நவ(நீத)ரஸகுண்டு..(14)
ஒருநாள் எதுவுமே பேசாமல் வாசல் திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு சமர்த்தாக உட்கார்ந்திருந்தான் கண்ணன்.
வெகுநேரமாகியும் ஒரு துளி சத்தம் இல்லை.
வழக்கமாக வெண்ணெய் திருடும் போது தான் சத்தம் வராது. எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து ஒரு பக்கம் ஆச்சர்யமுற்றாலும், இன்னொரு பக்கம் ஏதாவது காத்து கருப்பு அடித்திருக்குமோ என்று பயப்படவும் செய்தாள்.
மெதுவாக அருகில் போய்,
என்னடா பண்ற?
சட்டென்று திரும்பி,
அம்மா..
ஒருநாளாவது எந்த வம்புக்கும் போகாம பேசாம இரேன் கண்ணான்னு நீதான சொன்ன..
இப்ப காத்து கருப்பு அடிச்சுதோன்னு பயப்படற?
நான்தான் மா கறுப்பு, நான் யாரையும் அடிக்க மாட்டேம்மா..
காத்து ராட்சசனைக்கூட அன்னிக்கு நான்தான் அழிச்சேன்.
நீ பயப்படாதமா..
திடீரென்று இப்படி எல்லாம் அறிந்தவனாய்ப் பேசுவான் என்று எதிர்பார்க்காத யசோதை, நிஜமாகவே பயந்துபோய் அவனைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு மாட்டுக்கொட்டில் சென்று மாட்டின் குளம்பு மண்ணெடுத்து த்வாதச நாமம் சொல்லி அவனுக்கு உடலெங்கும் வைத்து, கோமிய ஸ்நானம் செய்வித்தாள்.
அம்ம்ம்மா! நான் சமத்தா இருந்தாக்கூட கோமிய ஸ்நானமா?
என்று கண்ணன் அழ ஆரம்பித்தான்.
Comments
Post a Comment