்னைச் சுற்றியுள்ள
உயிருள்ள பொம்மைகளோடு விளையாடவே பிடித்திருந்தது.
மழை வரும்போல் இருந்ததால், யசோதை வெளியில் போய் விளையாடக்கூடாதெனக் கண்டித்துச் சொல்லிவிட்டாள்.
கூடை நிறைய பொம்மைகளைக் கொண்டு வந்து போட்டு இவைகளை வைத்து விளையாடு என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போனாள்.
வேறுவழியின்றி ஆளுக்கொரு பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டு விளையாடத் துவங்கினார்.
யானை என்றால் யானைபோல் நடப்பது, தவளை என்றால் அதைப்போல் தவ்வுதல் என்று பொழுதுபோய்க்கொண்டிருந்தது.
அவர்களிருவரையும் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட கோபி கண்கொட்டாமல் இருவரின் அழகையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
ஒரு குதிரை பொம்மை சற்று தூரத்தில் இருக்க, அதை எழுந்துபோய் எடுக்கச் சோம்பேறித்தனப்பட்ட கண்ணன், அக்கா, அங்க பாருங்க என்று மேலே கைகாட்ட, அவள் திரும்பிய நேரம் பொம்மையைப் பார்த்துக் கையசைக்க மண் குதிரை பொம்மை குதித்து குதித்து அருகே வந்துவிட்டது.
அதைக் கண்ட பலராமன் கலகலவெனச் சிரிக்க கண்ணனோ உஷ் என்று வாயில் விரல்வைத்து சைகை காட்ட,
மேலே என்ன கண்ணா என்று கேட்டுத் திரும்பியவள், பலராமன் எதற்கு சிரிக்கிறான்?
இவன் இடத்தை விட்டசையாமலே ஒரு கணத்தில் பொம்மை எப்படி அருகில் வந்தது? என்றெல்லாம் யோசித்துக் குழம்பிக்கொண்டிருக்கிறாள்.
Comments
Post a Comment